search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்குர்ஆனும் - உலக அமைதியும்
    X

    திருக்குர்ஆனும் - உலக அமைதியும்

    இஸ்லாமிய வரலாற்றில் எதிர் கொள்ளப்பட்ட போர்கள் அனைத்தும் திருக்குர்ஆன் கூறும் வரையறைகளுக்கு உட்பட்டு அமைந்ததாகச் சான்றுகளால் அறிய முடிகின்றது.
    இஸ்லாமியச் சமயம் என்பதில் தனிப்பட்ட ஒருவரின் பெயரோ, குறிப்பிட்ட நாட்டின் பெயரோ, குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரோ என்ற வரையறை இல்லை. இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்குக் கீழ்படிதல், கட்டளை நிறைவேற்றுதல், சாந்தி, சமாதானம் என்று பல்வேறு பொருள்கள் உள்ளன. ஆகவே இஸ்லாமியச் சமயம் என்று சொல்வதைக் காட்டிலும் இஸ்லாமிய மார்க்கம் என்று சொல்லலாம். இம்மார்க்கத்தின் அருமறையாம் திருக்குர்ஆன் உலக அமைதிக்கு எவ்வாறு வழிவகுக்கின்றது என்பதை அறிவுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    இன்று மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் உலகமே அல்லல்பட்டு கொண்டு இருப்பதை நாம் காண முடிகின்றது. எங்கு பார்த்தாலும் வன்முறை, தீவிரவாதம், குண்டுவெடிப்புகள், பிறநாட்டை அபகரித்தல், பிறநாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதித்தல், தன் படை வலிமையால் அடுத்த நாட்டைத் தாக்குதல் போன்ற செயல்கள் சர்வசாதரணமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதனால் உலகில் எங்கு பார்ப்பினும் போர்களும், போர் மேகங்களும் சூழ்ந்து மக்களை பயமுறுத்துகின்றன. விளைவு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு எப்போது எது நடக்குமோ என்ற உணர்வே மேலோங்கி நிற்கின்றது.

    இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் போரினைப் பற்றிக் கூறுமிடத்து தற்காப்புப் போரினையே வலியுறுத்துகின்றது. இஸ்லாமிய வரலாற்றில் எதிர் கொள்ளப்பட்ட போர்கள் அனைத்தும் திருக்குர்ஆன் கூறும் வரையறைகளுக்கு உட்பட்டு அமைந்ததாகச் சான்றுகளால் அறிய முடிகின்றது. நீ எவரையும் தாக்காதே:

    ஆனால் ஒருவன் உன்னைத் தாக்கும் போது நீ அதனை முறியடிக்காமல் இருந்தால், அது குழப்பத்தை அதிகப்படுத்துவதற்குக் காரணமாகவும், ஒழுங்கையும், அமைதியையும் அது கெடுத்து விடுவதாக வும் இருந்தால் நீ அவரது தாக்குதலை எதிர்கொண்டு போரிடு (திருக்குர் ஆன் 2:190) என்று சுட்டிக்காட்டுவது தற்காப்பு போரினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

    அபூஹ்ல் என்பவன் கூட்டத்தோடு பெருமானார் (ஸல்) அவர்களைத் தாக்குவதற்காக வருகின்றான். அவ்வேளையில் செய்தி அறிந்த பெருமானார் (ஸல்) அவர்கள் தம்முடன் இருக்கும் தோழர்களைப் பார்த்து முதலில் நீங்கள் தாக்காதீர்கள் என்று அறிவுறுத்து கின்றார். இந்நிகழ்வினை எம்.ஆர்.எம்.அப்துஸ்-றஹீம்,

    எவரும் என்றன் ஆணையின்றி,

    இந்த கோடு தாண்டியே

    துவங்க வேண்டாம் எதிரி மீது

    முதலில் போரைத் தோழர்காள் !

    அவர்கள் உம்மைத் தாக்க வந்தால் அம்பால் அவரை எதிர் கொள்க (நபிகள் நாயகக் காவியம், ப.354) என்று சுட்டிக் காட்டுகின்றார். ஆக, போரிடுவது என்பது சுயநலத் திற்காகவோ, பேராசைக்காகவோ இருத்தல் கூடாது என்பதைத் திருமறை அறிவுறுத்துகின்றது.

    முனைவர். கி.சையத் ஜாகிர் ஹசன், விலிஷி இணைச் செயலாளர்.
    Next Story
    ×