search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்
    X
    இஸ்லாம்

    தவிர்க்க வேண்டிய பெரும் பாவங்கள்

    வரதட்சணைக்காகவும், வணிகத்திற்காகவும் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் நாளடைவில் வாழ்வியலைத் தொலைத்த நிகழ்வுகளை அன்றாட வாழ்வில் கண்டு கொண்டு தானே இருக்கிறோம்.
    மனித வாழ்க்கையின் தத்துவம் மிகவும் எளிதானது. வாழும் காலத்தில் உலகில் நன்னெறிகளுடன் வாழ்ந்து, மறுமையில் சொர்க்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே மனித வாழ்வின் இலக்கு. அந்த வாழ்க்கையை எப்படி கடந்து செல்கிறோம் என்பதை வைத்தே நம் மறுமை வாழ்க்கை தீர்மானிக்கப்படும்.

    ஐந்து கடமைகளை நிறைவேற்றுகிறோம், பெரும் பாவங்களை அஞ்சிவாழ்கிறோம். அதோடு நின்றுவிட்டதா நம்பிக்கை. இல்லை, மேலும் பல விஷயங்களில் அதிக கவனம் செலுத்தச்சொல்கிறது இஸ்லாம்.

    நாம் வெகு சாதாரணமாக பிறரைப் பற்றி இன்னொருவரிடம் புறம் பேசுகிறோம். அதை தவறென்றே கருதுவதில்லை. அவரிடம் உள்ள குறைகளைத் தான் சொன்னேன். இல்லாதவற்றை நான் சொல்லவில்லை என்று நமது செயலுக்கு நாமே நியாயம் கற்பித்துக்கொள்கிறோம்.

    இருப்பதை பிறரிடம் சொல்வது தான் புறம், இல்லாததை சொல்வது பெரும் பாவம். அது இட்டுக்கட்டுதல் வகையைச் சாரும். எத்தனையோ பாவங்களுக்கான தண்டனைகளைச் திருக்குர்ஆனில் சொன்ன இறைவன், இரண்டு பாவங்களுக்கான தண்டனையை உதாரணங்களோடு ஒப்பிட்டுச் சொல்கையில் மிகவும் கடுமையாக எச்சரிக்கின்றான்.

    “(ஒருவரிடமிருந்து ஒருவராக இப்பொய்யான) அவதூற்றை. நீங்கள் திட்டமாக அறியாத விஷயத்தை உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வாயால் கூறிக்கொண்டு திரிகிறீர்கள். இதனை நீங்கள் இலேசாகவும் மதித்துவிட்டீர்கள். ஆனால், இதுவோ அல்லாஹ்விடத்தில் (பாவங்களில்) மிக்க மகத்தானது”. (திருக்குர் ஆன் 24:15)

    “எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகிறார்களோ அவர்கள், நிச்சயமாக (பெரும்) அவதூற்றையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர்”. (திருக்குர் ஆன் 33:58)

    “எவருடைய குற்றத்தையும் நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றொருவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன் இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதை நீங்கள் வெறுப்பீர்களே. புறம் பேசுவதும் அவ்வாறே. இவ் விஷயங்களில் அல்லாஹ்விற்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பாவத்திலிருந்து விலகுபவர்களை அங்கீகரிப்பவன், கருணையுடையவன் ஆவான்”. (திருக்குர் ஆன் 49:12)

    எந்த பாவத்திற்கும் இதுபோன்ற ஓர் உதாரணத்தை அல்லாஹ் குறிப்பிடவில்லை. பாவத்தை அதிகப்படியாக சுட்டிக்கட்டுவது மட்டுமல்ல, அதை விட்டு விலகி வருபவர்களை அங்கீகரித்து கருணை காட்டுகிறேன் என்றும் ஆறுதல் சொல்கிறான்.

    இதை அடுத்து பெரும் பாவமாக அல்லாஹ் குறிப்பிடுவது “வட்டி”. நாம் அன்றாடம் உழன்று கொண்டிருக்கும் வாழ்வு சக்கரத்தில் வட்டியும் ஒரு முக்கிய அம்சமாக நம்மை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

    வணிகங்களில், தொழில்களில், வங்கிகளில் பொருள் மாற்று முறையில் நாம் விரும்பாமலேயே வட்டியோடு தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. ‘நான் வட்டி வாங்கவில்லை, ஆனால் வட்டி கொடுக்கும் நிலையில் இருக்கிறேன்’ என்று சொல்வதை நாம் அதிகம் கேட்கிறோம். இதனால், நாமும் நம்மை அறியாமல் அந்த வட்டத்திற்குள் வந்து விடுகிறோம். அதன் வெளிப்பாட்டை நாமும் அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகிறோம்.

    காரணம், வட்டி என்பதை அல்லாஹ் எந்த நிலையிலும் அங்கீகரிக்கவில்லை. வட்டி வாங்குவது, கொடுப்பது, அதற்கு சாட்சியாக இருப்பது, அல்லது அதற்கு உதவுவது, அதனை எழுதுவது, அதற்கான கணக்கு வழக்குகளைப் பராமரிப்பது, அந்த நிறுவனங்களில் பணிபுரிவது என்று எல்லா நிலைகளிலும் வட்டி தடை செய்யப்பட்டிருக்கிறது.

    அது மட்டுமல்ல இப் படிப்பட்டவர்களை நான் மறுமையில் எப்படி எழுப்புவேன் என்று குறிப்பிடும் போது அல்லாஹ் இப்படிச்சொல்கிறான்:

    “வட்டி வாங்கி தின்பவர்கள், சைத்தான் பிடித்து பித்தம் கொண்டவர்கள் எழுப்புவது போலன்றி வேறு விதமாக மறுமையில் எழுப்பப்பட மாட்டார்கள்”. (திருக்குர் ஆன் 2:275)

    இறைவன் இன்னுமொரு எச்சரிக்கையும் செய்கின்றான்: “வட்டியை தவிர்த்திடுங்கள். இப்படி நீங்கள் நடக்காவிட்டால் அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் போர் செய்ய தயாராகி விடுங்கள்”. (திருக்குர் ஆன் 2:279)

    அல்லாஹ்வை எதிர்த்து போர் புரிவது என்ற நினைப்பே தவறானது தானே?. அல்லாஹ் நமக்கென்று விதித்த வாழ்வாதாரம் நாம் விரும்பினாலும், இல்லாவிட்டாலும் நம்மை வந்து சேர்ந்தே தீரும். வட்டியை சார்ந்து வாழ்ந்தாலும், தவிர்த்து வாழ்ந்தாலும் வாழ்வாதாரம் வந்தே தீரும் என்ற விதி இருக்கும் போது அதை விலகி வாழ்ந்தால் இம்மைக்கும் மறுமைக்கும் நன்மையாக அமையுமே.

    வரதட்சணைக்காகவும், வணிகத்திற்காகவும் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் நாளடைவில் வாழ்வியலைத் தொலைத்த நிகழ்வுகளை அன்றாட வாழ்வில் கண்டு கொண்டு தானே இருக்கிறோம். இப்படி கொடுமைகள் புரியும் வட்டி வணிகத்தில் நாமும் ஒரு அங்கமாக செயல்பட்டால், அத்தனை பாவங்களிலும் நமக்கும் பங்கு உண்டு தானே?. மறுமையில் இதற்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லாமல் சொர்க்கம் செல்ல முடியுமா?

    புறம் பேசுதல், வட்டி இந்த இரண்டும் பாவங்களில் பெரும் பாவமாகும். ஆனால் நம்மில் பலர் மிகச்சாதாரணமாக இந்த இரண்டையும் கடந்து செல்கிறோம். இதனை எளிதாக தவிர்த்து வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும் போது, நமது வாழ்வாதாரத்திற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளும் போது, சிரமம் இருந்தாலும் அதனை நல்ல வழியில் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம், வாழ்வை வளம் பெறச் செய்வோம்.

    மு.முகமது யூசுப், உடன்குடி.

    Next Story
    ×