search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவ மன்னிப்புக் கோருவது, பிரார்த்தனை புரிவது
    X
    பாவ மன்னிப்புக் கோருவது, பிரார்த்தனை புரிவது

    பாவ மன்னிப்புக் கோருவது, பிரார்த்தனை புரிவது

    பிரார்த்தனை என்பது நாவு சார்ந்த இறை நம்பிக்கை. ஒருவன் பெருமையின் அடிப்படையில் தமக்கு அது தேவை இல்லை என நினைப்பது இறை நம்பிக்கையின் எதிர் வினையான இறை மறுப்பு ஆகும்
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘பாவ மன்னிப்புக் கோருவது’ மற்றும் ‘பிரார்த்தனை புரிவது’ குறித்த தகவல்களை இந்த வாரம் காண்போம்.

    மனந்திருந்தி பாவமன்னிப்புக் கோருவது இறைநம்பிக்கையின் மனம் சார்ந்த ஒரு பகுதி. பிரார்த்தனை புரிவது இறைநம்பிக்கையின் நாவு சார்ந்த ஒரு பகுதி. பிரார்த்தனை நாவிலிருந்து வந்தாலும், அது உள்ளம் உருகி கேட்க வேண்டும்.

    பிரார்த்தனை என்பது பொதுவானது. அதில் குழந்தை வளம், அருள்வளம், பொருள்வளம், உடல் நலம், தொழில் அபிவிருத்தி, மனஅமைதி, உலக அமைதி, மழைவேண்டி, உலக ஒற்றுமை, வெற்றி, தேர்ச்சி, உயர்வு, இன்பம், லாபம் அனைத்தும் அடங்கியிருக்கும். இதன் வரிசையில் பாவமன்னிப்புக் கோருவதும் அடங்கும்.

    முதலில் பாவமன்னிப்பைக் கோருவது குறித்து பார்ப்போம்.

    பாவம் புரிவது மனித இயல்பு. மன்னிப்பது இறைவனின் தயாளம். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள். அதுபோல அவரின் மரபணுவில் வந்த மனிதர்கள் அனைவரும் பாவம் செய்வது மரபுதான். பாவத்தையும், மனிதனையும் பிரிக்கமுடியாது. எனினும் பாவம் செய்ய நேரிடும் போது தடுக்கலாம்.

    ஆதமும், அவரின் மனைவி ஹவ்வா (அலை) ஆகிய இருவரும் இறைவனுக்கு மாறுசெய்த மறுகணமே இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டினார்கள். அவ்வாறே மற்ற நபிமார்களும் பாவமன்னிப்பு வேண்டியதை இறைவன் தமது திருமறையில் பதிவு செய்து, பாவம் புரிந்த மக்களும் இவ்வாறு செயல்பட வேண்டுமென அறிவுறுத்துகின்றான்.

    ஆதம் (அலை)

    ‘ஆதம் (அலை) அவர் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்’. (திருக்குர்ஆன் 20:121)

    ஆதம் (அலை), அன்னை ஹவ்வா ஆகியோரின் பாவமன்னிப்பு: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று (பிரார்த்தித்துக்) கூறினர். (திருக்குர்ஆன் 7:23)

    நூஹ் (அலை)

    “நூஹே, திண்ணமாக அவன் (உம் மகன்) உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீன மான காரியங்களையே செய்து கொண்டி ருந்தான். எதனுடைய உண்மை நிலையை நீர் அறிய மாட்டீரோ அதைப்பற்றி என்னிடம் கேட்காதீர். அறிவிலிகளில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம் என்று நான் உம்மை அறிவுறுத்துகிறேன்.”

    ‘அதற்கு (நூஹ் நபி) “என் இறைவனே, நான் அறியாத விஷயங்களைப் பற்றி (இனி) உன்னிடம் கேட்காது என்னை பாதுகாக்குமாறு நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு நீ கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நானும் நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேன்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 11:46,47)

    இப்ராகீம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை)

    ‘இப்ராகீம் (அலை) தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் இறைவனின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்தபின் அதிலிருந்து விலகிக்கொண்டார். இப்ராகீம் (அலை) பணிவுள்ளவர்; சகிப்புத்தன்மை உள்ளவர்.’ (திருக்குர்ஆன் 9:114)

    ‘(இப்ராகீம் (அலை), இஸ்மாயீல் (அலை); எங்களை மன்னிப்பாயாக. நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன் (என்றனர்)’. (திருக்குர்ஆன் 2:128)

    தாவூத் (அலை), அவரின் மகன் சுலைமான் (அலை)

    ‘அவரைச் சோதித்தோம் என்பதை தாவூத் (அலை) விளங்கிக்கொண்டார். தமது இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார்; பணிந்து விழுந்தார்; திருந்தினார்’ (திருக்குர்ஆன் 38:24)

    ‘சுலைமானை (அலை) நாம் சோதித்தோம். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம். பின்னர் அவர் திருந்தினார். ‘என் இறைவா, என்னை மன்னித்து விடு. எனக்குப்பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு, நீயே வள்ளல்’ என்று கூறினார்’. (திருக்குர்ஆன் 38:34,35)

    மூஸா (அலை)

    ‘அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சார்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா (அலை) ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. ‘இது சைத்தானின் வேலை. அவன் வழிகெடுக்கும் தெளிவான எதிரி’ என்றார். ‘என் இறைவா, எனக்கே நான் தீங்கு இழைத்துவிட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக’ என்றார். இறைவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ (திருக்குர்ஆன் 28:15,16).

    ஸாலிஹ் (அலை)

    ‘ஸமூது கூட்டத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை (அலை) (அனுப்பினோம்). ‘என் சமுதாயமே, இறைவனை வணங்குங்கள். அவனின்றி வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு யாருமில்லை. அவனே உங்களை பூமியிலிருந்து படைத்தான். அதில் உங்களை வசிக்கச் செய்தான். எனவே அவனிடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள். பின்னர், அவனை நோக்கித் திரும்புங்கள், என் இறைவன் அருகில் உள்ளவன்; பதிலளிப்பவன்’ என்றார்’. (திருக்குர்ஆன் 11:61)

    சுஅய்ப் (அலை)

    ‘உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள். என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன் (என்றார்)’. (திருக்குர்ஆன் 11:90)

    யாகூப் (அலை), அவரது மகன் யூசுப் (அலை)

    ‘உங்களுக்காக எனது இறைவனிடம் பின்னர் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (யாகூப்) கூறினார்.’ (திருக்குர்ஆன் 12:98)

    ‘இன்று உங்களைப் பழிவாங்குதல் இல்லை. உங்களை இறைவன் மன்னிப்பான். அவன் கருணையாளர்களில் சிறந்த கருணையாளன்’ என்று (யூசுப்) கூறினார்.’ (திருக்குர்ஆன் 12:92)

    யூனுஸ் (அலை)

    ‘மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். ‘அவர் மீது நாம் சக்தி பெறமாட்டோம்’ என்று நினைத்தார். ‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகிவிட்டேன்’ என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.’ (திருக்குர்ஆன் 21:87,88)

    முஹம்மது நபி (ஸல்)

    ‘என் இறைவா, மன்னித்து அருள்புரிவாயாக, நீ அருள்புரிவோரில் சிறந்தவன்’ என கூறுவீராக’.(திருக்குர்ஆன் 23:118)

    ஈஸா (அலை)

    ‘நீ அவர்களை தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. நீ அவர்களை மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்’ (என ஈஸா (அலை) கூறினார்)’. (திருக்குர்ஆன் 5:118)

    பாவமன்னிப்பு என்பது ஒருவர் தாம் செய்த, பிறர் செய்த பாவங்களுக்காக பாவமன்னிப்பு வேண்டலாம். அல்லது தாம் செய்யாத பட்சத்தில் பிறருக்காகவும் வேண்டலாம். அல்லது பிறர் வேண்டும்படி தூண்டலாம். எதுவாயினும் பிரார்த்தனை அவசியம். பிரார்த்தனையின் மூலமே பாவமன்னிப்புக் கோரலாம்.

    ‘எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் பாவம் செய்யவில்லையானால், இறைவன் உங்களை போக்கிவிட்டு, பாவம் செய்யும் ஒரு சமூகத்தை கொண்டு வருவான். அவர்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அவர்களை இறைவன் மன்னிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘நான் ஒரு நாளைக்கு இறைவனிடம் நூறு தடவை பாவமன்னிப்புக் கோருகிறேன் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அகர்ருல் முஜ்னீ (ரலி), நூல்:முஸ்லிம்)

    பாவமே செய்யாத, முன்பின் பாவம் மன்னிக்கப்பட்ட உத்தம நபி (ஸல்) அவர்களே ஒரு நாளைக்கு 100 தடவை பாவமன்னிப்பு வேண்டி இருக்கும் போது சதாகாலமும் பாவத்தில் புரளும் நாம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா?

    ‘ஆதமுடைய குழந்தைகள் பாவம் செய்பவர்களே, பாவம் செய்பவர்களில் சிறந்தவர்கள் பாவ மீட்சி பெறுபவர்களே என நபி (ஸல்) கூறினார்கள்.’

    இப்போதே இறைவனிடம் பிரார்த்திப்போம். பிரார்த்தனை என்பது வேண்டுதல், உதவி கோருதல், வழிபாடு, வாதிடுதல், அழைத்தல், கூறுதல், புகழ்தல், உயர்அந்தஸ்து, மனிதன் தன் தேவைகளை இறைவனிடம் எடுத்துச் சொல்லி, அவற்றை நிறைவேற்றித் தருமாறு கேட்பதே ஆகும்.

    ‘நபியே, என்னைப்பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால், நான் அருகில் இருக்கிறேன்; பிரார்த்திப்பவர் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே, என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும், என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்.’ (திருக்குர்ஆன் 2:186)

    ‘பிரார்த்தனை என்பது வணக்கத்தின் மூளை ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி)

    ‘இறைவனிடம் பிரார்த்தனையை விட மிகவும் மதிப்பு மிக்க சங்கையான வேறு எந்த செயலும் கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    ‘இறைவனிடம் அவனது அருட்கொடையை கேட்டுப் பெறுங்கள். ஏனெனில், தேவைகளை கேட்பவர் மீது இறைவன் பிரியம் கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி)

    ‘எந்த மனிதன் தமது தேவைகளை இறைவனிடம் கேட்கவில்லையோ, அவன் மீது இறைவன் கோபம் அடைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    ‘இறைவன் சங்கையானவன்; வெட்கம் உள்ளவன். அடியான் இருகரமேந்தி அவனிடம் பிரார்த்தித்தால், அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பி அனுப்புவதைக் கண்டு வெட்கம் அடைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: ஸல்மான் (ரலி), நூல்: திர்மிதி)

    பிரார்த்தனை என்பது நாவு சார்ந்த இறை நம்பிக்கை. ஒருவன் பெருமையின் அடிப்படையில் தமக்கு அது தேவை இல்லை என நினைப்பது இறை நம்பிக்கையின் எதிர் வினையான இறை மறுப்பு ஆகும். பிரார்த்தனை என்பது ஒரு இறைவணக்கம். அதன்வழியாக இறை இணக்கத்தையும், தமது அனைத்து விதமான தேவை களையும் இறைவனிடம் இருகரமேந்தி கேட்டு பெறலாம்.

    கேட்பது நமது கடமை. கொடுப்பதும், எடுப்பதும் அவனது உரிமை. கேட்டது கிடைத்தாலும் நல்லது. கிடைக்காத பட்சத்தில் இவ்வுலகத்திற்கும் சேர்த்து மறுஉலகில் மொத்தமாக இறைவன் தருவது நலவோ நலவு. நாமும், பிறரும், வீடும், நாடும், நலம் பெற, வளம் பெற பிரார்த்திப்போம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    Next Story
    ×