என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா திருப்பலி நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால், திருப்பலியில் பங்கேற்க பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    ஏழுகடல் துறையுடன் எல்லோருக்கும் ஏக அடைக்கலத்தாயாக எழுந்தருளி, அன்போடு ஆட்சி புரியும் திருமந்திர நகர் தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு, அனைத்து மக்களும் வந்து வழிபடுவது வழக்கம்.

    பனிமயமாதா ஆலயத்தில் 438-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் செபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், அருளிக்க ஆசீர் நடந்தது. பல்வேறு தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், மறையுரைகள் நடத்தப்பட்டன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து ஆலய பங்குத்தந்தை குமார்ராஜா மறையுரை நிகழ்த்தினார்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால், திருப்பலியில் பங்கேற்க பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பங்குத்தந்தைகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    வழக்கமாக விழா இறுதிநாள் மாலையில் அன்னையின் சப்பர பவனி நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, அன்னையின் சப்பர பவனி நடைபெறவில்லை.

    பேராலய திருவிழா சிறப்பு திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியூப்பிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை ஏராளமானவர்கள் தங்களது வீடுகளில் இருந்தே கண்டுகளித்து அன்னையை தரிசித்தனர்.

    ஆலயத்துக்கு செல்லும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டு, அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆண்டு கொரோனா ஊடங்கு காரணமாக ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) மற்றும் 8, 9-ந் தேதிகளில் நடக்கிறது.
    நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா ஊடங்கு காரணமாக ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) மற்றும் 8, 9-ந் தேதிகளில் நடக்கிறது.

    இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, பிரார்த்தனை, மாதா நவநாள், 6.30 மணிக்கு திருப்பலி ஆகியவை நடக்கிறது. 8-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, பிரார்த்தனை, மாதா நவநாள், இரவு 7 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, 9-ந் தேதி காலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி ஆகியவை நடைபெறும்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக, அரசு மற்றும் மறைமாவட்ட விதிமுறைப்படி வழிபாட்டு நேரத்தில் ஆலயத்திற்குள் இறைமக்களுக்கு அனுமதி இல்லை. திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் maravankudieruppu.com என்ற இணையதளத்திலும், ZOOM app மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

    ZOOM app பார்க்க கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து மீட்டிங் ஐ.டி. எண்- 744 4916 3165 மற்றும் பாஸ்கோடு- MP-TMTமூலம் இணைய வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர். 
    எகிப்தியரின் அடிமைத்தளையில் இருந்து மீட்டு, வாக்களிக்கப்பட்ட தேசம் நோக்கி இஸ்ரவேலரை வழிநடத்திச் சென்றவர் மோசே. செல்லும் வழியில் சீனாய் மலையில் அவர்களுக்குக் கடவுளிடம் இருந்து பத்து கட்டளைகளைப் பெற்றுத்தந்தார்.
    எகிப்தியரின் அடிமைத்தளையில் இருந்து மீட்டு, வாக்களிக்கப்பட்ட தேசம் நோக்கி இஸ்ரவேலரை வழிநடத்திச் சென்றவர் மோசே. செல்லும் வழியில் சீனாய் மலையில் அவர்களுக்குக் கடவுளிடம் இருந்து பத்து கட்டளைகளைப் பெற்றுத்தந்தார்.

    மோசேவை, தங்களின் குரு மரபில் முதன்மையானவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டவர்கள் யூதர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, பிற்காலத்தில் இயேசுவுக்கு தாங்கள் வழிபடும் பரலோகத் தந்தை சக்தியளிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘மோசேவை விடவும் இயேசு உயர்ந்தவர் இல்லை’ என்ற எண்ணம் அவர்களிடம் இருந்தது. அவர்களது இந்தப் பார்வை, கண்கள் இருந்தும் இயேசு வாக்களிக்கப்பட்ட இறைமகன் என்பதைக் காண முடியாத அவர்களது குருட்டுத் தன்மையைக் காட்டியது. அவர்களது கண்களை திறக்க வேண்டும் என்பதற்காகவே, பிறவியிலேயே பார்வையற்றவனுக்கு பார்வை கிடைக்கச் செய்தார் இயேசு.

    யூதேயாவில் அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது பிறவியிலேயே பார்வையற்றவனாக இருந்த ஒருவனைக் கண்டார். அப்போது இயேசுவின் சீடர்கள், “ரபீ, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா?, இவனுடைய பெற்றோர் செய்த பாவமா?” என்று கேட்டார்கள்.

    அதற்கு இயேசு, “இவன் செய்த பாவமும் இல்லை, இவனுடைய பெற்றோர் செய்த பாவமும் இல்லை; கடவுளாகிய பரலோகத் தந்தையின் செயல்கள் இவன் மூலம் வெளிப்படும்படியே இப்படிப் பிறந்திருக்கிறான். என்னை அனுப்பியவருடைய செயல்களைப் பகல் வேளையிலேயே நாம் செய்ய வேண்டும்; இரவு வேளை வரப்போகிறது, அப்போது எந்த மனிதனாலும் வேலை செய்ய முடியாது. இந்த உலகத்தில் இருக்கும்வரை, நான் இந்த உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன்” என்றார்.

    பிறகு தரையில் குனிந்து தன் கைகளில் களிமண்ணை எடுத்தார். அதைத் தன் உமிழ்நீரால் குழைத்து, பார்வையற்ற மனிதனின் கண்கள் மீது பூசினார். பிறகு அவனிடம் “நீ போய் அருகிலிருக்கும் சீலோவாம் குளத்தில் உன் கண்களைக் கழுவு” என்றார். அவனும் போய் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தான். ஆனால் அவன் வருவதற்குள் இயேசு அங்கிருந்து அகன்று சென்றார். உலகைக் கண்டுகொண்ட மகிழ்ச்சியில் தனக்கு ஒளிகொடுத்த இயேசுவைத் தேடினான்.

    பிறவியிலேயே பார்வையற்றவனாக இருந் தவன் தற்போது பார்வை பெற்றவனாக மாறியதைக் கண்ட யூதர்கள், அவனைப் பரிசேயர்களிடம் அழைத்துச் சென்றார்கள். இயேசு மண்ணைக் குழைத்து அவனுடைய கண்கள் மீது பூசிய நாள் ஓய்வு நாளாக இருந்தது. அதனால் பரிசேயர்களும், “நீ எப்படிப் பார்வை பெற்றாய்” என்று அவனிடம் கேட்டார்கள். அதற்கு அவன், “களிமண்ணை அவர் என் கண்கள் மீது பூசினார்; நான் அதைக் கழுவி, பார்வை பெற் றேன்” என்றான். அவனது சாட்சியைக் கேட்டு கோபம் கொண்ட பரிசேயர்களில் சிலர் அவனைத் துரத்தியடித்தார்கள்.

    ‘பார்வை பெற்றவனைத் துரத்திவிட்டார்கள்’ என்ற செய்தி இயேசுவுக்கு வந்துசேர்ந்தது. பிறகு பார்வை பெற்றவனை இயேசு கண்டபோது, “மனித குமாரன் மீது நீ விசுவாசம் வைக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதன், “ஐயா, அவர் யார் என்று சொல்லுங்கள்; அப்போது நான் விசுவாசம் வைப்பேன்” என்றான். இயேசு அவனிடம், “நீ அவரைப் பார்த்திருக்கிறாய்; உன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் நானே அவர்” என்றார். உடனடியாக அவன், “எஜமானே, நான் விசுவாசம் வைக்கிறேன்” என்று சொல்லி அவர் முன் தலைவணங்கினான்.

    நீங்கள் பார்வை பெற்றவரா, இல்லை யூதர்களைப்போல் பார்வையிருந்தும் காண முடியாதவர்களாய் இருக்கிறீர்களா? ‘மற்றவர்களுக்கு ஒளியாக வாழக் கற்றுக்கொள்வதே சீடத்துவ வாழ்வு’ என்பதை இந்த நிகழ்வு நம் பார்வைக்கு எடுத்து வருகிறது.
    ‘நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையிருக்கிறது’. யோவான் 15:12 அன்பானவர்களே!
    ‘நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையிருக்கிறது’. யோவான் 15:12 அன்பானவர்களே!

    இயேசு கிறிஸ்து இந்த மேற்கண்ட வசனத்தில் நம்மை பிறர்மேல் அன்பாயிருக்க சொன்னது மாத்திரமல்லாமல் அதை கட்டளையாய் கைக்கொள்ள வலியுறுத்துகிறார்.

    இயேசு இவ்வுலகத்தில் வாழ்ந்த போது தன்னலமற்ற தெய்வீக அன்பை மனுக்குலத்திற்கு வெளிப்படுத்தினார். அவருடைய அன்பில் இரக்கமிருந்தது, சாந்தமிருந்தது, பொறுமையிருந்தது, அனைத்திற்கும் மேலாக பிறரை மன்னிக்கும் தன்மை இருந்தது. இறுதியில் அவர் மனுக்குலத்திற்கு தன் ஜீவனையே பலியாகக்கொடுத்தார்.

    ஒருவன் சகல அறிவையும், வரத்தையும் உடையவனாயிருந்து, அன்பு அவனுக்கு இல்லாமல் போனால் சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பான் என்றும், ஒருவன் தனக்கு உண்டான யாவற்றையும் அன்னதானம் பண்ணினாலும், தன் சரீரத்தை சுட்டெரிக்கக்கொடுத்தாலும் அன்பு அவனிடம் இல்லை என்றால்; அதில் அவனுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. மேலும் அன்புக்கு பொறாமை இல்லை, அன்பு தன்னை புகழாது, இறுமாப்பாயிராது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும், அன்பு சகலத்தையும் தாங்கும். சகலத்தையும் நம்பும் என்று பரிசுத்த வேதாகமம் அன்பை பற்றி தெளிவாகச்சொல்லுகிறது.

    மற்றும் 1யோவான் 4:8ல் ‘தேவன் அன்பாகவே இருக்கிறார்’ என்று வாசிக்கிறோம். தேவனுடைய அருமையான குணாதிசயம் அன்பு. ஆகவே இந்த தவக்காலங்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அவர் போல் பிறரில் அன்பாயிருக்க அழைக்கிறார்.

    சகோதரி. ரூத்பிமோராஜ்.கே.ஜி.கார்டன், திருப்பூர்.
    பயப்படும் குழந்தை தன் தந்தையின் கழுத்தை இறுக்கி பிடித்து மார்பில் சாய்ந்து கொள்வதுபோல் மாதா ஒவ்வொரு சோதனையிலும் இறைவனைக் கெட்டியாகப் பிடித்து நம்பிக்கையில் உறுதியடைந்தார்!
    நம்பிக்கை என்னும் காரியத்தில் மிகவும் கடினமான சோதனைக்குள்ளானவர் கண்டிப்பாக கன்னி மரியாதாம். நம்பிக்கை கொண்டோரின் தந்தை என்று அழைக்கப்படும் ஆபிரகாமும் பழைய ஏற்பாட்டு நேர்மையாளரான யோபுவும் மாதாவுக்கு நிகராக மாட்டார்கள்! அவ்வளவு கொடிய சோதனைகளை மாதா ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

    இருந்தும் அவர் நம்பிக்கையில் நிலைத்திருத்தார். உறுதியாக இருந்தார். ஒரு சிறுசோதனை வந்தால்கூட பலர் இறைவனைவிட்டு விலகி விடுகின்றனர். நாற்பது ஆண்டுகள் சோதனைக்குள்ளான போது இஸ்ரயேலர் கூட இறைவனிடமிருந்து விலகினர். அவர்களுள் பலர் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முணுமுணுத்தனர். தங்களுக்கென ஒரு தலைவனை நியமித்துக் கொண்டு எந்த எகிப்திலிருந்து தப்பியோடி வந்தனரோ அதே எகிப்துக்கு மீண்டும் அடிமைகளாகச் செல்ல நினைத்தனர் (எண் 14 : 1 – 4).

    யோபுவின் பிள்ளைகள் அனைவரும் இறந்தனர். அவரது சொத்துக்கள் அனைத்தும் அழிந்தன. யோபுக்கு கொடிய நோய் வந்தது அவரது காயங்களில் புழு அரித்தது. அவரது நண்பர்கள் அவரை விட்டு விலகிச் சென்றனர். ஆனால் அவர் இறைவனைப் போற்றித் துதிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அவரது மனைவி கூட பின்வருமாறு பரிகாசம் செய்தாள்: இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிaர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே? (யோபு 2 : 9). சோதனை வந்தபோது அவள் கடவுளை விட்டு விலகினாள்.

    ஆண்டவர் இயேசு திவ்விய நற்கருணையைப் பற்றி போதித்த போது விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். என்று சொன்ன போது (யோவா 6 : 51), அதுவரை அவரைப் பின்பற்றிய சீடர்களுள் பலர் முணுமுணுத்தனர்.

    பலர் அவரை விட்டு விலகினர் (யோவா 6 : 66). ஆனால் தூய கன்னி மரியாவோ இறைவனை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருந்தார்! பயப்படும் குழந்தை தன் தந்தையின் கழுத்தை இறுக்கி பிடித்து மார்பில் சாய்ந்து கொள்வதுபோல் மாதா ஒவ்வொரு சோதனையிலும் இறைவனைக் கெட்டியாகப் பிடித்து நம்பிக்கையில் உறுதியடைந்தார்! இது தான் மாதாவுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். நாம் சோதனையில் இறைவனிடமிருந்து விலகிச் செல்கிறோம். ஆனால் மாதா இறைவனோடு இணைந்திருந்தார். நம்பியதால் பேறுபெற்றவரான மாதா வழியில் செல்ல இறைவன் நமக்கு அருள்புரிவாராக!
    அன்பை மட்டுமே பொழிந்து மற்றவர்களைத் தீர்ப்பிடாமல் வாழ்ந்தால் மட்டும் எல்லாம் கிடைத்துவிடுமா என்றால், அவை மட்டுமே போதாது என்கிறார் இயேசு.
    தன்னை நாடிவந்து புதுவாழ்க்கை வாழ வழிகேட்டவர்களிடம் இயேசு இவ்வாறு விளக்கினார். “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள், அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள். மற்றவர்களை நீங்கள் எப்படி நியாயந்தீர்க்கிறீர்களோ அப்படித்தான் நீங்களும் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்.

    உங்கள் கண்ணில் இருக்கிற உத்திரத்தைக் கவனிக்காமல் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை ஏன் பார்க்கிறீர்கள்? உங்கள் கண்ணில் மரக்கட்டை இருக்கும்போது நீங்கள் உங்கள் சகோதரனிடம், ‘உன் கண்ணில் இருக்கிற தூசியை எடுக்கட்டுமா’ என்று எப்படிக் கேட்க முடியும்? முதலில் உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையை எடுத்துப்போடுங்கள், அப்போதுதான் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை எப்படி எடுப்பது என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்” என்று கூறி நாம் நீதிபதிகள்போல் யாரையும் தீர்ப்பிடத் தேவையில்லை என்று கூறினார்.

    அன்பை மட்டுமே பொழிந்து மற்றவர்களைத் தீர்ப்பிடாமல் வாழ்ந்தால் மட்டும் எல்லாம் கிடைத்துவிடுமா என்றால், அவை மட்டுமே போதாது என்கிறார் இயேசு. ‘தேடல்’ வாழ்க்கையின் மிக முக்கியச் செயல்பாடு என்பதையும் அவர் எடுத்துக்கூறத் தவறவில்லை.

    “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான், தேடுகிற ஒவ்வொருவனும் கண்டுபிடிக்கிறான், தட்டுகிற ஒவ்வொருவனுக்கும் திறக்கப்படும்.

    உங்களில் யாராவது தன் மகன் ரொட்டியைக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பீர்களா, மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கத் தெரிந்திருக்கும்போது, உங்கள் பரலோகத் தந்தை தன்னிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றை இன்னும் எந்தளவுக்குக் கொடுப்பார் என்பதை யோசித்துப் பாருங்கள்” என்ற இயேசு, சிறந்த சீடத்துவ வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்களைப் பாறையின் மீது வீட்டைக் கட்டிய புத்திமான் என்று கூறினார்.

    “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிறவன் பாறை மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப் போல் இருக்கிறான். பெருமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கரக் காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை.

    ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் இடப்பட்டிருந்தது. அதேநேரம், நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டும் அவற்றின்படி நடக்காதவன் மணல்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியில்லாத மனுஷனைப் போல் இருக்கிறான். பெரு மழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கரக் காற்றடித்து, அந்த வீட்டைத் தாக்கியபோது, அது இடிந்து தரைமட்டமானது” என்று சொன்னார்.

    சிறந்த சீடத்துவ வாழ்வு குறித்து இயேசு இந்த விஷயங்களைச் சொல்லி முடித்தபோது, அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து அங்கே மக்கள் அசந்துபோனார்கள். ஏனென்றால், அறிஞர்களைப் போல் கற்பிக்காமல், கனமான விஷயங்களையும் மக்களின் மொழியில் அவர் பேசியதுதான்.

    நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய திருவிழா நிறைவு நாள் திருப்பலி தக்கலை மறை மாவட்ட ஆயர் தலைமையில் நடந்தது.
    நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் அமைந்துள்ள புனித அல்போன்சா திருத்தலத்தில் புனித அல்போன்சா விண்ணகம் சென்ற ஜூலை 28-ம் நாளை மையமாக கொண்டு 10 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நடைமுறையில் இருக்கும் ஊரடங்கின் காரணமாக மக்கள் ஆலயம் சென்று வழிபட முடியாத சூழல் நிலவுவதால் இத்திருத்தலத் திருவிழாவை 3 நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. முதல் நாள் திருவிழா திருப்பலியை தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவ்வத்துப் பறம்பிலும், 2-ம் நாள் திருப்பலியை நித்திரவிளை ஜெயமாதா மறைவட்ட ஆலய பேரருட்தந்தை ஜோஸ் முட்டத்துப்பாடமும் நிறைவேற்றி சிறப்பித்தனர். திருத்தல திருவிழாவின் இறுதி நாளில் திருப்பலியை தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் நிறைவேற்றியதோடு, உலக மக்கள் அனைவருக்காகவும் ஜெபித்தார்.

    ஊரடங்கின் காரணமாக மக்கள் யாரும் இத்திருத்தலத்திற்கு வர அனுமதி இல்லாததால் தங்கள் இல்லங்களில் இருந்தவாறே திருப்பலியில் பங்குபெற நேரலை, இணையதளம் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த வசதியை பயன்படுத்தி மக்கள் இத்திருவிழா நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல அதிபர் சனில்ஜாண் பந்திசிறக்கல், துணை பங்குதந்தை அஜின்ஜோஸ் மற்றும் பங்கு விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர். 
    மானுட வாழ்வு என்பது இயலாமையில் ஒன்றுமில்லாமையில் துன்புறுகிற மக்களுக்குரியதை பெற்று கொடுப்பதற்கே நமது கைகளில் வழங்கப்பட்டு இருக்கிறது.
    எல்லா வளங்களையும் நிரம்ப பெற்றிருந்த இந்திய நாட்டில் 1960-ல் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. அமெரிக்காவில் இருந்து கப்பலில் கோதுமை வரவில்லை என்றால் மாபெரும் பஞ்சம் ஏற்படும் சூழலே எங்கும் தென்பட்டது. இந்த நெருக்கடி நிலையில் இருந்து நாடு பாதுகாப்பப்பட வேண்டுமெனில் விவசாயத்தை மீண்டும் கொடுத்து உழைப்பதற்கு முன்வந்தவர்களே சுவாமிநாதனும், சுப்பிரமணியனும் ஆவர். இந்தியாவின் உணவு பற்றாக்குறையை போக்க பசுமைப்புரட்சி எனும் புதிய திட்டத்திற்கு வித்திட்டனர். இன்று நமது நாட்டின் பல கோடி டன் தானியம் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவைக்கு அதிகமானவை ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

    தேவையை மையப்படுத்தி அதை செயலாக்க செய்வதற்காக கனவுகளை உருவாக்கி வாழ்வில் ஏற்றங்களை அடையாளம் கண்டனர். இதை போன்று நாமும் இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் சிற்சில முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இறையரசின் கருப்பொருளாம் “ ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர்” என்பதனை முதன்மைப்படுத்துவோம். நாம் வாழ்கிற வீதிகளிலும், தெருக்களிலும் இயலாமையில் இருக்கிற மக்களைத் தேடி செல்வோம். அவர்களுக்குரியதை அவர்கள் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்கி கொடுப்போம்.

    மானுட வாழ்வு என்பது இயலாமையில் ஒன்றுமில்லாமையில் துன்புறுகிற மக்களுக்குரியதை பெற்று கொடுப்பதற்கே நமது கைகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. இயேசுவின் போதனைகளை வாழ்ந்து காட்டுவதற்கு முற்பட்ட ஒவ்வொருவருமே தனது சுயங்களை விட்டுவிட்டு பொது காரியங்களிலே அதிக கவனம் செலுத்தினர். நமது முயற்சிகள், அக்கறைகள் ஏழைகள் நலனில் கவனம் செலுத்தட்டும். ஏழைகளுக்கு கடன் கொடுக்கிறவன் ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறான். ஆண்டவரும் அவர்கள் கடனை திரும்ப அடைத்து விடுவார். நமது கனவுகள், சாமானியர்களுக்கு விடுதலை அளிப்பதாய் உருமாறட்டும். என்றுமே நல்லதை முன்னெடுதது செல்ல இன்றே புறப்படுவோம்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறைமாவட்டம்.
    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல திருவிழா 3 நாட்கள் நடக்கிறது. விழா நிகழ்ச்சிகளை டி.வி., இணையதளம் வாயிலாக பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் புனித அல்போன்சா திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருத்தல திருவிழா 3 நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. இன்று மாலை 6.30 மணிக்கு புனித அல்போன்சா நவநாள் ஜெபம், திருவிழா திருப்பலி நடைபெறும். தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவுவத்துப்பறம்பில் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். நாளை (திங்கட்கிழமை) அருட்பணியாளர் ரோபின்ஸ் குழிகோடில் நவநாள் ஜெபம் செய்கிறார். நித்திரவிளை ஜெயமாதா மறைவட்ட ஆலய அருட்பணியாளர் ஜோஸ் முட்டத்துப்பாடம் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    திருவிழாவின் நிறைவு நாள் புனித அல்போன்சா விண்ணகம் சென்ற 28-ந் தேதி கொண்டாடப்படுகிறது. திருத்தல ஆலய துணைப்பங்குதந்தை அஜின் ஜோஸ் நவநாள் ஜெபம் செய்கிறார். திருவிழா திருப்பலியை தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் நிறைவேற்றுகிறார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் திருத்தலத்திற்கு வர அனுமதி இல்லாத காரணத்தினால் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

    www.alphonsachurch.org, www.catholictamiltv.in, www.youtube.com/St.Alphonsa shrine church Nagarcovil, www.youtube.com/ catholictodaytamil MyTv போன்ற இணையதள முகவரியிலும், AMN Tv184 மற்றும் உள்ளுர் டி.வி. சேனல்களிலும் (சென்னை, மதுரை, திருச்சி) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

    இதன்மூலம் திருவிழா நிகழ்ச்சிகளில் மக்கள் பங்குபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா மற்றும் நிகழ்ச்சி நேரலை தொடர்பான மேலும் விபரங்களுக்கு 94870 84901 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருத்தல அதிபர் சனில் ஜாண் பந்திசிறைகல் தெரிவித்துள்ளார்.
    நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் பிரசித்தி பெற்ற அதிசய பனிமாதா ஆலய 135-ம் ஆண்டு திருவிழா கொரோனா பாதிப்பு காரணமாக எளிமையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்கவில்லை.
    நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் பிரசித்தி பெற்ற அதிசய பனிமாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக, திருவிழாவை எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 135-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மதியம் 12 மணிக்கு கொடியை திருமூலநகர் பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டின் ஆசிர்வதித்தார். தொடர்ந்து அதிசய பனிமாதா திருத்தல தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் கொடி ஏற்றி வைத்தார். இதில் பக்தர்கள் பங்கேற்கவில்லை. பின்னர் திருப்பலி, குணமளிக்கும் வழிபாட்டு திருப்பலி, ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது.

    விழாவில், அருட்தந்தையர்கள் ஜெபநாதன், ஆலந்தலை ரினோ, அழகப்பபுரம் ரூபன், துரைகுடியிருப்பு ஆலிபன், கிழவனேரி ப்ராகிரஸ், ஆனைகுளம் அற்புதம், பிரதீப் மற்றும் ஓ.எல்.எஸ். பள்ளி தாளாளர் வின்சென்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திருவிழா வருகிற 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 8-ம் திருவிழாவான 3-ந்தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நற்கருணை ஆசீரும், 9-ம் திருவிழாவான 4-ந்தேதி பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி ஆண்டகை தலைமையில் நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெரால்ட் ரவி, தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர். கொரோனா காரணமாக, இறைமக்கள் வழிபாடுகளில் கலந்து கொள்ளாமல் வீடுகளில் இருந்தபடியே தொலைக்காட்சி வழியாக வழிபாட்டை காணும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
    தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம், உலகப்புகழ் பெற்ற பேராலயம் ஆகும். சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பினரும் இங்கு வந்து அன்னையை பிரார்த்தனை செய்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி திருவிழா நடந்து வருகிறது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    நேற்று காலையில் ஆலயம் பூட்டப்பட்ட நிலையில் பாதிரியார்கள் மட்டும் பங்கேற்ற பிரார்த்தனை நடந்தது. காலை 7 மணி அளவில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி, ஆலய கொடிமரத்தில் கொடியேற்றினார்.

    அப்போது புறாக்கள் பறக்க விடப்பட்டன. மேலும் வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகம் சார்பில், இழுவை கப்பல் மூலம் ஒலி எழுப்பப்பட்டது.

    பின்னர் ஆலயத்துக்குள் சிறப்பு பிரார்த்தனைகள் தொடங்கின. அப்போது மக்கள் பங்கேற்காத வகையில் ஆலயத்தின் கதவுகள் மூடப்பட்டன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் கொடியேற்று விழா, கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களே இன்றி நடந்தது.

    விழாவையொட்டி பொதுமக்கள் கூடுவதை தடுப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர். அந்த வழியாக வந்த ஒரு சிலரையும் போலீசார் திருப்பி அனுப்பினர்.
    எந்த பிரச்சினையும் இந்த உலகில் நிரந்தரமல்ல. கோடைக்கு பின் வசந்தகாலம் வருவது போல எந்த தோல்விக்கு பிறகும் வெற்றி நம்மை வந்து சேரும்.
    எந்த பிரச்சினையும் இந்த உலகில் நிரந்தரமல்ல. கோடைக்கு பின் வசந்தகாலம் வருவது போல எந்த தோல்விக்கு பிறகும் வெற்றி நம்மை வந்து சேரும். எந்த குறைவுகளுக்கு பின்பும் நிறைவு வரும். நம்மை இதுவரை பாதுகாத்து வந்த தேவன் இனிமேலும் பாதுகாத் துக் கொள்வார் என்ற நம்பிக்கையை நம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இப்படி நம் வாழ்க்கையில் சோர்ந்து போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சற்று தியானித்து பார்ப்போம்.

    தொழிலில் சரிவையே சந்தித்த ஒரு தொழில் அதிபர் மனம் நொந்து போய் கடற்கரைக்கு சென்றார். அப்போது அங்கு இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அந்த குழந்தைகள் சிறிது நேரத்தில் கடற்கரையில் இருந்த மணலில் அழகாக வீடு கட்டி விளையாடி கொண்டிருந்தனர். திடீரென கடலில் இருந்து வந்த அலை அந்த குழந்தைகள் கட்டிய வீட்டை அழித்து விட்டது. இதைப்பார்த்த அந்த தொழில் அதிபர் அந்த குழந்தைகள் இப்போது அழப்போகிறது என்று சற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த குழந்தைகள் அழவில்லை. சிரித்துக்கொண்டே வேறு ஒரு இடத்திற்கு சென்று மீண்டும் மணல் வீட்டை கட்ட ஆரம்பித்தனர். இதைப்பார்த்த தொழில் அதிபருக்கு ஒரே அதிர்ச்சி இப்படி இந்த குழந்தைகள் சோர்ந்து போகாமல் திரும்ப திரும்ப மணல் வீட்டை கட்டி விளையாடுகின்றனர். நாமும் தொழிலில் எவ்வளவு சரிவு வந்தாலும் மனதில் சோர்வு அடையாமல் திரும்ப திரும்ப முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணி சந்தோஷமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதைத்தான் வேதாகமத்தில் நீதிமொழிகள் 24-ம் அதிகாரம் 10-ம் வசனத்தில் ‘ஆபத்து காலத்தில் நீசோர்ந்து போவாயா னால், உன் பெலன் குறுகினது’ என்று எழுதப்பட்டுள்ளது.

    எனவே தொழிலில் சரிவு ஏற்பட்டுள்ளதா? நம்முடைய வாழ்க்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதா? சோர்ந்து போகாதீர்கள். இப்படி சோர்ந்து போனால் நம் வாழ்க்கை குறுகினதாய் மாறி விடும். சோர்ந்து போகிறவர்களுக்கு தேவன் பெலன் கொடுக்கிறார். தேவனே தோல்விகளின் நேரத்தில் பெலன் தந்து வெற்றிக்கான வழியில் என்னை நடத்தும் என்று கேளுங்கள் அப்போது தேவன் பெலன் கொடுக்கிறார். ஆமென்.

    சகோ.கிங்ஸ்லி, ஜோதிநகர், கே.செட்டிபாளையம்.
    ×