search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா திருப்பலி பக்தர்கள் இன்றி நடந்தது
    X
    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா திருப்பலி பக்தர்கள் இன்றி நடந்தது

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா திருப்பலி பக்தர்கள் இன்றி நடந்தது

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா திருப்பலி நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால், திருப்பலியில் பங்கேற்க பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    ஏழுகடல் துறையுடன் எல்லோருக்கும் ஏக அடைக்கலத்தாயாக எழுந்தருளி, அன்போடு ஆட்சி புரியும் திருமந்திர நகர் தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு, அனைத்து மக்களும் வந்து வழிபடுவது வழக்கம்.

    பனிமயமாதா ஆலயத்தில் 438-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் செபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், அருளிக்க ஆசீர் நடந்தது. பல்வேறு தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், மறையுரைகள் நடத்தப்பட்டன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து ஆலய பங்குத்தந்தை குமார்ராஜா மறையுரை நிகழ்த்தினார்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால், திருப்பலியில் பங்கேற்க பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பங்குத்தந்தைகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    வழக்கமாக விழா இறுதிநாள் மாலையில் அன்னையின் சப்பர பவனி நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, அன்னையின் சப்பர பவனி நடைபெறவில்லை.

    பேராலய திருவிழா சிறப்பு திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியூப்பிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை ஏராளமானவர்கள் தங்களது வீடுகளில் இருந்தே கண்டுகளித்து அன்னையை தரிசித்தனர்.

    ஆலயத்துக்கு செல்லும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டு, அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    Next Story
    ×