என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது.
    ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை கிறிஸ்தவர்கள் புனிதவெள்ளியாக கடைபிடிக்கிறார்கள். இதையொட்டி நேற்று ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஏசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் பெரிய சிலுவை பாதை வழிபாடு நேற்று பகலில் நடந்தது.

    அப்போது ஏசு கிறிஸ்து சிலுவையை சுமந்து சென்றபோது நடந்த 14 நிகழ்வுகளை தியானிக்கும் வகையில் 14 தலங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு நிகழ்வாக நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ஏசுவின் திருச்சடங்கு வழிபாடு மற்றும் சிலுவை முத்தம், நற்கருணை ஆசீர் ஆகியவை மாலையில் நடந்தது.

    இதேபோல் ஈரோடு பிரப்ரோடு கிறிஸ்தவ தேவாலயத்தில் புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு கூறிய 7 வார்த்தைகளை கூறி சபை குருவானவர் பிரசங்கம் செய்தார். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    ஈரோடு ரெயில்வே காலனி சி.எஸ்.ஐ. ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) காலை உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர்) சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

    ஈரோடு பி.பி.அக்ரஹாரம் லூர்து மாதா ஆலயத்தின் சார்பில் நேற்று மாலை சிலுவைபாதை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு பங்குத்தந்தை ஜாய் சாலிசெரி தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள், ஏசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் 14 இடங்களில் முழங்காலிட்டு ஜெபம் செய்தனர்.

    மேலும் ஊர்வலத்தின் போது ஏசு கிறிஸ்து வேடம் அணிந்த ஒருவரை படைவீரர்கள் சவுக்கால் அடித்தபடி சென்றனர். ஈரோடு வ.உ.சி. சிறுவர் பூங்காவில் தொடங்கிய ஊர்வலம் பவானி ரோடு வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. இதில் துணை பங்குத்தந்தை நின்டோ கண்ணம்புலா மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டார்கள்.
    இறைமகன் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவுகூரும் புனித வெள்ளியை, கிறிஸ்தவர்கள் நாளை (14-ந்தேதி) கடைபிடிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இயேசுவின் சிலுவை மரணத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை இங்கு காண்போம்.
    இறைமகன் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவுகூரும் புனித வெள்ளியை, கிறிஸ்தவர்கள் நாளை (14-ந்தேதி) கடைபிடிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இயேசுவின் சிலுவை மரணத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை இங்கு காண்போம்.

    ரோமானிய பேரரசின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பாலஸ்தீன் நாட்டில் பிறந்து வளர்ந்தவர் இயேசு கிறிஸ்து. கி.பி.27ஆம் ஆண்டு தமது போதனை பணியைத் தொடங்கிய அவர், தாம் வாழ்ந்த யூத சமூகத்தில் நிலவிய அநீதிகளை சாடினார். கடவுளின் ஆட்சி பற்றி போதித்த அவர், ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க குரல் கொடுத்தார். பாவிகளாக கருதப்பட்ட நோயாளிகளுக்கு சுகம் அளித்து புதுவாழ்வு கொடுத்தார். இதன் காரணமாக இயேசுவை பின்தொடர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    மனித மாண்பை குலைக்கும் சட்ட ஒடுக்குமுறைகளை இயேசு வன்மையாக கண்டித்தார். கடவுளின் பெயரால் மக்களை அடக்கி ஆண்ட யூத சமயத் தலைவர் களுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தார். மக்கள் நடுவே மதிப்பு மிகுந்தவர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட அவர்களின் வெளிவேடத்தை மக்கள் மத்தியில் அம் பலப்படுத்தினார். நல்லவர்களாக நடிக்கும் சமயத் தலைவர்களை மக்கள் பின்பற்ற வேண்டாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். இதை விரும்பாத சமயத் தலைவர்கள் அவரை கொலை செய்ய வழி தேடினர்.

    பாலஸ்தீன் நாடு ரோமானிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்நாட்டு மக்கள் அனைவரையும் யூத சமய குருக்களே நேரடியாக ஆட்சி செய்தனர். யூதர் களின் கோவில் இருந்த எருசலேம் உள்ளடங்கிய யூதேயா பகுதியை சமய குருக்கள் அடங்கிய தலைமைச் சங்கம் என்ற அமைப்பே ஆட்சி செய்தது. அங்கு வரி வசூல் செய்வது மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு மட்டுமே ஆளுநர் பிலாத்துவிடம் இருந்தது.

    யூதர்களின் பாஸ்கா விழாவுக்கு முந் திய வியாழக்கிழமை இரவில் இயேசு கைது செய்யப்பட்டார். பாஸ்கா விழா காலத்திலும் இரவு நேரத்திலும் ஒருவரை கைது செய்யக்கூடாது என்பது யூத சட்டம். மக்களுக்கு தெரியாமல் இரவு நேரத்தில் இயேசுவை கைது செய்வதற்காக, அவரது சீடரான யூதாசுக்கு பணம் கொடுத்து காட்டிக் கொடுக்க செய்த யூத சமயத் தலைவர்களின் செயல் ஒரு மனித உரிமை மீறல். மேலும், இயேசுவிடம் யூத தலைமைச் சங்கம் இரவு நேரத்தில் விசாரணை நடத்தியதும் சட்டத்துக்கு எதிரான மனித உரிமை மீறலே.

    இத்தனை மனித உரிமை மீறல்களை அரங்கேற்றிய தலைமைச் சங்கம், இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு அவர் மீது குற்றம் சுமத்த ஆட்களை தேடியதாக காண்கிறோம். இயேசு தம்மை இறைமகன் என்று கூறியதைக் கொண்டு, அவரை ரோமானியருக்கு எதிரான கலகக்காரராக சித்தரித்தனர் யூத சமயத் தலைவர்கள். சட்டம் ஒழுங்கு ரோமானியர் கையில் இருந்ததால், இயேசுவைக் கொலை செய்வதற்கான அனுமதியைப் பெற ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றனர்.

    இயேசு மீது சுமத்தப்பட்ட குற்றம் பிலாத்துவுக்கு பெரிதாக தெரியவில்லை என்பதால், அவரை விடுவிக்க வழி தேடியதாக பைபிள் கூறுகிறது. அதே நேரத்தில், இயேசுவை விடுதலை செய்தால் சீசருக்கு நண்பராக இருக்க முடியாது என்ற மிரட்டல் மூலம் பிலாத்துவை அடிபணியச் செய்தனர் யூத சமயத் தலைவர்கள். அவர்களது ராஜதந்திரத்தால், குற்றமற்ற இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்வதற்கான தீர்ப்பை பெற்றனர். இது மிகப் பெரிய மனித உரிமை மீறல்.
    சாட்டையால் அடிக்கப்பட்டு, முள்முடி சூட்டப்பட்டு, அவமானச் சின்னமாய் சிலுவை சுமந்து கொண்டு கொல்கொதா குன்றுக்கு சென்றார் இயேசு.



    மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், கொலைக்களம் நோக்கி குறுக்கு கம்பத்தை சுமந்து செல்வார்கள். நேர் கம்பம் கொலைக்களத்தில் முன்னதாகவே நடப்பட்டிருக்கும். இயேசுவுக்கு திடீரென மரண தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் நூற்றி நாற்பது கிலோ எடையுள்ள முழு சிலுவையையும் கொலைக்களத்திற்கு சுமந்து சென்றதாக அறிகிறோம். முன்னதாக சாட்டையடியால் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் இருந்த இயேசுவுக்கு, இந்த சுமை கொடிய வேதனை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஆடையின்றி நிர்வாணமாகவே சிலுவையில் அறையப்பட்டதாக வரலாறு கூறுகிறது. செல்வாக்குள்ள ஒரு சிலருக்கு மட்டும் இடைத்துணி கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாக அறிகிறோம். அவர்களது உடல், கயிறுகள் மற்றும் ஆணிகளால் சிலுவையோடு பிணைக்கப்பட்டன. குறுக்கு கம்பத்தில் கைகளின் மணிக்கட்டு பகுதிகளும், நேர் கம்பத்தில் கணுக்காலுக்கு சற்று மேல் பகுதிகளும் ஆணிகளால் பிணைக்கப்பட்டன. சில நேரங்களில் நேர் கம்பத்தில் தாங்குகட்டை பொருத்தி, இரண்டு கால்களின் பாதங்களையும் ஒரே ஆணியால் சிலுவையில் அறைந்தனர்.
    இயேசு கிறிஸ்து இத்தகைய முறையிலேயே ஆணிகளைக் கொண்டு சிலுவையில் அறையப்பட்டதாக அறிகிறோம்.

    அவர் குற்றவாளி என்று காட்டுவதற்காக கள்வர்கள் நடுவில் அவரை சிலுவையில் அறைந்து தொங்கவிட்டது மனித உரிமை மீறலின் உச்சக்கட்டம்.
    முழு உடலின் எடையையும் சிலுவையில் அறையப்பட்டவர் களின் கைகளே தாங்கும் நிலை உருவாவதால், மூச்சுத்திணறலும், சோர்வும், நீரிழப்பும் ஏற்படுவதுடன் ரத்த ஓட்டமும் பாதிக்கப்படும். நிர்வாண நிலையில், நெஞ்சடைத்து, தாகம் ஏற்பட்டு, சாவுடன் போராடுவதே சிலுவை தண்டனையின் உச்சகட்ட வேதனை.

    அனைத்தையும் அமைதியாக சகித்துக் கொண்ட இறைமகன் இயேசு, “தந்தையே இவர்களை மன்னியும்”என்று கடவுளிடம் வேண்டியதாக காண்கிறோம்.
    இயேசுவுக்கு ரத்த இழப்பும் ஏற்பட்டதால், அவர் சில மணி நேரத்திற்குள் உயிரிழந்ததாக அறிகிறோம். அவரது மரணத்திற்கு பிறகும், அவரது விலாவை ஈட்டியால் குத்தி துளைத்தது மனித உரிமை மீறலே.

    உண்மைக்காகவும், உரிமைக்காகவும் போராடும் ஒவ் வொருவரையும் அடக்கி ஒடுக்க இந்த சமூகம் முயற்சி செய்வதை காண் கிறோம். பிறரிடம் உள்ள உண்மையை ஏற்றுக்கொள்ளவும், பிறருக்கான உரிமையை மதிக்கவும் தேவையான நல்ல மனதை மாந்தர் அனைவருக்கும் ஆண்டவர் இயேசு இந்த நன்னாளில் வழங்குவாராக!

    சிலுவை மரணத்தின் கொடூரம் :

    குற்றவாளிகளை சிலுவையில் அறைந்து கொலை செய்யும் தண்டனை முறை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெர்சியா நாட்டினரால் அறிமுகம் செய்யப் பட்டது. கி.மு. முதல் நூற்றாண்டு முதல் பிற நாட்டு குற்றவாளிகளை தண்டிக்க ரோமானியர்கள் இந்த தண்டனை முறையை பயன்படுத்தினர். நேராக நடப் பட்ட கம்பத்தில் குற்றவாளியை ஆணிகள் அல்லது கயிறுகளால் பிணைத்து தொங்கவிட்டு, மூச்சு திணறடித்து கொல்வதே இந்த தண்டனை முறை.

    தொடக்கத்தில் தவறு செய்யும் அடிமைகளை கொலை செய்யவே இந்த தண்டனை பயன்படுத்தப்பட்டது. பின்னர் கொலை, கொள்ளையில் ஈடுபட் டவர்களும், தேச துரோகிகளும் சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்டனர். இயேசுவும் தேச துரோகி என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே சிலுவையில் அறையப்பட்டார். குற்றவாளிகளை எளிதாக தொங்கவிட வசதியாக நேர் கம்பத்துடன், குறுக்கு கம்பம் ஒன்றை இணைக்கும் வழக்கம் பிற்காலத்தில் உருவானதாக அறிகிறோம்.

     சிலுவையில் அறையப்பட்டு இறந்தவர்களின் உடல்கள், பொதுவாக அதிலேயே தொங்கிக் கொண்டிருக்கும். அவற்றை பறவைகள், எலிகள் போன் றவை கடித்து தின்னும். சிலுவை மரணம் வழங்கப்படும் இடம் எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் நிறைந்த தாகவே காட்சி அளிக்கும். ஒரு சிலரது உறவினர்கள் மட்டுமே அரசு அனுமதியுடன் உடல்களை பெற்று அடக்கம் செய்வார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் யூதர்களின் பாஸ்கா விழாவாக இருந்ததால், அவர் இறந்த உடனே அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி கிடைத்தது.

     - டே.ஆக்னல் ஜோஸ்

    ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நாளான தினத்தை பெரிய வெள்ளிக்கிழமை தினமாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இதையொட்டி நாளை (14-ந் தேதி) கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.
    கிறிஸ்தவர்களின் தெய்வமான ஏசுகிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும் பெரிய வெள்ளி என்றும் அழைக்கின்றனர். இந்த நாளை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.

    கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வரும் லெந்து நாட்களான 40 நாட்கள் முடியும் கடைசி வாரத்தின் வெள்ளிக்கிழமையை புனித வெள்ளிக்கிழமையாக கடைப்பிடிப்பது வழக்கமாக உள்ளது.

    சிலுவையில் அடிக்கப்பட்ட ஏசுகிறிஸ்து மூன்று மணிநேரம் உயிரோடு தொங்க விடப்பட்டார். அதை நினைவுகூரும் வகையில், நாளை அனுஷ்டிக்கப்படும் இந்த தினத்தில் தேவாலயங்களில் மும்மணி நேர சிறப்பு ஆராதனை நடைபெறும். பிரார்த்தனை முடியும் வரை கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பார்கள்.

    ஏசுகிறிஸ்து சிலுவையை தூக்கி கொண்டு செல்லும் போதும், அதில் அறையப்பட்டு கொல்லப்பட்ட நேரத்திலும் 7 திருவசனங்களை கூறினார் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் நாளை ஆராதனையில் பிரசங்கங்கள் செய்யப்படும்.

    சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளில் (வியாழக்கிழமை) ஏசுகிறிஸ்து தனது 12 சீடர்களுடன் இரவு உணவு அருந்தினார். அதை நினைவுகூரும் வகையில், இன்றைய தினத்தை பெரிய வியாழன், அல்லது வியாகுல வியாழன் என்று கடைப்பிடிக்கின்றனர்.

    சிலுவையில் அறையப்பட்ட ஏசுகிறிஸ்து மரணமடைந்து 3-ம் நாள் விடியற்காலையில் உயிர்த்தெழுந்ததாக பைபிள் கூறுகிறது. அந்த தினத்தை ஈஸ்டர் தினம் என்று மகிழ்ச்சிப் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

    அந்த வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமையை (16-ந் தேதி) ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்வார்கள். அன்று விடியற்காலையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும்.
    அஸ்திவாரத்தின் ஆழத்திற்கு ஏற்றபடிதான் கட்டிடத்தின் உயரம் அமைவது போல, தாழ்ச்சி என்ற பண்பிற்கு ஏற்றபடிதான் மனித மாண்பு உயரும்.
    தவக்காலத்தின் நிறைவு புனித வாரத்தின் இறுதி மூன்று நாட்களாகும். அந்த மூன்று நாள் வைபவத்தை இன்று (பெரிய வியாழன்) மாலை தொடங்குகிறோம். இன்றைய வழிபாட்டின் நற்செய்தி வாசகம், இயேசு தம் வாழ்விலும், பணியிலும் கடைபிடித்து போதித்து வந்த தாழ்ச்சி என்ற பண்பினை படம் பிடித்து காட்டுகிறது.

    தாழ்ச்சி என்ற பண்பே தலைசிறந்த பண்பு என்பதை நாம் அறிவோம். தம்மை தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்படுவார்கள் என்றும் சிறு பிள்ளையை போல் தன்னை தாழ்த்தி கொள்கிறவரே விண்ணரசில் மிகப்பெரியவர் என்றும், பெரியவனாயிருக்க விரும்புகிறவன் தொண்டனாகட்டும் என்றும், இயேசு அவ்வப்போது தம் சீடர்களுக்கு போதித்து இருந்தார் என்பதை இயேசுவின் நற்செய்தி நூல்கள் கூறுகின்றன.



    இறுதி இரவு வேளையில் அதே தாழ்ச்சி என்ற பண்பை செயல்வழி பாடமாக தம் சீடர்களுக்கு செய்து காட்டினார். தாமே தமது சீடர்களின் பாதங்களை கழுவி நீங்களும் ஒருவர் ஒருவருடைய பாதங்களை கழுவும் அளவிற்கு தாழ்ந்து பணி செய்யுங்கள் என்று வலியுறுத்தி காண்பித்தார். ஆம், தாழ்ந்து பிறரன்பு பணி செய்வோரே இன்று உலகிற்கு தேவை. புனித அன்னை தெரசா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

    தாழ்ந்து பிறரன்பு பணி செய்வோரை கடவுளும் விரும்புகிறார் என்பதை கீழ்வரும் கூற்று உறுதிப்படுத்துகிறது. “நீரின் ஓட்டமெல்லாம் தாழ்வான நிலம் நோக்கியே; இறைவனின் நாட்டமெல்லாம் தாழ்ந்து பிறரன்பு பணி செய்வோரை நோக்கியே.“ எனவே, அகந்தை, ஆணவம், அகங்காரம், தற்பெருமை போன்ற தீய பண்புகளை வேரறுப்போம். தேவையில் இருப்பவர்களுக்கு தாழ்ந்து பிறரன்பு பணி செய்ய முன்வருவோம். அஸ்திவாரத்தின் ஆழத்திற்கு ஏற்றபடிதான் கட்டிடத்தின் உயரம் அமைவது போல, தாழ்ச்சி என்ற பண்பிற்கு ஏற்றபடிதான் மனித மாண்பு உயரும்.

    அருட்திரு. எஸ்.தேவராஜ், செயலர்,

    அறுவடை நற்செய்தி பணிமையம், ஏ.வெள்ளோடு.
    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையையொட்டி சேலம் குழந்தை ஏசு பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது.
    கிறிஸ்தவர்களின் கடவுளான ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) தவசு காலமாக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தவசு காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக கருதப்படுகிறது. இந்த வாரத்தில் அனைத்து தேவாலயங்களிலும் தினமும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம்.

    சேலம் அரிசிபாளையம் குழந்தை ஏசு பேராலயத்தில் தவசுக்காலம் தொடங்கிய மார்ச் 1-ந் தேதி முதல் தினமும் திருப்பலி, சிறப்பு ஜெபம், சிலுவைபாதை போன்ற பிரார்த்தனைகள் நடந்து வருகிறது. புனித வாரத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது.



    அதன்படி இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு காலடி கழுவுதல் நிகழ்ச்சி பங்குதந்தை கிரகோரிராஜன் தலைமையில் நடக்கிறது. புனித வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு திருச்சிலுவை பாதை, மாலை 3 மணிக்கு சிலுவை மொழிகளில் சிறப்பு வழிபாடு, 6.30 மணிக்கு திருச்சிலுவை ஆராதனை, திருச்சிலுவை முத்தமிடல் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஒப்புரவு, இரவு 11 மணிக்கு திருமுழுக்கு ஆகிய நிகழ்ச்சிகள் ஆயர் சிங்கராயன் தலைமையில் நடக்கிறது.

    ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அன்று காலை 8 மணிக்கு உயிர்ப்பு பெருவிழா திருப்பலியும், காலை 10 மற்றும் மாலை 5, 6 மணிக்கு தமிழ், ஆங்கிலத்தில் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையொட்டி நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகளில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும் படி பங்குதந்தை கிரகோரி ராஜன் தெரிவித்துள்ளார்.
    பாவ சூழல்களிலிருந்து விலகி வாழ்கிறோம் இறுதியாக கடவுளோடு நல்ல உறவை எப்போதும் புதுப்பித்துக் கொள்கிறோம். எனவே ஜெபிப்போம் ஜெபித்துக்கொண்டே இருப்போம்.
    மனிதரோடுப்பேசுவது உரையாடல். கடவுளோடு பேசுவது ஜெபம். கடவுளோடு பேசுவோம் பேசிக்கொண்டே இருப்போம். இதற்காக தனி நேரத்தை ஒதுக்கி ஆலயத்திலே இருந்து ஜெபிப்பதை விட, சிறு சிறு வேலைகளை செய்ய முன்னும் பின்னும் கடவுளுக்காக, சமூக நலனுக்காக செய்கிறோம் என்று சிந்திப்பதே சிறந்த ஜெபமாகும்.

    கடவுளின் பிரசன்னத்தில் எப்போதும் வேலை செய்வதே சிறந்த ஜெபமாகும். நாம் ஜெபிக்கும்போது நாம் மாறுகிறோம். அதாவது நல்லது செய்ய மாறிக்கொண்டே இருக்கிறோம். தவறுகளிலிருந்து விடுபட நமக்கு ஜெபம் பேரூதவியாக இருக்கிறது. ஏசு தாபோர் மலையில் ஜெபித்துக்கொண்டிருந்த போதுதான் உருமாறினார். ஒவ்வொரு அற்புதத்தையும் ஏசு ஆற்றியபோது ஜெபித்தார்.



    இரவிலும் பகலிலும் எந்நேரமும் தனியாக மலைக்கோ அல்லது தொழுகைக் கூடங்களுக்கோ சென்று ஜெபித்ததாக விவிலியம் கூறுகிறது. புனித பவுலடியாரும் “இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் (1 தெச.6:17)” என்கிறார். எனவே ஜெபிப்போம், நமக்காக மட்டுமல்ல பிறருக்காகவும் ஜெபிப்போம். ஜெபத்தின் வழியாக நாம் நம் எதிரிகளையும் வெல்ல முடியும்.

    “உங்களைத்துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் (மத் 5:14)” ஜெபம் ஹீபுரு மொழியில் பலால் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் மற்றவருக்காக மன்றாடு” என்பதுதான். எனவே நாம் ஜெபிக்கும்போது கடவுளிடமிருந்து பல நன்மைகளைப் பெறுகிறோம்.

    எதிரிகளின் வலைகளில் விழாதவாறு பாதுகாக்கப்படுகிறோம். பாவ சூழல்களிலிருந்து விலகி வாழ்கிறோம் இறுதியாக கடவுளோடு நல்ல உறவை எப்போதும் புதுப்பித்துக் கொள்கிறோம். எனவே ஜெபிப்போம் ஜெபித்துக்கொண்டே இருப்போம்.

    - அருட்தந்தை.சி.குழந்தை, காணியிருப்பு.
    இயேசுவின் அன்பிற்கு முடிவே கிடையாது. அந்த அன்பில் அனைவருக்கும் இடம் உண்டு. என் குடும்பம், நட்பு, சமூகம் ஆகிய இவற்றில் ஒருவர், தான் மற்றவரை எப்படி அன்பு செய்கிறேன்? என்று சிந்திக்க வேண்டும்.
    இயேசு பந்தியில் அமர்ந்திருக்கிறார். சீடர்கள் அவரோடு உடனிருக்கின்றனர். இயேசுவின் இரவு உணவு அது. அதுமட்டுமின்றி அவரின் இறுதி உணவும் கூட அதுவே ஆகும். உணவு மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. தாவரங்கள், விலங்குகளுக்கு உணவு, வெறும் உடல் வளர்ச்சிக்காகவே பயன்படுகிறது. ஆனால் மனிதர்களாகிய நமக்கு, உணர்வு வளர்ச்சிக்காக மற்றும் உறவு வளர்ச்சிக்காக உணவு பயன்படுகிறது.

    நம் வாழ்வில், நாம் காணும் மூன்று உறவு நிலைகளை, மூன்று நபர்கள் வழியாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கின்றோம். (யோவா 13:21-33, 36-38) காட்டிக்கொடுக்கும் அன்பு (யூதாசு), மார்பில் சாயும் அன்பு (யோவான்), மறுதலிக்கும் அன்பு (பேதுரு) ஆகும். முதல்வகை உறவுநிலை, யூதாசு மனநிலையை கொண்டிருக்கும். உணவறையில் உடன் அமர்ந்திருந்தாலும் காட்டிக்கொடுக்க, “எனக்கு என்ன தருவீர்கள்?“ என்று விலை பேச துடிக்கும்.

    இரண்டாம் வகை அன்பு, யோவானின் அன்பு. மார்பில் சாய்ந்து இதயத்துடிப்பை கேட்கும் அளவிற்கு நெருக்கமாக இருக்கும். இந்த அன்பு துணிச்சல் மிக்கது. “யார்? என்ன? எது? ஏன்?“ என அனைத்தையும் அது கேள்வி கேட்கும். மூன்றாம் வகை அன்பு, பேதுரு போல மறுதலிக்கும். கொஞ்சம் அன்பு செய்யும். கொஞ்சம் விலகி கொள்ளும். தான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன் எனச்சொல்லும். ஆனால் ஓடிப்போய் விடும்.



    இந்த மூன்று வகை மனிதர்களின் அன்பையும் தாண்டி இயேசுவின் அன்பும் இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அதுதான் “இறுதி வரை செய்யும் அன்பு.“ இயேசுவின் அன்பிற்கு முடிவே கிடையாது. அந்த அன்பில் அனைவருக்கும் இடம் உண்டு.

    ஆகையால்தான் தன்னுடன் உண்பவர்கள் காட்டிக்கொடுத்தல், மார்பு சாய்தல், மறுதலித்தல் என மூன்று உறவு நிலைகளில் இருந்தாலும், அவர்கள் அனைவரையும் சமநிலையோடு இயேசு பார்க்கின்றார். மற்றவர்களின் அன்பால் அவர் மகிழ்ந்து குதிக்கவும் இல்லை. மற்றவர்கள் காட்டிக்கொடுத்தல் மற்றும் மறுதலிப்பால் அவர் சோர்ந்து கவலைப்படவும் இல்லை.

    என் குடும்பம், நட்பு, சமூகம் ஆகிய இவற்றில் ஒருவர், தான் மற்றவரை எப்படி அன்பு செய்கிறேன்? என் உறவு நிலை எப்படி இருக்கிறது? காட்டிக்கொடுக்கிறேனா? இதயத்துடிப்பை கேட்கிறேனா? மறுதலிக்கிறேனா? அல்லது இயேசு போல சமநிலையில் அனைவரையும் தழுவிக்கொள்கிறேனா? என்று சிந்திக்க வேண்டும்.

    அருட்திரு. அ.சாம்சன் ஆரோக்கியதாஸ், உதவி இயக்குனர்,

    திண்டுக்கல் பல்நோக்கு சமூகபணி மையம்.
    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி 13-ந்தேதி நடக்கிறது.
    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா வருகிற 16-ந் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் குருத்தோலை திருநாள் கொண்டாடப்பட்டது. அன்று முதல் ஈஸ்டர் பண்டிகை வரை புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த புனித வாரத்தில் பெரிய வியாழன் முக்கிய நாளாக அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முந்தைய தினம் தன்னுடைய 12 சீடர்களுடன் பாஸ்கா விருந்து (கடைசி இரவு உணவு) உண்டார். அப்போது, அவர் ஒரு துண்டை எடுத்து தனது இடுப்பில் கட்டிக்கொண்டு 12 சீடர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவினார்.


    அப்போது, அவர் ‘நான் செய்தது போல் நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்’ என்று தனது சீடர்களிடம் கூறினார். அதன் நினைவாக வருகிற 13-ந் தேதி பெரிய வியாழன் அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் ஆயர்கள், பங்கு அருட்பணியாளர்கள் இயேசுவின் சீடர்களை குறிக்கும் வகையில் 12 பேர்களின் பாதங்களை கழுவுகிறார்கள்.

    பின்னர், ஆலயங்களில் நள்ளிரவு வரை நற்கருணை ஆராதனை நடைபெறும். பெரிய வியாழன் அன்று மாலை நடைபெறும் திருப்பலியில் ‘உன்னதங்களிலே’ என்ற பாடல் பாடப்படும் போது ஆலய மணிகள் ஒலிக்கப்படும். அதன்பிறகு ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி வரை ஆலய மணிகளோ, இசைக்கருவிகளோ ஒலிக்காது. மீண்டும் இயேசுவின் உயிர்ப்பின் போதுதான் அவை ஒலிக்கும்.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    எருசலேமில் உள்ள பெத்லகேமில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏசுகிறிஸ்து பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இறைப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு ஏசு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதை நினைவுகூரும் வகையில் தற்போது கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாச நிலையை, லெந்து நாட்கள் அல்லது கஸ்தி நாட்கள் அல்லது தவக்காலம் என்ற பெயரில் கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு தவக்காலம் கடந்த மார்ச் 1-ந்தேதி சாம்பல் புதன்கிழமையன்று தொடங்கியது. 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேம் நகரத்துக்குள் கழுதைக் குட்டி மேல் அமர்ந்து வரும்போது, மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து வாழ்த்து பாடல்களைப் பாடினர். இதை நினைவு கூரும் வகையில் குருத்தோலை பவனி நடைபெற்று வருகிறது.

    குருத்தோலை ஞாயிறையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். பேராலய பங்கு தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் ஜோதிநல்லப்பன், ஆரோக்கிய சுந்தரம் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் பல மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக சென்றனர். குருத்தோலை ஞாயிறையொட்டி நேற்று முழுவதும் வேளாங்கண்ணி பேராலயத்தில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
    வெள்ளிக்காசின் வலிமையினாலும், யூதாசின் கயமையினாலும் இறைமகன் ஏசு சாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார். தூய பவுல் அடிகளார் இதையே பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்“ (திமொத்தேயு 6:10) என்று கூறுகிறார்.
    பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி. அதனால்தான் “ஈட்டி எட்டும் மட்டும்தான் பாயும் பணம் பாதாளம் வரை பாயும்“ என்று கூறினார்கள் நம் முன்னோர்கள். பணம் வலிமையானது. அது சமூகத்தை ஏழை பணக்காரன் என்று இரண்டாகப் பிரிக்கும் தன்மை கொண்டது. இந்த உலகம் அதிகாரத்தால் ஆளப்படுகிறது. அந்த அதிகாரம் பணத்தால் பெறப்படுகிறது. பணம் மோசமானது.

    வைத்திருப்பவன் கொண்டாடுகிறான். இல்லாதவன் திண்டாடுகிறான். உயிரே இல்லாத பணம்தான் உயிரை காக்கவும் பயன்படுகிறது, உயிரை எடுக்கவும் பயன்படுகிறது. இன்று மட்டுமல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இதே நிலைதான் இருந்தது என்பதை ஏசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் பெற்ற 30 வெள்ளிக்காசுகள் வெளிப்படுத்துகின்றன.

    ஏசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான யூதாஸ் யூதேயாவின் தென் பகுதியில் இருந்த காரியோத் என்ற ஊரினை சேர்ந்த சீமான் என்பவரின் மகன் (யோவான் 6:71) . திருத்தூதராக வாழ ஏசுவால் அழைக்கப்பட்டவர். (மத் 10:4) பணப்பையை பார்த்துக்கொள்ளும் பணியை பக்குவமாக கைப்பற்றிக்கொண்டவர். அருள்பணியை மறந்து பொருள்பணியை போற்றியவர்.



    பணக்காரர் ஆவதற்கான பாதைகளைத் தேடியவர். இந்நிலையில் தான், தேவாலயத்திற்குள் நடந்துகொண்டிருந்த தன்னுடைய வியாபாரங்களை தடுத்த ஏசுவை கொல்ல திட்டம் தீட்டிய யூத மத குருவின் சூழ்ச்சிக்குள் விழுந்தார். எருசலேம் தேவாலயத்தில் வழிபாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படக்கூடிய ஆலயத்தின் 30 வெள்ளிக்காசுகளை யூதாசுக்கு அள்ளி கொடுத்தார்.

    யூதாசும் 30 வெள்ளிக்காசுகளை பெற்றுக்கொண்டு தன்னை திருப்பணிக்கு அழைத்த ஏசுவை காட்டிக்கொடுத்தார். வெள்ளிக்காசின் வலிமையினாலும், யூதாசின் கயமையினாலும் இறைமகன் ஏசு சாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார். தூய பவுல் அடிகளார் இதையே பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்“ (திமொத்தேயு 6:10) என்று கூறுகிறார்.

    பணம் உள்ளவன் இறந்தால் மறைந்து விடுகிறான். குணம் உள்ளவன் இறந்தும் உலகில் நிலைத்து நிற்கிறான்.

    - அருட்திரு. டி.தேவதாஸ், பங்குத்தந்தை, கும்பகோணம்.
    இயேசு பிரான் நமக்கும் இவ்வுலகிற்கும் போதித்த இவ்வுண்மைகளை ஒருகணம் எண்ணிப் பார்ப்போம். நம்மை மாற்றிக் கொள்வோம். குற்றம் நீங்கி வாழ முற்படுவோம். நற்செய்தியின் உண்மையை உணர்வோம்.
    இயேசு பிரான் இவ்வுலகில் போதித்துக் கொண்டிருந்த காலத்தில், ‘பேதுரு’ என்ற சீடர் அவரை நெருங்கினார்.

    அவரிடம், “ஆண்டவரே! என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்தால், நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” என்று கேட்டார்.

    அதற்கு இயேசு பிரான், “ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழு முறை” என்று கூறினார்.

    இச்செய்தியை வைத்து விண்ணரசை பின்வரும் ஒரு நிகழ்வுக்கு ஒப்பிடலாம் என்று கூறினார். இதோ! அந்த நிகழ்வு.

    அரசர் ஒருவர் தன்னுடைய பணியாளர்களிடம், கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபோது, அவரிடம் ‘பத்தாயிரம் தாலந்து’ கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவனோ பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும், அவன் மனைவி மக்களோடு, அவனுக்குரிய உடைமைகள் அனைத்தையும் விற்று விட்டுப் பணத்தை அடைக்க உத்தரவிட்டார்.

    இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அந்தப் பணியாள், அவர் காலில் விழுந்து பணிந்து, “என்னைப் பொறுத்தருளுங்கள். எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்” என்று கூறினான். அந்தப் பணியாளரின் தலைவர் அவன் மேல் இரக்கம் கொண்டு அவனை விடுவித்தார். அதுமட்டுமல்லாமல் அவனது கடன் முழுமையையும் தள்ளுபடி செய்தார்.

    அந்தப் பணியாள் வெளியே சென்றான். அப்போது அவனிடம் கடன்பட்டிருந்த இன்னொரு பணியாளரைக் கண்டான். அவன் ‘நூறு தெனாரியம்’ அவனிடம் கடன் பட்டிருந்தான். “நீ பட்ட கடனை உடனே எனக்குத் திருப்பிக் கொடு” என்று கூறி அவனுடைய கழுத்தையும் நெரித்தான்.

    உடனே அந்தப் பணியாளன், அவனது காலில் விழுந்தான். “என்னைப் பொறுத்துக் கொள்; நான் திருப்பித் தந்து விடுகிறேன்” என்று கெஞ்சினான். அதற்கு அவன் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக கடனைத் திருப்பித் தரும் வரை சக பணியாளனைச் சிறையில் அடைத்தான்.

    அவனுடன் வேலை செய்யும் பணியாளர்கள் இது குறித்து தலைவரிடம் சென்று முறையிட்டனர். இதனால் தலைவர் அந்தப் பணியாளனை வரவழைத்து, “பொல்லாத போக்கிரியே! நீ என்னை வேண்டிக் கொண்டதால் உன் கடன் முழுவதையும் நான் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டி யதுபோல, நீயும் உன்னுடன் வேலை பார்க்கும் பணியாளரிடம் இரக்கம் காட்டி இருக்க வேண்டும். நீ அதைச் செய்யவில்லை” என்று சினத்துடன் கூறிய அத்தலைவர், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும் வரை அவனைப் பிடித்து ‘வதை’ செய்பவர்களிடம் ஒப்படைத்தார்.

    பிறகு மக்களை நோக்கி, “உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்” என்றார்.



    இயேசு பிரான் கூறிய இந்தச் சம்பவத்தை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பாருங்கள்.

    ‘மத்தேயு’ என்ற நற்செய்தியாளர் கூறிய இந்நற்செய்தியை எண்ணினால் ஓர் உண்மை புலனாகும். தன் கடன் மட்டும் மன்னிக்கப்பட வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் தவறானது.

    இறைவன் நமக்கு மன்னிப்பு அளிக்கத் தயாராக இருக் கிறார். இந்தநிலையில் நாம் பிறரை மன்னிக்கத் தயாராக இருக்கிறோமா? என்ற கேள்வியை நாம் நமக்குள்ளே கேட்டுக் கொள்ள வேண்டும்.

    இந்த உவமையை மீண்டும் ஒருமுறை படித்து விட்டு, நம் சிந்தனையை மேலும் ஒரு படி உயர்த்துவோம். உயர்த்தி நம்மை நாமே சீர்படுத்துவோம்.

    ஒருவரை எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, அவர் கூறும் பதிலை யோசிப்போம். “எழுபது தடவை ஏழுமுறை” என்று கூறுகிறார். அப்படியென்றால் அதன் பொருள் என்ன? கணக்கில் அடங்காத முறை என்று பொருள் கொள்ள வேண்டும். தவறு செய்பவர்களை மன்னிக்கப் பழகி விட்டால் நம்முடைய குற்றங்களை இறைவன் மன்னிப்பார்.

    நற்செய்திகளில் இத்தகைய கருத்துகள் பல இடங்களில் பரவிக் கிடக்கின்றன.

    இதோ ஒரு செய்தி- “நீ உன் காணிக்கையை இறைவனுக்குச் செலுத்த வருகின்ற பொழுது, உன் சகோதரனோடு நீ மனத்தாங்கலாய் இருந்தால், நீ உன் காணிக்கையை பீடத்தில் வைத்து விட்டு, முதலில் உன் சகோதரனோடு உறவாடி விட்டு வந்து உன் காணிக்கையைச் செலுத்து என்கிறார். அப்படி செய்கின்றபொழுதுதான், உன் காணிக்கையை இறைவன் ஏற்கிறார்” என்று கூறுகிறார்.

    உலகில் மனிதராகப் பிறந்தவர்கள், சகோதர மனப்பான்மையோடும், ஒற்றுமையோடும் கூடி வாழ வேண்டும் என்ற கருத்தைத்தான் இயேசு பிரான் முன்மொழிகிறார்.

    ஒற்றுமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், ஒருவரையொருவர் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனநிலை வேண்டும்.

    கடன் முழுவதையும் விடுவித்த தலைவரைப்போல, இறைவன் இருக்கிறபொழுது, பிறர் கடனை மன்னிக்க நாம் ஏன் தயாராக இல்லை.

    இயேசு பிரான் நமக்கும் இவ்வுலகிற்கும் போதித்த இவ்வுண்மைகளை ஒருகணம் எண்ணிப் பார்ப்போம். நம்மை மாற்றிக் கொள்வோம். குற்றம் நீங்கி வாழ முற்படுவோம். நற்செய்தியின் உண்மையை உணர்வோம்.
    மற்றவர்களுக்கு ஒளியாக வாழக் கற்றுக்கொள்வதே சீடத்துவ வாழ்வு என்பதை உணர்த்தும் நிகழ்வை இறைவன் எடுத்துரைத்ததை பார்க்கலாம்.
    எகிப்தியரின் அடிமைத் தளையில்இருந்து மீட்டு, வாக்களிக்கப்பட்ட தேசம் நோக்கி இஸ்ரவேலரை வழி நடத்திச் சென்றவர் மோசே. செல்லும் வழியில் சீனாய் மலையில் அவர்களுக்கு கடவுளிடம்இருந்து பத்துக் கட்டளைகளைப் பெற்றுத்தந்தார்.

    மோசேயைத் தங்களின் குரு மரபில் முதன்மையானவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டவர்கள் யூதர்கள். அவர்களால், பிற்காலத்தில் இயேசுவுக்கு தாங்கள் வழிபடும் பரலோகத் தந்தை சக்தியளிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மோசேயை விடவும் இயேசு உயர்ந்தவர் இல்லை என்ற எண்ணம் அவர்களிடம் இருந்தது. அவர்களது இந்தப் பார்வை கண்கள் இருந்தும் இயேசு வாக்களிக்கப்பட்ட இறைமகன் என்பதைக் காண முடியாத குருட்டுத் தன்மையைக் காட்டியது. அவர்களது கண்களை திறக்க வேண்டும் என்பதற்காகவே பிறவியிலேயே பார்வையற்றவனுக்கு பார்வையைக் கிடைக்கச் செய்தார் இயேசு.

    யூதேயாவில் அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது பிறவியிலேயே பார்வையற்றவனாக இருந்த ஒருவனைக் கண்டார். அப்போது இயேசுவின் சீடர்கள், ‘ரபீ, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா, இவனுடைய பெற்றோர் செய்த பாவமா?’ என்று கேட்டார்கள்.

    அதற்கு இயேசு, ‘இவன் செய்த பாவமும் இல்லை, இவனுடைய பெற்றோர் செய்த பாவமும் இல்லை; கடவுளாகிய பரலோகத் தந்தையின் செயல்கள் இவன் மூலம் வெளிப்படும்படியே இப்படிப் பிறந்திருக்கிறான். என்னை அனுப்பியவருடைய செயல்களைப் பகல் வேளையிலேயே நாம் செய்ய வேண்டும்; இரவு வேளை வரப்போகிறது, அப்போது எந்த மனிதனாலும் வேலை செய்ய முடியாது. நான் இந்த உலகத்தில் இருக்கும்வரை, இந்த உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன்’ என்றார்.

    பிறகு தரையில் குனிந்து, தன் கைகளில் களிமண்ணை எடுத்தார். அதைத் தன் உமிழ்நீரால் குழைத்து, பார்வையற்ற மனிதனின் கண்கள் மீது பூசினார். பிறகு அவனிடம் ‘நீ போய் அருகிலிருக்கும் சீலோவாம் குளத்தில் உன் கண்களைக் கழுவு’ என்றார். அவனும் போய், கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தான். ஆனால் அவன் வருவதற்குள் இயேசு அங்கிருந்து அகன்று சென்றார். உலகைக் கண்டுகொண்ட மகிழ்ச்சியில் அவன் தனக்கு ஒளிகொடுத்த இயேசுவைத் தேடினான்.

    பிறவியிலேயே பார்வையற்றவனாக இருந்தவன், தற்போது பார்வை பெற்றவனாக மாறியதைக் கண்ட யூதர்கள், அவனைப் பரிசேயர்களிடம் அழைத்துச் சென்றார்கள். இயேசு மண்ணைக் குழைத்து அவனுடைய கண்கள் மீது பூசிய நாள் ஓய்வுநாளாக இருந்தது. அதனால் பரிசேயர்களும், ‘நீ எப்படிப் பார்வை பெற்றாய்?’ என்று அவனிடம் கேட்டார்கள். அதற்கு அவன், ‘களிமண்ணை அவர் என் கண்கள் மீது பூசினார்; நான் அதைக் கழுவி, பார்வை பெற்றேன்’ என்றான். அவனது சாட்சியைக் கேட்டு கோபம் கொண்ட பரிசேயர்களில் சிலர், ‘ஓய்வுநாளைக் கடைப்பிடிக் காத இயேசு கடவுளிடமிருந்து வந்தவராக எப்படி இருக்க முடியும்?’ என்றார்கள்.

    பிறவியிலேயே பார்வையற்றவனாக இருந்தவன் இப்போது பார்வை பெற்றிருக்கிறான் என்பதை யூத மதத் தலைவர்கள் நம்பவில்லை. அதனால் அவனுடைய பெற்றோரை அழைத்து, ‘இவன் உங்கள் மகன்தானா? இவன் பார்வை இல்லாமல் பிறந்தான் என்று சொல்கிறீர்கள், இப்போது எப்படிப் பார்வை வந்தது?’ என்று கேட்டார்கள்.

    அவனுடைய பெற்றோர், ‘இவன் எங்களுடைய மகன்தான், பிறவியிலேயே பார்வையற்றவனாகத்தான் இருந்தான். ஆனால், இப்போது இவனுக்கு எப்படிப் பார்வை வந்தது என்று எங்களுக்குத் தெரியாது. யார் இவனுக்குப் பார்வை தந்தது என்றும் எங்களுக்குத் தெரியாது. இவனையே கேளுங்கள். இவன் நன்கு வளர்ந்தவன்தானே. அதனால் இவனே சொல்லட்டும்’ என்றார்கள்.



    யூத மதத் தலைவர்களுக்குப் பயந்தே அவனுடைய பெற்றோர் இப்படிச் சொன்னார்கள்.

    அதனால் பார்வை பெற்றவனை இரண்டாவது முறையாக அழைத்த அவர்கள் ‘உண்மையைச் சொல்லிக் கடவுளை மகிமைப்படுத்து; அந்த ஆள் ஒரு பாவி என்று எங்களுக்குத் தெரியும்’ என்றார்கள். அதற்கு அவன், ‘அவர் ஒரு பாவியா இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும். பார்க்க முடியாமல் இருந்த என்னால் இப்போது பார்க்க முடிகிறது. நான் இந்த உலகைக் காண்கிறேன்’ என்றான்.

    அப்போது அவர்கள் அவனிடம், ‘அவர் உனக்கு என்ன செய்தார்? உனக்கு எப்படிப் பார்வை தந்தார்?’ என்று துருவித் துருவி கேட்டார்கள். அதற்கு அவன், ‘நான் ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள்தான் கேட்கவில்லை. மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? நீங்களும் அவருடைய சீடர் களாக விரும்புகிறீர்களா என்ன?’ என்றான்.

    அப்போது அவர் கள் அவனைச் சபித்து, ‘நீதான் அவருடைய சீடன், நாங்கள் மோசேயுடைய சீடர்கள்; மோசேயிடம் கடவுள் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும்; ஆனால், அந்த ஆள் எங்கிருந்து வந்திருக்கிறார் என்றே எங்களுக்குத் தெரியாது’ என்றார்கள். அதைக்கேட்டு அதிருப்தி அடைந்த பார்வை பெற்றவன், ‘என்ன ஆச்சரியம்..! அவர் எனக்குப் பார்வை தந்திருக்கிறார், அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்று தெரியாது என்கிறீர்களே!’ என்றான்.

    மேலும் அவர்களை நோக்கி, ‘பாவிகளுக்குக் கடவுள் செவிகொடுப்பதில்லை, அவருக்குப் பயந்து அவருடைய சித்தத்தைச் செய்கிறவனுக்கே அவர் செவிகொடுக்கிறார் என்பது நமக்குத் தெரியும். பிறவியிலேயே பார்வையற்றவனுக்கு பார்வை அளித்ததாகச் சரித்திரமே இல்லை. அவர் கடவுளிடமிருந்து வரவில்லையென்றால், அவரால் ஒன்றுமே செய்திருக்க முடியாது’ என்று சொன்னான்.

    பார்வை பெற்றவன் இயேசு குறித்து இவ்வாறு கூறியது அவர்களுக்கு கசப்பாய் இருந்தது. அதற்கு அவர்கள், ‘முழுக்க முழுக்கப் பாவத்தில் பிறந்த நீயா எங்களுக்குச் சொல்லித் தருகிறாய்?’ என்று கூறி, அவனைத் துரத்தியடித்தார்கள்.

    பார்வை பெற்றவனைத் துரத்திவிட்டார்கள் என்ற செய்தி இயேசுவை எட்டியது. பிறகு அவனை இயேசு சந்தித்தபோது, ‘மனித குமாரன் மீது நீ விசுவாசம் வைக்கிறாயா?’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘ஐயா, அவர் யார் என்று சொல்லுங்கள்; அப்போது நான் விசுவாசம் வைப்பேன்’ என்றான்.

    இயேசு அவனிடம், ‘நீ அவரைப் பார்த்திருக்கிறாய்; உன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் நானே அவர்’ என்றார்.

    உடனடியாக அவன், ‘எஜமானே, நான் விசுவாசம் வைக்கிறேன்’ என்று சொல்லி அவர்முன் தலைவணங்கினான்.

    நீங்கள் பார்வை பெற்றவரா? இல்லை யூதர்களைப்போல் பார்வையிருந்தும் காண முடியாதவர்களாய் இருக்கிறீர்களா? மற்றவர்களுக்கு ஒளியாக வாழக் கற்றுக்கொள்வதே சீடத்துவ வாழ்வு என்பதை இந்த நிகழ்வு எடுத்துரைக்கிறது.

    -மிராண்டாஸ், சென்னை.
    ×