என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    நாகர்கோவில், இளங்கடை புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில், இளங்கடை புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி வட்டார முதன்மை அருட்பணியாளர் ஜோசப் ரொமால்ட் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜெகன் மறையுரை ஆற்றுகிறார்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை நடக்கிறது. வருகிற 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மாலையில் நற்செய்தி கூட்டங்கள் நடைபெறுகிறது.

    வருகிற 10-ந் தேதி காலை 7 மணிக்கு, முதல் திருவிருந்து திருப்பலியும், 16-ந் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலியும், இரவு 9 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது.

    திருவிழாவின் நிறைவு நாளான 17-ந் தேதி காலை 7 மணிக்கு கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கல் ஏஞ்சலூஸ் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழாவும் நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் ராஜ் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர். 
    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 13-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 13-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையை தொடர்ந்து பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் கொடி ஏற்றுகிறார். பின்னர் தூத்துக்குடி மறைமாவட்ட செயலாளர் நார்பட் தாமஸ் மறையுரை ஆற்றுகிறார். தொடர்ந்து நற்கருணை ஆசீர் நடக்கிறது.

    வருகிற திருவிழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கும், காலை 6.30 மணிக்கும் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    வருகிற 11 - ந் தேதி மாலை 6.30 மணிக்கு வடக்கன்குளம் வட்டார முதன்மை அருட்பணியாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் நற்கருணை பவனி நடக்கிறது. நிகழ்ச்சியில், அருட்பணியாளர் ஜோசப் இசிதோர் மறையுரை ஆற்றுகிறார்.

    12-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் கிருபாகரன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனையும், இரவு 9.30 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது.

    13 -ந் தேதி அதிகாலை 5 மணிக்கு செட்டிவிளை பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறும். காலை 7 மணிக்கு அழகப்பபுரம் குருக்கள் கலந்து கொள்ளும் திருப்பலியும், மதியம் 2 மணிக்கு தேர் பவனியும், இரவு 7.30 மணிக்கு தேரில் நற்கருணை ஆசீர் ஆகியவையும் நடக்கிறது

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை மைக்கிள் ராயப்பன், அருட்பணியாளர் சூசை மணி, பங்குப்பேரவை துணைத்தலைவர் சேவியர் மணி, செயலாளர் பாண்டியன், பொருளாளர் செல்லத்துரை, இணைச்செயலாளர் கீவன் மேரி மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர். 
    இயேசு தன்னை தாழ்த்தி கொண்டு, சிலுவைச்சாவை ஏற்றார். அது எதற்காக? நாம் வாழ்வு பெற, நம்மை வாழ வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
    இயேசு, சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச்சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். (பிலிப் 2:6)

    நாம் வாழ்வதற்கும், வாழ வைப்பதற்கும் தான் படைக்கப்பட்டிருக்கிறோம். வாழ்வதற்காக வரம், அருள் ஆகியவற்றை இறைவனிடத்தில் நாள்தோறும் பெறுகிறோம். அதனை பிறரோடு பகிர்ந்து, அவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்பதே தவக்காலத்தின் நோக்கம் ஆகும். அதற்கு, ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்‘ என்ற முதுமொழி மிகவும் பொருத்தமானது. நம்மை பிலிப்பயரின் இறைவார்த்தையோடும், முதுமொழியோடும் இணைத்து பார்ப்போம்.

    இயேசு தன்னை தாழ்த்தி கொண்டு, சிலுவைச்சாவை ஏற்றார். அது எதற்காக? நாம் வாழ்வு பெற, நம்மை வாழ வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். நம்மை, பிறர் முன் தாழ்த்திக்கொள்ள முடிகிறதா? பிறரை வாழ வைக்க நம்மை இழக்க முடிகிறதா? பணம், பதவி, பட்டம், புகழ், நான், தன் குடும்பம் என்று மட்டும் வாழ்ந்தால் போதும் என்றிருக்கிறோம். அடுத்தவர் பற்றி கவலைப்படுவதில்லை. அறிவு, ஞானம், அருள், பொருள் என பல செல்வங்களை இறைவன் நமக்கு தாராளமாக வழங்கிய போதும், அதை பிறரோடு பகிர்ந்து கொள்ள நமக்கு மனமில்லை.

    பணம், வழிகாட்டுதல், பரிந்து பேசுதல், உடனிருந்து நேரத்தை செலவிடுதல் போன்ற சிறு உதவியை ஒருவருக்கு செய்தால், அவர் வாழ்வில் முன்னேறுவார் என்பதை நாம் உணர்ந்திருப்போம். ஆனால் அவர் நம்மை விட உயர்ந்து விடுவாரோ? என்ற அச்சத்தால் அந்த உதவியை செய்ய மாட்டோம். பொறாமை, சுயநலம் போன்ற அற்ப குணங்கள் தான் அதற்கு காரணம். நம்மில் உதவியை பெற்றவர் வாழ்வில் உயர்ந்தால், அவர் வழியே நமக்கும் உயர்வு கிட்டும் என்பதை உணர மறுக்கிறோம்.

    நாம் வாழாவிட்டாலும் பரவாயில்லை. அடுத்தவன் வாழ கூடாது என்ற கெட்ட குணம் பலரிடம் உள்ளது. இதைத்தான் இயேசு சாடுகிறார். ‘நீங்களும் நுழைவதில்லை. நுழைவோரையும் தடுக்கிறீர்கள்’ (லூக் 11:52), என்பதுடன், ‘உன்மீது அன்பு கூர்வது 6போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ (மாற்கு 12:31) என்கிறார். இந்த இறை வசனங்கள் இன்று நமக்கு சொல்ல விரும்புவதும் இதைத்தான். எனவே, தன்னை தாழ்த்தி பிறருக்காக தியாகம் செய்து வாழ்வோம்.

    அருட்சகோதரி.இ.சவரி, அமலவை சபை, திண்டுக்கல். 
    தூக்கம் சிலருக்கு நண்பன், ஆனால் விழித்திருத்தல் எல்லோருக்கும் கடினமானது. அளவுக்கு மீறிய தூக்கம் அலட்சியத்தை தரும். உழைப்புக்கு உயிர் கொடுக்கும் விழித்திருப்பு லட்சியத்தை வெல்லும்.
    தூக்கம் சிலருக்கு நண்பன், ஆனால் விழித்திருத்தல் எல்லோருக்கும் கடினமானது. அளவுக்கு மீறிய தூக்கம் அலட்சியத்தை தரும். உழைப்புக்கு உயிர் கொடுக்கும் விழித்திருப்பு லட்சியத்தை வெல்லும்.

    இறைமகன் இயேசு தம் சீடர்களிடம் விழித்திருக்கும்படியான ஒரு அழைப்பைக் கொடுக்கிறார்.

    எருசலேமில் இயேசு ஆற்றிய இறுதிஉரையில் ‘விழிப்பாயிருங்கள்’ என்ற அறைகூவலை விடுப்பதோடு விழித்திருத்தலின் முக்கியத்துவத்தையும் அவர்களுக்கு உணர்த்துகிறார்.

    மானிட மகன் வரும் நாளையும் வேளையையும் பற்றி தந்தையை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆதலால் நீங்கள் விழிப்பாயிருக்க வேண்டும். கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது (மாற்கு 13:33). என் கிறார்.

    இறைமகன் இயேசு ஆற்றின பணிகளின் முழுமை அவருடைய பாடுகளிலும், மரணத்திலும், உயிர்ப்பிலும் விளங்க இருக்கும் நிலையில் இவ்வாறு கூறுகிறார்.

    இனி நிகழவிருக்கும் பாடு, மரணம், உயிர்ப்பின் முன்னேற்பாடாகவும் தம் வாழ்வின் நோக்கம் நிறைவு பெற்று விட்டது என்பதைக் காட்டவும், இனித் தம் சீடருக்கும் நிகழவிருக்கும் எதிர்ப்புகள் எவ்வாறு இருக்கும் என்பதைத் தெரிவிக்கவும் இந்த இறுதி உரையை ஆற்றுகிறார்.

    மேற்கூறிய அறிவுரை திருவெளிப்பாடு நூலில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் பற்றியது. இவை நிறைவேறும் காலம் எவ்வளவு உண்மையோ, அவை நிகழும் காலமும் மறைபொருளாய் இருக்கிறது என்பதும் அவ்வளவு உண்மை. மானிடமகனின் வெற்றி வருகையின் மாட்சியும் அதுவே. இந்த வருகை தான் கடவுள் மக்களைத் தீர்ப்பிடும் நாள் என்று கருதப்படுகிறது (லூக்கா 21:34).

    இத்தகைய தீர்ப்புகள் மறைபொருள் போல் பாதுகாக்கப்பட வேண்டியதால் அது யாருக்குமே தெரியாது என்றும், மக்கள் என்றுமே தங்கள் கடமைகளை ஆற்றி, இந்த தீர்ப்புகளை எதிர்நோக்கியிருக்க வேண்டும்.

    கிறிஸ்தவ வாழ்வில் ஒரு நிரந்தரமான ஒழுக்க நிலை இருத்தல் வேண்டும். ஒவ்வொரு நாளும் இறைமகனின் வருகை நாளாகவே கருதப்பட வேண்டும்.

    இயேசு ஆற்றிய இறுதி உரையின் முடிவுரை ஒரு சிறப்பான எச்சரிக்கை வார்த்தையுடன் அமைந்துள்ளது. ‘அழிவு’ என்ற சிந்தனையுடன் இவ்வுரை தொடங்குகிறது. இந்த அழிவு எப்போது வரும் என்று தம் சீடர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு அளித்த முதல் பதில் “அவர்கள் கவனமாயிருக்க வேண்டும்” என்பது தான்.

    இந்த உரையின் இறுதிக்கட்டத்தில் இறை மகன் இயேசு மீண்டும் அதே எச்சரிக்கை சொற்களைப் பயன்படுத்துகிறார். “சீடர்கள் விழிப்பாயிருக்க வேண்டும்” என்று அவர் நான்கு முறை எச்சரிக்கை விடுக்கிறார் (மாற்கு: 13:33,34,35,37).

    விழித்திருங்கள் (அ) விழித்திருத்தல் என்பதன் கிரேக்க மூலப்பதம் “கிரிகாரியோ” என்பதாகும். இது தொடர்ந்து எப்போதும் ஆயத்த நிலையில் அல்லது விழிப்புடன் இருத்தலைக் குறிப்பிடுகின்றது.

    போர்க்களத்தில் ஆயத்த நிலையில் இருக்கும் வீரர்களிடம் உள்ள விழிப்புணர்வுடன் இது ஒப்புமைப்படுத்தப்படுகிறது.

    முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் இறை மகன் இயேசுவின் மாட்சிமிகு வருகையை மிகுந்த மனோவாஞ்சையோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். எதிர்பார்ப்புக் காலம் நீடித்துக் கொண்டிருந்த காரணத்தினால் கிறிஸ்தவர்கள் தங்கள் கடமைகளில் தளர்ந்து இருந்தார்கள். அவர்களை ஊக்குவிக்கும்படியாகவே இத்தகைய எச்சரிக்கைகள் இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

    பொறுமை, நம்பிக்கை, கடமை தவறாமை, தளராத எதிர்பார்ப்பு மனநிலை ஆகிய பண்புகளுடன் கூடியதாகத் தான் இந்த எச்சரிக்கைகளையும் காண வேண்டும்.

    ஒரு ஆயத்த நிலை என்ற கருத்து தான் இயேசுவின் இறுதி உரையில் தொடர்ந்து எதிரொலித்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இத்தகையதொரு ஆயத்த நிலை மனப்பாங்கு கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை உணர்வாக திகழ வேண்டும். இந்த ஆயத்த நிலையில் ஒவ்வொரு நாளும் இயேசுவின் வருகையை உணரலாம்.

    இறைவன் நம் மானிட பிறப்பு சிறப்புறுவதற்கு நம் திறமைகளை அறிந்து ஒவ்வொரு வருக்கும் ஒரு பொறுப்பை அளித்துள்ளார். அதோடு நம் கடமைகளில் நாம் தவறுகின்ற தருணங்களில் அவர் தம் வாக்கின் வழியாக நம்மை எச்சரித்து ஆற்றுப்படுத்துகிறார்.

    அவர் வருகையை நாம் அறியாதவர்களாக இருக்கிறோம். மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ, அவர் வருகை எந்த நாள், எந்த சமயமென்று, ஆராயாமல் அவர் திடீரென்று வந்து நாம் தூங்குவதை காணாதபடிக்கு, அவர் வருகைக்காக நம் கடமைகளில் கவனமாயிருந்து விழித்திருக்க வேண்டும் என்பதாகும்.

    ஆண்டவர் இயேசு கூறிய ‘தோழியர் பத்து பேர்’ உவமையில் மணவாளன் திடீரென்று நடுஇரவில் வருகிறார் (மத்தேயு 25:1,13)

    விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம். (I தெச 5:6) என்கிறார் தூய பவுல் அடிகளார்.

    இறைவன் அழைத்த அழைப்பை உணர்ந்து, நமக்கு கொடுக்கப்படுகின்ற கடமைகளை சிறப்புடன் ஆற்ற அவர் ஒவ்வொரு நாளும் நம்மை தகுதிப்படுத்தி வருகிறார். நாளுக்கு நாள் அவருடைய வருகையின் தாகம் நம்மில் அதிகரிக்க வேண்டும். விழிப்புள்ள மக்களாக இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினை எந்த நேரமுமாயினும் எதிர்கொள்வதற்கு ஆயத்தமான விழிப்புள்ள மக்களாய் வாழ்வோம்.

    அருட்பணி. ம. பென்னியமின், பரளியாறு. 
    தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் அற்புதஆரோக்கிய அன்னை தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர்திருவிழா கடந்த 27-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. இதன் நிறைவு நாள் அன்று ஆரோக்கிய அன்னை தேர்பவனி நடைபெற்றது.

    முன்னதாக ஜெபமாலை மற்றும் நவநாள் திருப்பலி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 9.45 மணிக்கு தேரை புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை மைக்கேல் அடிகளார், தஞ்சை தூய மரியன்னை இளம் குருமட அதிபர் அகஸ்டின் அடிகளார் ஆகியோர் ஆகியோர் புனிதம் செய்து தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் தேர்பவனி நடைபெற்றது.

    முதலில் காவல்சம்மனசு சிறிய தேர் வர அதைத்தொடர்ந்து சூசையப்பர், மரியாள், இருதய ஆண்டவர், ஆரோக்கிய அன்னை தேர் என 5 தேர் பவனி வந்தது. தேர் ஆலயத்தில் இருந்து தொடங்கி மாதாகோவில் தெரு வழியாக ஊரை சுற்றி ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நேற்று காலை 9 மணிக்கு திருவிழா திருப்பலி லாரன்ஸ்அடிகளார் தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதுன்மை வழங்கும் விழா நடைபெற்றது. பின்னர் கொடியிறக்கம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பபியான்அடிகள், அருட்சகோதரிகள், கிராம மக்கள் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர். 
    சிலுவை இல்லாமல் இயேசு மக்களை அன்பு செய்யவில்லை. சிலுவைக்கு பின்னால் உயிர்ப்பு உண்டு என்பதை உணர்வோம். துன்பங்களுக்கு பின்னால் பேரின்பம் உண்டு என்பதை ஏற்போம்.
    குளிர்கால கூட்டம் ஒன்றில் பேசிவிட்டு, தொண்டர் ஒருவரின் வீட்டில் இரவு தங்கினார் தலைவர். அந்த வீடு ஒரு வசந்த பவனாக இருந்தது. தொண்டரோ வெளியில் தூங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    குளிர் ரத்தத்தை உறையச் செய்தது. கை, கால் விரல்கள் நடுங்கின. காலையில் தலைவர் தொண்டரை நலம் விசாரித்தபோது குளிர் என்றால் என்ன வென்றே தெரியாது போல பாவனை செய்தார் தொண்டர். தலைவர் மீது வைத்த அன்புக்காக அத்தொண்டர் இரவெல்லாம் துன்புற நேர்ந்தது. இதுதான் அன்பு வருத்தம் என்பது. அன்பு, துன்பங்களை கொண்டுவரும்.

    அத்துன்பங்களிலே தான் மகிழ்ச்சி மலர்ந்து மணம் வீசும். ஏழை கைம்பெண் (லூக் 21:4) தனக்கு பற்றாக்குறை இருந்தும் தனக்கு உள்ளது எல்லாவற்றையும் இறைவனுக்கு காணிக்கையாக்கினாள். மறுநாள் கடினப்பட்டு உழைத்து உண்ண நேர்ந்திருக்கும். இங்கே தான் அன்பு துன்புறுத்துகிறது. பேறுகாலத்துயரை கடந்த தாய், தன் பச்சிளம் குழந்தையை பார்க்கிறபோது உலகில் ஒரு மகான் உதித்துவிட்டான் என்று பேருவகை கொள்கிறாள்.

    நாம் துன்புற்றாலும் ஏழைகளுக்கும் எளியவருக்கும் உதவுவது நம் கடமை. இயேசுபிரான் சிலுவையை சுமந்து தான் மனுக்குலத்தை அன்பு செய்தார். சிலுவை இல்லாமல் இயேசு மக்களை அன்பு செய்யவில்லை. சிலுவைக்கு பின்னால் உயிர்ப்பு உண்டு என்பதை உணர்வோம். துன்பங்களுக்கு பின்னால் பேரின்பம் உண்டு என்பதை ஏற்போம்.

    குழந்தை, காணியிருப்பு. 
    நாம் செய்கின்ற பாவச் செயல்கள் நமக்கு எதிராய் கடவுளிடம் மன்றாடும் எனும், சிலுவையிலுள்ள இறைமகன் இயேசுவின் ரத்தம் மட்டுமே நம்மை மீட்க முடியும் எனும் உண்மையையும் நாம் புரிந்து கொள்வோம்.
    உயிர் கடவுளுடையது என்பதால், ரத்தம் சிந்தப்படும் போது அது கடவுளை நோக்கி குரல் எழுப்புகிறது எனும் சிந்தனையை விவிலியம் நமக்கு எடுத்துக் கூறுகிறது.

    ஆதிமனிதன் ஆதாமும், ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் கடவுளுடைய கட்டளையை மீறிய காரணத்தால் ஏதேனை விட்டு கடவுளால் வெளியேற்றப்படுகிறார்கள். ஏதேனை விட்டு வெளியே வந்த அவர்களுக்கு காயீன், ஆபேல் என இரண்டு புதல்வர்கள் பிறக்கின்றனர்.

    இருவரும் கடவுளுக்குக் காணிக்கை செலுத்தும் வழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். ஒருமுறை ஆபேல் தனது மந்தை யிலிருந்து கொழுத்த தலையீற்று ஆடுகளைக் கடவுளுக்குப் பலிகொடுக்கிறான். கடவுள் அவனையும் அவன் பலியையும் அங்கீகரிக்கிறார்.

    காயின் காய்கறிகளைப் பலியிடுகிறான். அவனையும் அவன் பலிகளையும் கடவுள் அங்கீகரிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட காயீன் கடவுளின் எச்சரிப்பையும் மீறி ஆபேலைக் கொன்று விடுகிறான். இப்போது ஆபேலின் ரத்தம் பூமியிலிருந்து நீதிக்காக கடவுளை நோக்கி கதறுகிறது. கடவுளின் தண்டனை காயின் மேல் விழுகிறது.

    இது தொடக்ககால மனித வரலாற்றில் நிகழ்ந்த ஒரு கதை.

    இந்த நிகழ்வு, ‘ரத்தம் குரலெழுப்பி நீதிகேட்கும்’ எனும் வலிமையான உண்மையை நமக்கு விளக்குகிறது. கடவுள் தந்த வாழ்வான உயிரை நாம் அழிக்கும் போது, அது கடவுளை நோக்கி விண்ணப்பிக்கிறது. கடவுளும் செவி கொடுக்கிறார்.

    ‘ஆபேல் காயீனுடைய பலியைவிட மேலான பலியைக் கடவுளுக்குச் செலுத்தினார். அதனால் அவர் நேர்மையானவர் எனக் கடவுளிடமிருந்து நற்சான்று பெற்றார்’ (எபி.11:4) என்கிறது பைபிள். ஆபேலின் பலி, உயிர்ப்பலியாய் இருந்தது கூட அதன் காரணமாய் இருக்கலாம்.

    இதற்கு முன்பே ஒரு பலி, ஒரு ரத்தம் சிந்துதல் ஏதேனில் நடந்தது. அது தான் முதல் ரத்தம். ஆதாமும், ஏவாளும் கடவுளுடைய கட்டளையை மீறினர். அப்போது தாங்கள் நிர்வாணிகள் எனும் நிலையை புரிந்து கொண்டனர். இலைகளால் தங்களை மூடிக்கொண்ட அவர் களுக்காக இறைவன் தோல் ஆடையை கொடுக்கிறார். அதற்காக ஏதோ ஒரு விலங்கு தனது உயிரை விட்டிருக்க வேண்டும். அது தான் முதல் ரத்தம் சிந்துதல் நிகழ்வு.

    அந்த பலி, பாவங்களை மறைப்பதன் அடையாளம். அது நமது மீட்புக்கான அடையாளம்.

    காயீன் குற்றம் செய்ய வேண்டும் என முடிவெடுத்த உடனே கடவுள் அவனை தண்டிக்கவில்லை. அவனுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். எச்சரிக்கையின் ஒலியை அனுப்புகிறார்.

    “நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்? நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா?. நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்” என கடவுள் மிகத்தெளிவான எச்சரிக்கையை காயீனுக்குக் கொடுக்கிறார். ஆனால் காயீன் அதற்குச் செவிகொடுக்கவில்லை.

    போதுமான அளவுக்கு கால அவகாசம் கொடுத் திருந்தும் அதை காயீன் கண்டுகொள்ளவில்லை. அதை அவன் பொருட்படுத்தவில்லை. ஆபேலைக் கொல்கிறான்.

    “ஆபேல் எங்கே?” என கேட்கிறார் கடவுள். ஆதாம், பாவம் செய்த போது கடவுளை விட்டு விலகி பயந்து போய் ஓடி ஒளிந்தான். ஆனால் காயீனோ கொஞ்சமும் பயம் இல்லாமல், கடவுள் முன்னால் நின்று, “என் சகோதரனுக்கு நான் என்ன காவலாளியா?” என பதில் கொடுக்கிறான்.

    இது துணிகரமான பாவமாகிறது. பாவம் இன்னொரு நிலை அதிகரிக்கிறது. சாத்தான் ஆதாமிடம் பொய் சொன்னான், காயீனோ, கடவுளிடமே பொய் சொல்கிறான்.

    பாவம் கடவுளையும் மனிதனையும் பிரிக்கிறது. ஆதாம் ஏவாள் ஏதேனை விட்டு, கடவுளின் அருகாமையை விட்டு வெளியே வருகின்றனர். பாவம் சக மனிதனையும் பிரிக்கிறது. காயீன் ஆபேல் பிரிகின்றனர்.

    “என் சகோதரனுக்கு நானென்ன காவலாளியா?” என கேட்கிறான் காயீன். உண்மையில் கடவுள் பூமியில் மனிதரைப் படைக்கும் போது அடுத்தவருக்குக் காவலாளியாய் தான் படைக்கிறார்.

    கொலை செய்யப்பட்டவனின் ரத்தம் பழிவாங்கவேண்டும் எனும் நோக்கத்தோடு குரல் எழுப்புகிறது. ரத்தமே மரணத்தின் சாட்சியாகவும், மரணத்துக்கு நீதி கேட்கும் குரலாகவும் இருக்கிறது.

    ரத்தம் ரத்தத்துக்காக குரலெழுப்புகிறது. நாம் செய்கின்ற பாவம் எல்லாம் நம்மைச் சுற்றி இருக்கிறது. நமக்கு எதிராக அது குரலெழுப்பிக் கொண்டே இருக்கிறது. இந்த சிந்தனை நமக்கு நிச்சயம் இருக்க வேண்டும்.

    “காயீனைப்போல் நீங்கள் இராதீர்கள்; அவன் தீயோனைச் சார்ந்தவன்; ஏனெனில் தன் சகோதரரைக் கொலை செய்தான். எதற்காக அவரைக் கொலை செய்தான்? ஏனெனில் அவன் செயல்கள் தீயனவாக இருந்தன. அவன் சகோதரருடைய செயல்கள் நேர்மையானவையாக இருந்தன” என்கிறது பைபிள்.

    நாம் செய்கின்ற பாவச் செயல்கள் நமக்கு எதிராய் கடவுளிடம் மன்றாடும் எனும், சிலுவையிலுள்ள இறைமகன் இயேசுவின் ரத்தம் மட்டுமே நம்மை மீட்க முடியும் எனும் உண்மையையும் நாம் புரிந்து கொள்வோம். 
    கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பையென கருதுகிறேன் என்று தூய பவுலடியார் சொன்னது போல நம் ஒவ்வொருவரின் மன நிலையும் மாற வேண்டும்.
    இன்றைய காலச்சூழலில் வாழ்க்கை என்பது பலவிதமான எதிர்பார்ப்புகளோடு இயங்கிக் கொண்டு இருக்கிறது. “என்னால் எல்லாம் முடியும். எனக்கு எல்லாம் வேண்டும்“ என்ற சிந்தனையே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உள்ளத்தையும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் பொருள் படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் கூட முதுமையின் போது இயலாமையால் தவிக்கிறார்கள். அந்த சமயத்தில், வாழ்வில் பெற்ற அனைத்து நலன்களும் வீண் என்றே அவர்கள் கருதுகின்றனர். இதே சிந்தனையை உள்வாங்கி வாழ்வை நகர்த்தினால் நாம் இயல்பாக வாழ முடியும்.

    அதே போல எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையை வாழ முயற்சிக்க வேண்டும். நாம் செய்யும் உதவிக்கு நன்றியை கூட எதிர்பார்க்க கூடாது. எதிர்பார்ப்புகள் அற்று வாழ்வது மிகவும் அவசியம். எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போது ஏமாற்றமும், உயர்ந்த விரக்தியும் உருவாகும்.

    தன் வாழ்வில் நான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை என்ற புலம்பலோடு இளைஞன் ஒருவர் துறவியை தேடிச் செல்கிறான். அவரை பார்த்ததும் தன் அனைத்து குறைகளையும் கொட்டித்தீர்க்கிறான். சில நிமிட மவுனத்துக்கு பிறகு அந்த துறவி, ‘இளைஞனை பார்த்து உன் வாழ்வின் எதிர்பார்ப்பு என்ன?‘ என்று கேட்கிறார். உடனே இளைஞன், ‘எனக்கு மகிழ்ச்சி வேண்டும்‘ என்று துறவியிடம் கூறினான். பின்னர், ‘மகிழ்ச்சிக்காக என்ன செய்தாய்? எதையெல்லாம் இழந்திருக்கிறாய்‘ என்று துறவி கேட்டார். ஆனால் துறவி கேட்டதற்கு இளைஞனால் எந்த பதிலும் கூற முடியவில்லை. அவன் அப்படியே அமைதியாக நிற்கிறான்.

    இன்றைய உலகில் நாமும் ஏராளமான எதிர்பார்ப்புகளை உள்ளத்தில் வைத்துக்கொண்டு வாழ்கின்றோம். ஆனால் நல்லது எதையும் இழப்பதற்கு நாம் முன் வருவதில்லை. அது வேண்டும், இது வேண்டும் என்று ஆசைப்படும் நாம் எதுவுமே வேண்டாம் என சிந்திப்பது இல்லை. கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பையென கருதுகிறேன் என்று தூய பவுலடியார் சொன்னது போல நம் ஒவ்வொருவரின் மன நிலையும் மாற வேண்டும்.

    அருட்பணி. குருசு கார்மல்,

    தூய பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், மார்த்தால், கோட்டார் மறைமாவட்டம்
    இழந்து நிற்கும் நியாயமான சொத்து-உரிமையை மீண்டும் இறைவன் மீட்டுத் தருவார் என்ற எண்ணத்தில், அவரது செயல்பாட்டுக்காக விசுவாசத்துடன் காத்திருக்க வேண்டும்.
    தற்போதய உலகம் மிகமிக அவசரமானதாக மாற்றப்பட்டுவிட்டது. காலையில் விதைத்ததை மாலையில் நல்ல லாபத்தோடு அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கும் மக்களை அதிகம் கொண்ட உலகம் இது.

    ‘காத்திருத்தல்’ என்ற ஒரு அம்சத்தை வெறுக்கும் கோட்பாடு, இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்றிக்கொண்டுள்ளது.

    எந்தத் தொழிலில் இறங்கினாலும் லாபத்தை மட்டுமே நோக்கமாக வைத்து செயல்படுவதால், மனசாட்சிக்கு உட்பட்ட தர்மத்தை பெரும்பாலானோர் மறந்தே போய்விட்டனர்.

    இதனால் குற்றங்களும், பாவங்களும் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே இருக்கின்றன. லாபம் அதிகமாக கிடைக்கிறது என்றால், நம்பிக்கைத் துரோகம் உடனே, எளிதில் நடந்தேறிவிடுகிறது.

    இப்படி லாபத்தை நோக்கி அவசரமாக சென்றுகொண்டிருக்கும் உலகத்தில், கிறிஸ்தவ ஆன்மிகத்தின் ஒரு முக்கிய அம்சமான காத்திருத்தல் என்பதை கடைப்பிடிப்பது மிகவும் பாரமானதாக உணரப்படுகிறது.

    ஏதாவது நன்மையை பெறுவதற்காக உலக வழிகளில் செல்லாமல், வேத வழிகாட்டுதல்படி காத்திருப்பதால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்களிடம் உண்டு.

    ஆனால், உலகத்தின் அவசரத்துக்கு ஏற்ப வேதத்தின் கட்டளைகளை மாற்றிக்கொள்ள முடியாது. இறைவனிடம் இருந்து கிடைக்க வேண்டிய நன்மைகளை, நம்பிக்கையோடும் பொறுமையோடும் காத்திருந்து பெற வேண்டுமென்பதே வேத கட்டளையாக உள்ளது. (லூக்கா 12:36, ரோமர் 8:23,25, எபி. 6:15, யூதா 1:21).

    காத்திருத்தல் என்றால் என்ன?

    பாவமன்னிப்பைப் பெற்று (இறைவனிடமும், நமது பாவத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடமும்) உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகுதான், இறைவன் செயல்பாட்டுக்காக காத்திருத்தல் என்பதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும்.

    இயல்பான வாழ்க்கை வாழும்போது, நம்மை திட்டுபவர்களை பதிலுக்கு உடனே திட்டியிருப்போம். அடித்தவர்களை பதிலுக்கு அடித்திருப்போம். குற்றம்சாட்டுபவர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்போம். சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும்போது பாவத்தை நோக்கி சாய்ந்திருப்போம்.

    ஆனால், உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு, பதிலுக்கு திட்டுவது, அடிப்பது, குற்றம்சாட்டுவது என்பதுபோன்ற உலக இயல்பு நடவடிக்கைகளில் இறங்க முடியாது.

    இதுபோன்ற அவமானகரமான நேரங்களில் பதில் செய்யாமல் அவமதித்தவர்களை இறைக்கட்டளைப்படி மன்னித்துவிடுகிறோம்.

    ஆனால், இதுபோன்ற இறைவழியில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதும், அது எப்போது கிடைக்கும் என்பதும் புரியாத புதிராகவே காணப்படும்.

    ஆனால் அந்த நன்மைகள் கிடைக்கும்வரை இயேசு காட்டியுள்ள வழியைவிட்டு விலகாமல் பொறுமையுடன் சகித்து வாழ்வதன் பெயர்தான் காத்திருத்தல் ஆகும்.

    நன்மைகள் வந்து கிடைத்த பிறகுதான் காத்திருத்தலின் அருமை தெரியவரும். ஆனால் பலரும் காத்திருத்தலை தவிர்த்து உலக வழிகளில் சென்றுவிடுகின்றனர்.

    அபகரித்தவர் மற்றும் இழப்பை ஏற்படுத்தியவரிடம் இருந்து அதை மீட்பதற்காக குற்றச்சாட்டு, புகார், வழக்கு என்ற கிறிஸ்தவத்துக்கு எதிரான வழியில் சென்றுவிடுகின்றனர். திருமண முறிவின்போது, இறைநீதிக்கு உட்படாத மறு மணத்தை நாடுகின்றனர்.

    இழப்பு ஏற்படுவதில் 2 நிலைகள் உள்ளன. இறைப்பாதையில் வருவதற்கு முன்பு பெற்றிருக்கும் அநியாய சம்பாத்தியங்களை, இறைவழிக்கு வந்த பிறகு இழப்பது அல்லது திருப்பிச் செலுத்துவது ஒரு நிலை (சகேயு). விசுவாச சோதனையின்போது எதிர்பாராமல் சொந்த சம்பாத்தியத்தை இழப்பது மற்றொரு நிலை (யோபு).

    அநியாய சம்பாத்தியத்தை இழப்பது, பெரிய அளவில் துன்பத்தை ஏற்படுத்தாது. ஆனால் யோபு போல நியாயமான சம்பாத்தியம்-உரிமையை மற்றவர் பறித்துக்கொள்வதால் இழந்து நிற்பது, மிகக் கடினமானது. இந்த கட்டத்தில்தான் விசுவாசத்துடன் காத்திருத்தல் என்ற பாதையை பக்தன் வந்தடைகிறான் (கலா.5:5). இதில் தான் அவனது விசுவாசம் சோதிக்கப்படுகிறது.

    இழந்து நிற்கும் நியாயமான சொத்து-உரிமையை மீண்டும் இறைவன் மீட்டுத் தருவார் என்ற எண்ணத்தில், அவரது செயல்பாட்டுக்காக விசுவாசத்துடன் காத்திருக்க வேண்டும். ஒருவேளை அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் உலக வழிகளை நாடாமல், விசுவாச நடத்தையை காத்துக்கொள்ள வேண்டும். அப்படி காத்துக்கொண்டான் என்றால், அவன் அந்த சோதனையில் ஜெயித்துவிட்டான் என்று அர்த்தம்.

    ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருப்பதற்கு விசுவாசம் அவசியமில்லை. அங்கு ரெயில் வந்து சேர்ந்துவிடும். ஆனால் தண்டவாளம் இல்லாத இடத்தில், சாலை இல்லாத பகுதியில் ரெயிலுக்கோ, வாகனத்துக்கோ காத்திருப்பதுதான், விசுவாசத்துடனான காத்திருப்பாகும் (ரோமர் 8:25).

    எனவே, இழப்பு எந்தவிதத்தில் வந்தாலும், இழப்பை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக உலக ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்தால், இறைவன் மீது வைத்துள்ள விசுவாசம் காத்துக்கொள்ளப்படும். (1 கொரி.6:7). விசுவாசம்தான் இறுதிவரை காத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும் (2 தீமோ 4:7).
    காவல்கிணறு புனித உபகார அன்னை ஆலய திருவிழா நடந்தது. விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
    நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல்கிணறு புனித உபகார அன்னை ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை திருயாத்திரை, திருப்பலியும், மாலையில் மறையுரை நற்கருணை ஆசீரும், இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

    8-ம் திருநாளன்று காலை திருப்பலியில் சிறுவர்- சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. இரவில் நற்கருணை பவனி நடந்தது. 9-ம் திருநாளன்று இரவு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. இரவு 10 மணிக்கு தேர் பவனி நடந்தது.

    10-ம் திருநாளான நேற்று காலை தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் ஆடம்பர பாடல் திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். மாலை 3 மணிக்கு தேர் பவனி தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்று 6.30 மணிக்கு ஆலய வளாகத்தை தேர் வந்தடைந்தது. தேர் பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    திருவிழா ஏற்பாடுகளை பங்கு குரு மைக்கிள் மகிழன் அடிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். 11-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில் பொது அசனம் நடக்கிறது. 
    இயேசுவின் வார்த்தைகளில் ஊன்றி அவருக்குரிய செயல்களை செய்து வாழ்வதே வலிமை. அத்தகைய உண்மையான ஆவிக்குரிய வாழ்வு வாழ முற்படுவோம். இயேசுவின் சாட்சிகளாவோம்.
    இயேசுவை பற்றி அறிந்து கொள்ள அவருக்கு சாட்சிகளாய் இருப்பது இரண்டு ஆகும். ஒன்று இயேசு சொல்லும் உயிருள்ள இறைவார்த்தைகள். மற்றொன்று இயேசு செய்து காட்டும் வாழ்வு தரும் செயல்கள். இந்த இரண்டும் இயேசு யாராயிருகின்றார் என்று நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. இவற்றின் மூலம் இயேசுவை அறிந்து அவரை நம்பி வாழ நாம் அழைக்கப்பட்டிருகின்றோம்.

    அந்த வகையில் இயேசுவை பின் தொடர்ந்தவர்கள் இரண்டு பிரிவினர். இயேசுவை தவறாக புரிந்து கொண்டு அவரை விமர்சனப்படுத்தும் பரிசேயர்கள் ஒரு புறம். அவரது வார்த்தைகளை கேட்டும், செயல்களை கண்டும் அவர்மேல் நம்பிக்கை கொண்ட மக்கள் மற்றொருபுறம். முதல்வகையினர் வானியியல் படி வாழ்ந்தவர்கள். எப்பொழுதும் உலகு சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள். உலகிற்குரிய காரியங்கள் குறித்து அதிக அக்கறை கொண்டவர்கள். இவர்கள் வாழ்க்கையை மேலோட்டமாக அணுகி, பாவக்கட்டுப்பாட்டில் வாழ்ந்தவர்கள்.

    இதனால் ஆண்டவரிடமிருந்து அன்னியபட்டு நிற்பவர்கள். ஆனால் இன்னொரு வகையினரோ ஆவிக்குரிய வாழ்வு வாழ்ந்தவர்கள். இவர்கள் உலகுச்சார்ந்த வாழ்க்கையினை கடந்து உள்ளுக்குள் பயணிப்பவர்கள். பாவம், இவர்கள் மேல் ஆட்சி செய்ய விடாதவர்கள். தந்தையாகிய இறைவனை இயேசுவின் சொல்லிலும், செயல்களிலும் கண்டுகொண்டவர்கள். நாம் வாழ்வது ஆவிக்குரிய வாழ்வா? உலகம் சார்ந்த வாழ்வா?

    இத்தவக்காலத்தில் இயேசுவின் வார்த்தைகளில் ஊன்றி அவருக்குரிய செயல்களை செய்து வாழ்வதே வலிமை. அதுவே நம் கடமை. சிறந்த தவம். அத்தகைய உண்மையான ஆவிக்குரிய வாழ்வு வாழ முற்படுவோம். இயேசுவின் சாட்சிகளாவோம்.

    - ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர், தூய இருதய குருமடம், குடந்தை. 
    மனம் மாறுங்கள், நற்செய்தியை நம்புங்கள், இறையாட்சி வந்து விட்டது என்ற இயேசுவின் போதனையை ஏற்று, சொல்லால் அல்ல, செயலால் வாழ்ந்து காட்டுங்கள்.
    இருவர், இறைவனிடம் வேண்டுவதற்காக ஆலயத்துக்கு சென்றனர். அதில் ஒருவர் பரியேசர். மற்றொரு நபர், வரிதண்டுபவர். பரியேசரின் ஜெபமானது, கடவுளே நான் கொள்ளையர், நேர்மையற்றோர் போன்றோ அல்லது மற்ற மக்களைப்போலவோ, இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாது இருக்கிறேன். அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இதுதவிர வாரத்தில் நான் இரு முறை நோன்பிருக்கிறேன். என் வருவாயில் பத்தில் ஒரு பங்கை பிறருக்கு கொடுக்கிறேன் என்கிற பாணியில் அவரது வேண்டுதல் இருந்தது.

    ஆனால் வரிதண்டுபவரின் ஜெபம் வேறு விதமானது. அது, வானத்தை அண்ணாந்து பார்க்க கூட துணிவில்லாமல், தம் மார்பில் அடித்துக்கொண்டு, கடவுளே, பாவியாகிய என் மீது இரங்கியருளும் என்றிருந்தது. இந்த இரண்டு பேரின் ஜெபங்களில், பரியேசரின் ஜெபத்தை விட, வரிதண்டுபவரின் ஜெபமே கடவுளுக்கு ஏற்புடையதாக இருந்தது.

    இயேசுவுக்கு பிடிக்காதவர்கள் யார்? என்றால், அது பரியேசர்கள் போன்றவர்கள் தான். ஏனெனில் பரியேசரின் மனநிலை என்பது தன்னை ஜெபத்தில் கூட விளம்பரப்படுத்தி கொள்வது போன்று இருந்தது. அது, சொல் ஒன்றாகவும், செயல் மற்றொன்றாகவும் இருக்கும் மனநிலை.

    அத்தகையவர்கள், பிறர் நம்மை பார்க்க, போற்ற, புகழ வேண்டும் என்ற சுயநலத்துடன் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். தான் இழிவானதொரு வாழ்க்கை வாழ்ந்தாலும் பிறருக்கு முன்னே தன்னை யோக்கியர் என்று காட்டிக்கொள்வர். ஆண்டவர் இயேசு, உங்கள் செயல்பாடுகளே சிறந்த சான்றுகள் என கூறியுள்ளார்.

    ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்வினை பார்க்காதே என்று நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். தனிமனித ஒழுக்கம் இல்லையென்றால் இந்த சமுதாயத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. தனி மனித மனமாற்றம் தான் சமுதாய மாற்றத்துக்கு ஆணி வேராகும். அது தன்னிலை உணர்தலில் தான் ஆரம்பம் ஆகிறது.

    எனவே, மனம் மாறுங்கள், நற்செய்தியை நம்புங்கள், இறையாட்சி வந்து விட்டது என்ற இயேசுவின் போதனையை ஏற்று, சொல்லால் அல்ல, செயலால் வாழ்ந்து காட்டுங்கள்.

    அருட்பணி. ஜான்பீட்டர், இயக்குனர்,

    புனித தோமா அருட்பணி மையம், திண்டுக்கல். 
    ×