என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    இயேசுவின் கரங்கள் ஆயனின் கரங்கள். அவை நம்மைப் பற்றிக்கொள்ள ஆயத்தமாய் இருக்கின்றன. பற்றிக்கொண்டால் விட்டு விடாமல் பாதுகாக்கவும், ஆறுதல் அளிக்கவும், நம்பிக்கை அளிக்கவும் அவை தயாராக இருக்கின்றன.
    “தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் (லூக்கா 23:47)

    இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார்.

    ஊருக்கு திரும்பும் ஒரு தொலை தூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் குதூகல மனநிலையாய், இயேசு தனது மண் வாழ்வை முடித்து வைக் கிறார்.

    நமது உயிர் இறைவனின் உயிர் மூச்சினால் உருவானது. அந்த உயிர்மூச்சு இறைவனிடமே திரும்பிச் செல்லும் எனும் உத்தரவாதமே இவ்வுலக வாழ்வை மகிழ்ச்சியாக்கும். உயிரின் பிறப்பிடமும், உயிரின் புகலிடமும் இறைவனின் கரங்களே.

    “உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்” (சங் 31:5) எனும் இறைவாக்கின் நிறைவேறுதல் இது. இயேசு இங்கே, தந்தையே என்பதை சேர்த்துக் கொள்கிறார். உலகின் பாவத்தைச் சுமந்ததால் இறைவனின் அருகாமையை விட்டு விலகிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் விழுந்தவர் இயேசு. அப்போது, “இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்” என கதறினார்.

    இப்போது எல்லாம் நிறைவேறியபின் மீண்டும் ‘தந்தையே’ என அழைத்து தன் உறவை உறுதி செய்து கொள்கிறார்.

    சிலுவையில் இயேசு ஏழு வார்த்தைகளைச் சொன்னார். ‘ஏழு’ என்பது முழுமையைக் குறிப்பது. தனது வாழ்வின் முழுமையை இயேசு வெளிப்படுத்துகிறார்.

    முதல் வாசகம் மன்னிப்பைப் பேசியது, இரண்டாவது வாசகம் மீட்பைப் பேசியது, மூன்றாவது வாசகம் பரிவைப் பேசியது, நான்காவது வாசகம் துயரத்தைப் பேசியது, ஐந்தாவது வாசகம் ஏக்கத்தைப் பேசியது, ஆறாவது வாசகம் வெற்றியைப் பேசியது, ஏழாவது வாசகம் ஆறுதலைப் பேசியது.

    ஆன்மிகத்தின் முழுமையும், செழுமையும் இயேசு பேசிய வார்த்தைகளுக்குள் அடங்கி விட்டன எனலாம்.

    ‘தந்தையே உம் கைகளின் என் உயிரை ஒப்படைக்கிறேன்’ எனும் வார்த்தையில் நம்பிக்கை வெளிப்படுகிறது. தந்தை தன்னை கைவிடமாட்டார் என முழுமையாய் நம்பும் மழலையின் மனநிலை அது. “நீங்கள் குழந்தையாய் மாறவேண்டும்” என இயேசு குறிப்பிட்டது தந்தை மீது கொள்ளவேண்டிய முழுமையான நம்பிக்கையையும் குறிக்கும்.

    தந்தையின் கரங்கள் ஆறுதலின் கரங்கள். தந்தையின் தோள்களில் துயிலும் மழலை எத்தனை சத்தங் களுக்கு இடையே வாழ்ந்தாலும் நிம்மதியாய் உறங்கும். பெற்றோரின் அருகாமை இல்லையேல் நிசப்தமான பஞ்சு மெத்தை கூட அவர்களை கலங்கடிக்கும். தூங்க விடாமல் செய்யும். இறைவனின் கரங்களில் நமக்கு ஆறுதல் கிடைக்கிறதா?

    தந்தையின் கரங்களில் கிடைப்பது முழுமையான பாதுகாப்பு. தந்தையின் விரலைப் பிடித்துக் கொண்டு செல்லும் மழலையின் முகத்தைப் பார்த்திருக் கிறீர்களா? உலகின் எந்த பெரிய வீரன் வந்தாலும் தந்தை தன்னைப் பார்த்துக் கொள்வார் எனும் அதிகபட்ச நம்பிக்கை அந்த கண்களில் மின்னும். இதைவிடப் பெரிய பாதுகாப்பு இனிமேல் இல்லை எனும் நிம்மதி அந்த முகத்தில் தெரியும்.

    நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இந்த வாசகம் கேட்கிறது. இறைவனின் சித்தத்தை நிறைவேற்று பவர்களுக்கு மட்டுமே தந்தையின் கரம் கிடைக்கும். தந்தையின் விருப்பத்தை நிராகரித்து நடப்பவர்கள் எப்போதுமே அந்த கரங்களுக்குள் அடைக்கலம் புகுவதில்லை.

    அந்த நம்பிக்கையைப் பெறுவதற்குரிய வகையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

    தந்தையின் கரத்தோடு இணைந்து இருப்பவர்களுக்கே ஆறுதல் கிடைக்கும். நமது வாழ்க்கை எதில் ஆறுதல் அடைகிறது. உலகத்தின் கரங்களிலா? அல்லது உன்னதரின் கரங்களிலா?

    தந்தையோடு இருப்பதே உண்மையான பாதுகாப்பு. நமது வங்கிக்கணக்குகளும், நில புலன்களும் நமக்கான பாதுகாப்பல்ல. களஞ்சியத்தை எவ்வளவு தான் இடித்துக் கட்டினாலும் ஆன்மா இழந்து போனால் என்ன பயன்?

    நமது நம்பிக்கையை அழிந்து போகும் செல்வங்களிலிருந்து மாற்றி, இறை வனின் அருகாமையில் வைப்போம்.

    “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்..” என யோவான் 10:27-28 ல் இயேசு கூறினார்.

    இயேசுவின் கரங்கள் ஆயனின் கரங்கள். அவை நம்மைப் பற்றிக்கொள்ள ஆயத்தமாய் இருக்கின்றன. பற்றிக்கொண்டால் விட்டு விடாமல் பாதுகாக்கவும், ஆறுதல் அளிக்கவும், நம்பிக்கை அளிக்கவும் அவை தயாராக இருக்கின்றன.

    நமது இதயம் எங்கே இருக்கிறது? இறைவனின் கரங்களிலா? உலகத்தின் கரங்களிலா?

    “நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்.

    “அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்” எனும் எபிரேயர் 12:2 வசனத்தில் நம்பிக்கை வைப்போம்.

    - சேவியர்.
    நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று சொன்னவரை பிதாவாகிய தேவன் சொன்னபடி மூன்றாம் நாளிலே எழுப்பினார்.
    கிறிஸ்துவின் பாடுகள் பற்றி நாம் தியானித்து வரும் இந்த நாட்களில் கிறிஸ்துவின் பிரதானமான போதனையான தேவன் மேல் வைக்கும் விசுவாசத்தைக் குறித்து நாம் தியானிப்போம். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்(யோ:3:16) என்று வேதம் கூறுகிறது.

    இன்றைய நாட்களில் தேவைகள், வியாதிகள், பிரச்சனைகளிலிருந்து விடுதலை என்று பலவிதமான காரியங்களுக்கு பதில் தேடி அனேக இடங்களுக்கு அலைகிறவர்கள் உண்டு. இயேசுவின் நாட்களிலும் இப்படிபட்ட ஜனங்கள் அனேகர் காணப்பட்டார்கள். ஆனால் அவர்களில் யாரெல்லாம் இயேசுவின்மேல் விசுவாசமாக இருந்தார்களோ அவர்கள் அற்புதத்தைப் பெற்றார்கள்.

    அவர் தம் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்தின் மேன்மைகளையும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்பதையும் போதித்தார். இன்றைய உலகில் நாம் தேடும் அனைத்து விதமான காரியங்களுக்கும் இயேசுவின் மேல் வைக்கும் விசுவாசம் நமக்கு நல்ல பதிலை பெற்றுத்தரும். அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் அனைவருக்காகவும் அவர் சிலுவையில் ரத்தம் சிந்தியிருக்கிறார். நாம் தேவனிடத்தில் அற்புதங்களையும், அடையாளங்களையும் பெற்றுக்கொள்ள தகுதியோ, அந்தஸ்தோ தேவை இல்லை. நாம் விசுவாசத்தோடு வேண்டிக்கொண்டாலே போதும்.

    தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே. அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் (மத்:27:42,43) என்று சுற்றி இருந்த ஜனங்கள் ஏளனமாய் பேசியபோதிலும், நம்பிக்கையற்ற வார்த்தைகளைக் கூறியபோதும் தம்மை மரணத்திலிருந்து எழுப்ப வல்லமையுள்ள தேவன் மேல் விசுவாசமுள்ளவராகவே இருந்தார்.

    தம்மை மரணத்திலிருந்து எழுப்ப வல்லவரிடத்தில் தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தார். ‘பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு, தன் ஜீவனை ஒப்புக்கொடுத்தார். ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார் (எபி:2:15) என்று வேதம் கூறுகிறது.

    நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று சொன்னவரை பிதாவாகிய தேவன் சொன்னபடி மூன்றாம் நாளிலே எழுப்பினார். தேவன் கடலுக்கும் எல்லையை நியமித்து இம்மட்டும் வா,மிஞ்சி வராதே என்று தம் வார்த்தையையே எல்லையாக நியமித்தவர். அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை நமக்கு செய்ய வல்லமையுள்ளவர். கிறிஸ்துவின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் நாம் எதை கேட்டாலும் அதை செய்ய அவர் வல்லமையுள்ளவர். கிறிஸ்துவை விசுவாசிப்போம், தேவனுடைய அற்புதத்தைப் பெற்றுக்கொள்வோம்.

    - சகோதரி. யு.மேரிஅமல்ராஜ். 
    இயேசுவின் ரத்தத்தால் கழுவப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் ஆண்டவர் யுத்தம் பண்ணுகிறார். சத்துருவின் கிரியைகளை அழித்து சந்தோஷமான, சமாதானமான வாழ்வு வாழ தேவன் உங்களுக்குக் கிருபை பாராட்டுவார்.
    உண்மையாகவே இயேசு நமக்காக ரத்தம் சிந்தாமல் இருந்திருந்தால் இன்றைக்கு விலையேறப்பெற்ற ரட்சிப்பை பெற்றிருக்கவே முடியாது.

    இயேசுவின் ரத்தத்தினால் நாம் பெறுகிற முக்கியமான ஆசீர்வாதங்களைக் குறித்துத் தியானிப்போமா...

    அன்று இஸ்ரவேல் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்த போது பஸ்காவை ஆதரிக்கும்படி கட்டளையிட்டார். ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை எடுத்து நிலைக்கால்களில் பூசும்படி கட்டளையிட்டபோது அநேக ஆசீர்வாதங்களை இஸ்ரவேலர் பெற்றுக்கொண்டார்கள்.

    அதேபோல இன்றும் ஆட்டுக்குட்டியானவருடைய ரத்தத்தால் நாம் விசுவாசத்தோடு கழுவப்படும்போது, நாமும் அநேக ஆசீர்வாதங்களுக்குப் பாத்திரமாய் மாறுகிறோம்.

    துன்பம் அணுகாது

    ‘நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த ரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும், அந்த ரத்தத்தை நான் கண்டு உங்களைக் கடந்து போவேன், நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்’ யாத்.12:13

    ரத்தம் பூசப்பட்ட வீடுகளில் வாதை அணுகவில்லை. ரத்தம் பூசப்படாத ஒவ்வொரு எகிப்தியரின் வீட்டிலும் பிள்ளைகள் அழிக்கப்பட்டார்கள் என்பது நமக்குத் தெரியுமல்லவா? இயேசுவின் ரத்தம் எவ்வளவு விலையேறப்பெற்றது. உங்கள் வீட்டில், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் மேல் இயேசுவின் ரத்தத்தைப் பூசும்போது வாதை உங்கள் கூடாரத்தை அணுகுவதில்லை.

    ‘ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது’ சங்கீதம் 91:10

    எகிப்திலுள்ள ஒவ்வொருவருடைய வீட்டிலும் நடுராத்திரியில் கூக்குரல் உண்டானது. ஆனால் ரத்தம் பூசப்பட்ட இஸ்ரவேலருடைய வீடுகளில் கூக்குரல் உண்டாகவில்லை.

    அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

    ‘நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றையதினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது’ யாத்திராகமம் 12:41

    400 வருஷமாக இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலே அடிமை களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எந்த நாளில் ரத்தம் பூசப்பட்டதோ அன்று ராத்திரியிலேயே அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்தார்கள் என்று வேதத்தில் நாம் வாசிக்கிறோமே.

    பாவம், சாபம், உலக சிநேகம், கடன் பிரச்சினை... போன்றவற்றினால் அடிமைப்பட்டுக்கிடக்கிறீர்களா? எனக்கு ஒரு விடுதலை கிடைக்காதா? என ஏங்குகிறீர்களா? இயேசுவின் ரத்தம் சகல பாவம், சாபம், வியாதி, பிரச்சினை இவற்றிலிருந்து உங்களுக்கு விடுதலை கொடுக்கக்கூடியது. எனவே இன்றே ரத்தத்தினால் கழுவ ஒப்புக்கொடுங்கள். இன்றே ஒரு விடுதலையைக் காண்பீர்கள்.

    ‘அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்’ 1. யோவான் 1:7

    சத்துருவின் பிடியிலிருந்து விடுதலை

    பாவம், சாபத்திலிருந்து விடுதலை பெற்றாலும் சாத்தான் பலவிதங்களில் நம்மைப் பின் தொடர்ந்து கொண்டுதானிருப்பான். அன்று இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்தாலும் பார்வோனும், அவன் சேனைகளும் பின்தொடர்ந்தனர். ஆனால் வேதம் சொல்லுகிறது:

    ‘அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள், நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள், கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மா இருப்பீர்கள் என்றான்’ யாத்திராகமம் 14:13,14

    அன்று எகிப்தியரோடு யுத்தம் பண்ணி, அவர்களைக் கலங்கடித்து, செங்கடலில் அழித்துப்போடக் காரணம், இஸ்ரவேலர் வெற்றியாய், விடுதலையாய் வாழ வேண்டுமென்பதற்காகவே.

    இயேசுவின் ரத்தத்தால் கழுவப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் ஆண்டவர் யுத்தம் பண்ணுகிறார். சத்துருவின் கிரியைகளை அழித்து சந்தோஷமான, சமாதானமான வாழ்வு வாழ தேவன் உங்களுக்குக் கிருபை பாராட்டுவார்.

    பிரியமானவர்களே! இயேசுவின் ரத்தத்தால் கழுவப்பட இன்றே உங்களை ஒப்புக்கொடுங்கள். அற்புதங்களைக் காண்பீர்கள்.

    சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், சென்னை-54 
    கர்த்தருடைய வார்த்தைகளோடு இணைந்து அதில் உள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகும்போது நம்மை உருமாற்ற அவருடைய வார்த்தைகள் உதவுகின்றன.
    கர்த்தருடைய வார்த்தைகளோடு இணைந்து அதில் உள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகும்போது நம்மை உருமாற்ற அவருடைய வார்த்தைகள் உதவுகின்றன.

    கர்த்தருடைய வார்த்தைகளால் உருவாக்கப்பட்டது வேதாகமம். கர்த்தருடைய வார்த்தைகளோடு இணைந்து அதில் உள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகும்போது நம்மை உருமாற்ற அவருடைய வார்த்தைகள் உதவுகின்றன. மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், ஆண்டவருடைய வார்த்தைகளினால் வேதாகமம் நிறைந்து இருக்கிறது.

    இது ஒரே புத்தகம் தான் என்றாலும், ஆனால் அதில் கடவுள், நாம் அவரை பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு கிடைக்கும் இரட்சிப்பைப்பற்றியும், நாம் இந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றியும், அவருடைய விருப்பத்தை பற்றியும், மிக தெளிவாகவும், துல்லியமாகவும் நமக்கு விவரிக்கிறார்.

    உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருந்தது (சங்கீதம் 119:105). இந்த பிரபஞ்சத்தையே உருவாக்கிய கடவுளுக்கு தனி நபரின் வாழ்க்கையில் இடைப்பட்டு அவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டிய அவசியமென்ன?. நாம் பெரிய பதவியில் இருந்தாலும், கல்வி மானாக இருந்தாலும், பொருளாதார ரீதியில் மிகப்பெரிய உச்சத்தை எட்டி இருந்தாலும், நல்ல குடும்ப வாழ்க்கையை பெற்றிருந்தாலும், ஏதோ ஒரு வெற்றிடத்தை பூர்த்தி செய்ய கடவுளால் மட்டுமே இயலும்.

    அவருடைய வார்த்தை அதற்கு உறுதுணையாய் நிற்கும். மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். (மத்தேயு 4:4). ஒரு தனிமனிதனை நண் பனாக ஏற்று கொள்ள, நாம் அவருடைய கடந்த கால வாழ்க்கை, சுற்றுப்புறம் அனைத்தையும் அலசி ஆராய்கிறோம்.

    பின்னர் தான் நண்பராக ஏற்றுக்கொள்கிறோம். அதே போல கடவுளுக்கு நம்மை பற்றி அனைத்தும் தெரியும். ஆனால் நமக்கு கடவுளை பற்றி என்ன தெரியும்? அதற்கு அவருடைய வார்த்தைகளுக்கு செவிமடுப்பதே ஒரே வழி. அப்பொழுது தான் நட்பின் ஆழம் பலப்படும். ஆமென்! 
    ‘எல்லாம் நிறைவேறியது’ என்று சொன்ன இயேசுவின் வார்த்தையில் இணைவோம். ‘எல்லாம் புதிதாகும்’ அனுபவத்தைப் பெறுவோம்.
    “எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30.

    இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது.

    ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது.

    இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது.

    சுற்றியிருந்த மக்கள் நினைத்தது போலவோ, ஆளும் வர்க்கம் நிறைவேறியது போலவோ இது அவர்களுடைய வெற்றியல்ல.

    ‘எல்லாம் முடிந்தது’ என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் “எல்லாம் நிறைவேறியது” என இயேசு அதை தனது வெற்றியாய் மாற்றி எழுதினார்.

    தந்தை தனக்கு இட்ட பணியை இயேசு நிறைவேற்றி முடித்தார் என்பதே அந்த வாக்கியத்தின் சுருக்கமான விளக்கம்.

    இதன் எபிரேய வார்த்தை ‘டிடிலெஸ்தாய்’ என்பது. அதன் பொருள், ‘கடனை எல்லாம் செலுத்தி முடித்தாயிற்று’ என்பதே. இயேசுவும் பாவங்களுக்கு விலையாகக் கொடுக்க வேண்டிய தன்னுடைய உயிரைக் கொடுத்து இதோ முடித்து விட்டார்.

    ‘எல்லாம் நிறைவேறியது’ எனும் இந்த வாக்கியம் நமது வாழ்வில் புதிய நம்பிக்கைகளை விதைக்கின்ற ஒரு விஷயமாக இருக்கிறது.

    முதலாவது, நமது பாவங்களிலிருந்து நாம் விடுதலையாகி விட்டோம். “கிறிஸ்து ரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம்” (எபேசியர் 1:7) எனும் இறைவார்த்தை இதை உறுதி செய்கிறது.

    பழைய ஏற்பாட்டில் பாவங்களுக்கு ஏற்பவும், பாவம் செய்யும் நபருக்கு ஏற்பவும், பலிகள் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அந்த பலிகளையெல்லாம் இறை மகன் இயேசுவின் ஒற்றைப் பலி தேவையற்றதாகிவிட்டது.

    இப்போது நாம் செய்யவேண்டிய பலி விலங்குகளை வெட்டுவதல்ல, நம்மை நாமே வெறுத்து இறைவனிடம் சரணடைவது.

    இரண்டாவது, அவர் சாவை வென்று விட்டார். “நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண் கிறோம்” (எபி 2:9) என்கிறது விவிலியம்.

    வான தூதர்களுக்கு மரணம் இல்லை. கடவுளுக்கும் மரணம் என்பதில்லை. மரணம் இல்லாமல் மீட்பு இல்லை. அதனாலேயே இறைமகன் இயேசு மனிதனாய் பூமியில் வரவேண்டியிருந்தது. அவர் பூமியில் வந்து நிராகரிப்பையும், வலியையும், மரணத்தையும் ஏந்தினார்.

    ‘எல்லாம் நிறைவேறியது’ எனும் இயேசுவின் வார்த்தை மரணத்தை வென்ற வார்த்தை. நம்முடைய ஆன்மிக மரணத்துக்கு முடிவு கட்டும் நம்பிக்கையை விதைக்கும் வார்த்தை.

    அவரது மரணத்தையும், உயிர்ப்பையும் நம்பி அவரை ஏற்றுக்கொள்பவர்கள் இதன் மூலம் விண்ணக வாழ்வின் அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர்.

    மூன்றாவதாக, இறைவனுக்கும் நமக்கும் இடையேயான நேரடி உறவுக்கான கதவைத் திறந்து வைத்திருக்கிறது இயேசுவின் சிலுவை மரணம்.

    பழைய ஏற்பாட்டில் ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலம் மனிதர்களுக்கு அனுமதியற்ற ஒன்றாகவே இருந்தது. அதன் திரைச்சீலையைக் கடந்து செல்ல தலைமைக்குருவுக்கு அதுவும் ஆண்டுக்கு ஒரே ஒரு முறைமட்டுமே அனுமதி உண்டு. அதை மாற்றி நேரடி உறவை உருவாக்கியது, “எல்லாம் நிறைவேறியது” எனும் இயேசுவின் பணியே.

    “இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில் அவர் ரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி” என்கிறது எபிரேயர் 10:19.

    இறைவனின் மரணம் நம்மை இறைவனின் அருகில் நெருங்குவதற்கு மட்டுமல்ல, நம்மை அவருக்கு ஏற்புடையவராக மாற்றவும் செய்கிறது.

    “தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்” (எபி 10:14) எனும் வசனம் நமக்கு முழுமையான மீட்பின் நம்பிக்கையாய் இருக்கிறது.

    “மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என இறை மகனின் வருகையின் நோக்கத்தை மிகத் துல்லியமாக மார்க் 10:45 விளக்குகிறது.

    நமது வாழ்க்கையை நாம் ஒரு அலசலுக்கு உட்படுத்த இந்த சிலுவை வார்த்தை அழைப்பு விடுக்கிறது.

    “எல்லாம் நிறைவேறிற்று” என மகிழ்ச்சியாக சொல்லும் நிலையில் நாம் இருக்கிறோமா?. முழுமையாக இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கிறோமா?. இந்த நேரம் நமது வாழ்க்கை முடிந்தால், என்னிடம் தரப்பட்ட பணிகள் “எல்லாம் நிறைவேறிற்று” என சொல்ல முடியுமா? இல்லை, “ஐயோ இன்னும் நான் தொடங்கவே இல்லையே என பதறுவோமா”.

    இறை சித்தத்தை நிறைவேற்ற கீழ்ப்படிதலும், சோதனைகளைத் தாங்கும் மனமும் உள்ளவர்களாக இருக்கிறோமா?

    ‘எல்லாம் நிறைவேறியது’ என்று சொன்ன இயேசுவின் வார்த்தையில் இணைவோம். ‘எல்லாம் புதிதாகும்’ அனுபவத்தைப் பெறுவோம்.

    சேவியர்
    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டியில் மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலய ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தினை தொடர்ந்து நவ நாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை கொடி ஊர்வலம், சிறு சப்பர பவனியுடன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    பூண்டி மாதா பேராலயத்தில் பங்குத்தந்தையர்களாக பணியாற்றி மறைந்து, பூண்டிபேராலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அருட்தந்தையர்கள் லூர்துசேவியர் மற்றும் ராயப்பர் அடிகளார் நினைவு திருப்பலி நேற்று காலை 6 மணிக்கு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில் கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் மரியா-அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நடைபெற்றது.

    இந்த திருப்பலியில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டிமாதாபேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் அமலதாஸ், எடிசன்ராஜ் மற்றும் மறைமாவட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர். திருப்பலி நிறைவடைந்தவுடன் குடந்தை பெஸ்கி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இரவு 10 மணிக்கு மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பூண்டி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது. தேர்பவனியை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார். தேர்பவனி தொடங்கியதும் வாணவேடிக்கை நடைபெற்றது. தேர்பவனியின் போது பக்தர்கள் தங்களது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மரியா- புதியஏவாள் என்ற பெயரில் திருப்பலி நிறைவேற்றப்படுவதுடன் பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். 
    நெல்லை மாவட்டம் காவல்கிணறு ஏசுவின் திரு இருதய ஆலயத்தில் புனித உபகார அன்னை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நெல்லை மாவட்டம் காவல்கிணறு ஏசுவின் திரு இருதய ஆலயத்தில் புனித உபகார அன்னை திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்ற நிகழ்ச்சி தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன் அடிகள் தலைமையில் நடக்கிறது. விழா 10 நாட்கள் நடக்கிறது.

    விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு மறையுரை, நற்கருணை ஆசீரும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஒவ்வொரு திருநாளிலும் காலை திருப்பலி ஒவ்வொரு மண்டலம் சார்பில், சிறப்பிக்கப்படுகிறது.

    தொடர்ந்து 8-ம் திருநாளான வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு புதுநன்மை திருப்பலி நடக்கிறது. மாலை 7 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. 9-ம் திருநாளான 23-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது.

    10-ம் திருநாளான 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் பெருவிழா ஆடம்பர பாடல் திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கப்படுகிறது. மதியம் 3 மணிக்கு தேர்பவனியும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 11-ம் திருவிழாவான 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குகுரு மைக்கிள் மகிழன் அடிகள், பங்கு மேய்ப்பு பணிக்குழு அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    விருத்தாசலத்தில் உள்ள பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆலய பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 5-ந்தேதி இரவு சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்து கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி, சிறப்பு பிரார்த்தனை நடந்து வந்தது. கடந்த 12-ந்தேதி சிறிய தேர்பவனி மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தது.

    விழாவின் முக்கிய திருவிழாவான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், பாத்திமா அன்னையின் சொருபம் வைக்கப்பட்டது. பின்னர் தேர்பவனியை குருத்துவ பொன்விழா நாயகர் புதுச்சேரி அருட்பணி பெஞ்சமின் தொடங்கி வைத்தார்.

    தேவாலயத்தில் இருந்து புறப்பட்ட தேர் ஜங்சன்ரோடு, பஸ்நிலையம், பாலக்கரை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அப்போது ஏராளமான சிறுவர், சிறுமிகள் ஏசு கிறிஸ்துவின் பாடல்களை பாடிய படி தேருக்கு முன்னால் சென்றனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு விழா நிறைவடையும் நிகழ்ச்சி நடந்தது. 
    இறைதந்தையிடம் மனிதனின் பாவத்திற்கு பரிகாரமானார். மனித இனத்தையே இறையோடு மீண்டும் இணைத்தார். மரித்த மூன்றாம் நாள் உயிர்த்து இன்றும் வாழ்கிறார்.
    கடவுள், மனிதனை மண்ணால் உருவாக்கி, தன் உயிர் மூச்சை ஊதி உயிருள்ளவனாக ஆக்கினார். அவனுக்கு உற்றதுணையாக ஏவாளை படைத்து பரிசாக்கினார். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இந்த நிலையில் இறைவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து அவரை மாட்சிமைப்படுத்த வேண்டிய மனிதன், சாத்தானின் குரலுக்கு செவிமடுத்து, தன்னை படைத்த கடவுளின் திட்டத்தை எதிர்த்தான். அதனால் பாவ இருள் பற்றிக்கொண்டது. ஆதி மனிதன் மட்டுமல்ல, அவன் வழி வந்த மனித இனம் முழுவதும் கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தது. அதனாலேயே கடவுளின் உறவு தூரமானது.

    இந்தநிலையில் இருந்த, பாழ்பட்டு போன மனிதத்தை தேடி வந்த தெய்வம் தான் இயேசு. அவர், நம்மை கடவுளோடு ஒப்புறவாக்கி, இறை உறவிலே மீண்டும் இணைத்து, இழந்து போன மனித மாண்பை வழங்க வந்தவர். இறைத்தந்தையின் அன்பை, மன்னிப்பை, வல்லமையை மக்களுக்கு நற்செய்தியாக அறிவித்து மனம் திரும்புதலுக்கும், இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கும் மக்களை அழைத்தவர். அவர், பாவிகளுக்கும், பாமரர்களுக்கும், வரிதண்டுவோர்க்கும், வலுக்குறைந்தோர்க்கும் உறவு கரம் கொடுத்து உதவியவர்.

    அவர், பலருடைய மீட்புக்கு விலையாக தன் உயிரை கொடுக்கவே வந்தேன் என்றார். மானிட மகன் சிலுவையில் உயர்த்தப்பட வேண்டும், அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலை வாழ்வு பெறுவர் என்பதை உணர்ந்தார். அதனால் மனமுவந்து சிலுவைச்சாவின் வேதனைக்கும், அவமானத்துக்கும் தன்னை கொடுத்தார். உயிரைக்கொடுத்து நம்மை மீட்டார். அதற்கு தனது விலை மதிப்பில்லா உயிரையும், ரத்தத்தையும் விலையாக கொடுத்தார்.

    இறைதந்தையிடம் மனிதனின் பாவத்திற்கு பரிகாரமானார். மனித இனத்தையே இறையோடு மீண்டும் இணைத்தார். மரித்த மூன்றாம் நாள் உயிர்த்து இன்றும் வாழ்கிறார். தன் உயிரை விலையாக கொடுத்து நமக்கு நிலை வாழ்வு தந்தார். இயேசு போற்றி.

    அருட்சகோதரி. மிரியம், அமலவை சபை,

    சோபியா இல்லம், திண்டுக்கல்.  
    இயேசு சிலுவையில் பேசிய மொழிகளிலேயே சுருக்கமான வாக்கியம் இது தான். அந்த ஒற்றை வார்த்தை பல்வேறு ஆன்மிகப் புரிதல்களின் தொடக்கப் புள்ளியாய் இருக்கிறது.
    “தாகமாய் இருக்கிறது” (யோவான் 19:28)

    இயேசு சிலுவையில் பேசிய மொழிகளிலேயே சுருக்கமான வாக்கியம் இது தான். அந்த ஒற்றை வார்த்தை பல்வேறு ஆன்மிகப் புரிதல்களின் தொடக்கப் புள்ளியாய் இருக்கிறது.

    இயேசுவை சிலுவையில் அறைந்தது காலை 9 மணி. வெயில் உடலை வறுக்க, ரத்தம் வெளியேற, வலியும் துயரமுமாய் முதல் மூன்று மணி நேரம் கடக்கிறது. இப்போது உலகை இருள் சூழ்கிறது.

    மூன்று மணி நேர இருளின் முடிவில் இயேசு “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என கதறினார். பின்னர் ‘தாகமாய் இருக்கிறது’ என கூறுகிறார். அப்போது அவர்கள் காடியை கடற்பஞ்சில் தோய்த்து குடிக்கக் கொடுத்தனர்.

    “தாகமாய் இருக்கிறேன்” எனும் வார்த்தை இறைமகன் இயேசுவின் மனிதத் தன்மையை உறுதிப்படுத்தும் வார்த்தை. விண்ணின் மகனாக இருந்தாலும், மண்ணில் வருகையில் அந்த விண்ணக மனிதனாக வராமல் மானிட மகனாகவே வந்தார் என்பதன் சான்று. நம்மைப் போலவே வலிகளோடும், சோதனைகளோடும் வாழ்ந்தார் என்பதன் சான்று.

    ‘தாகமாய் இருக்கிறேன்’ எனும் வார்த்தை இறைவாக்கை நிறைவேற்றுதல்.

    “என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்” (சங்கீதம் 69:21) எனும் இறைவார்த்தை இதன் மூலம் நிறைவேறியது.

    “என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது (சங்கீதம் 22:5) எனும் வார்த்தையும் அவரது தாகத்தின் நிலையை முன்குறித்த இறைவார்த்தையே.

    பழைய ஏற்பாட்டில் இறைமகன் இயேசுவைக் குறித்து 332 தீர்க்க தரிசனங்கள் இருப்பதாக விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

    இயேசு எங்கே பிறப்பார், எப்படி பிறப்பார், எப்படி இறப்பார் எனும் அத்தனை விஷயங்களும் துல்லியமாக பழைய ஏற்பாட்டில் உள்ளன. பழைய ஏற்பாட்டின் முழுமை இயேசுவில் தான் என்பதன் மிகத்தெளிவான விளக்கமே இது.

    “தாகமாய் இருக்கிறேன்” என்பதற்கு ‘மனுக்குலத்தை மீட்க ஆவலாய் உள்ளேன்’ என்றும் பொருள் உண்டு. நமது பாவங்களை சுமந்தார் இயேசு. ‘அந்த பணி இதோ முடிவடையப் போகிறது. தனக்கு இடப்பட்ட பணியை செய்து முடிக்க தாகமாய் இருக்கிறேன்’ என இயேசு சொல்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.

    இயேசு சிலுவையில் நரக வேதனையை அனுபவித்தார் என்பதன் வெளிப்பாடு ‘தாகமாய் இருக்கிறேன்’. நரகம் தாகத்தின் இடம்.

    “இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும்” (லூக்கா 16:24) என நரகத்திலிருந்து செல்வந்தர் எழுப்பும் குரல் இதை நமக்கு புரிய வைக்கிறது.

    உண்மையிலேயே இயேசு சிலுவையில் நரக வலியை அடைந்தார் என்பதை இதனால் புரிந்து கொள்ளலாம். சொர்க்கத்தில் ‘பசியோ தாகமோ இரா’ என்கிறது திருவெளிப்பாடு 7:16.

    ‘தாகமாய் இருக்கிறேன்’ என்பது இறைமகன் இயேசுவின் கீழ்ப்படிதலின் வெளிப்பாடு. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என முடி வெடுத்த மகனின் தாழ்மையின் வெளிப்பாடு.

    “சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்” (பிலிப்பியர் 2:8) என்கிறது விவிலியம். மரணத்தை மட்டுமல்ல, தந்தையிடமிருந்த பிரிவை மட்டு மல்ல, வலியையும் அவர் விரும்பியே ஏற்றுக் கொண்டார். சிலுவை சுமந்து வருகையில் வீரர்கள் அவருக்கு “திராட்சை ரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை” (மார்க் 15:23). வலிகளையும் சுமந்தார் எனும் எசாயாவின் இறைவாக்கு இதனால் நிறை வேறியது.

    ‘நீதியின் பால் பசி தாகம் உடையோர் பேறுபெற்றோர்’ என மலைப்பொழிவில் பேசினார் இயேசு. இப்போது அவர் மீட்புக்காக தாகம் கொண்டார்.

    ‘என்பொருட்டு நீங்கள் பிறருக்குக் கொடுக்கும் ஒரு குவளை தண்ணீருக்கான பிரதிபலன் கூட உங்களுக்குக் கிடைக்கும்’ என இயேசு பகிர்தலை ஊக்கப்படுத்தினார். இப்போது தனது உயிரை நமக்காக கொடுக்கிறார்.

    இயேசுவின் தாகம், மனுக்குலம் மீட்கப்பட வேண்டும் எனும் தாகம். நமது தாகம் எதில் இருக்கிறது? இவ்வுலக வாழ்க்கைக்கான தேடல்களுக்கா? இல்லை விண்ணக வாழ்வுக்கான தயாரிப்புக்கா?

    கண்கள் கொண்டுவரும் சோதனைகள், மாம்சம் கொண்டு வரும் சோதனைகள், பெருமை கொண்டு வரும் சோதனைகள் என அத்தனை சோதனைகளையும் இயேசு தாண்டினார்.

    காரணம் நம்மேல் அவர் கொண்டிருந்த தாகம். பழுதற்ற ஆட்டுக்குட்டியே பலியாக முடியும் என்பதால் பாவத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவர். நாம் எதில் தாகம் கொண்டிருக்கிறோம்? பாவத்தில் பயணிக்கவா? இறைவனில் பயணிக்கவா?

    “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது” (யோவான் 4:14) என இயேசு சமாரியப் பெண்ணிடம் சொன்னார்.

    இறைமகன் இயேசு அளிக்கின்ற அந்த வாழ்வின் நீரை நாம் பருகும் போது அவரது தாகம் தணிகிறது.

    சேவியர்
    இயேசு கிறிஸ்துவில் பிரியமானவர்களே, எருசலேமிலே சாலமன் ராஜா தனது தந்தை தாவீது காண்பிக்கப்பட்ட மோரியா மலையில் ஆலயத்தை கட்ட ஆரம்பித்து, ஏழு வருடத்தில் கட்டி முடித்தான்.
    தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? (2 நாளா.6:18)

    இயேசு கிறிஸ்துவில் பிரியமானவர்களே, எருசலேமிலே சாலமன் ராஜா தனது தந்தை தாவீது காண்பிக்கப்பட்ட மோரியா மலையில் ஆலயத்தை கட்ட ஆரம்பித்து, ஏழு வருடத்தில் கட்டி முடித்தான். பின்னர் ‘வானாதி வானங்களுக்கும் மேலான இறைவன் மனுஷரோடே பூமியிலே வாசம் பண்ணுவாரோ. ஒவ்வொரு மனிதனின் இருதயத்தில் தங்கி தாபரித்து மனிதரோடு வசிப்பாரோ. இந்த ஆலயத்தில் செய்யும் விண்ணப்ப ஜெபத்தை கேட்க உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்து இருப்பதாக நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்’ என்று தன்னை தாழ்த்தி ஜெபம் செய்யத் தொடங்கினான்.

    சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இரவிலே சாலமனுக்குத் தரிசனமாகி, ‘நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி, முழு இருதயத்தோடு என் முகத்தைத் தேட தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு அவர்கள் பாவத்தை மன்னித்து அவனவனுடைய கிரியைகளின்படி தக்கதாய் பலன் அளித்து ஆசீர்வதிப்பேன்’ என்றார்.

    சாலமனின் தாழ்மையினால் தேவன் அவனோடு பேசினார்.

    ‘மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள், பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்’. (1 பேதுரு 5:5)

    ஒருவனுடைய வாழ்வில் பெருமையும், தாழ்மையும் உண்டு. எல்லா தீமைக்கும் வித்தாகிய பெருமை மனுஷனுடைய இருதயத்தில் ஆழமாக பதிந்துள்ளது. நமது உள்ளத்தில் வீணான பல மேன்மை பாராட்டுதலால் பெருமை வருகிறது. பெருமையோ ஒருவனுடைய வாழ்க்கையை அழித்துவிடுகிறது.

    தாழ்மை என்பது தேவன் நமக்கு அளிக்கும் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதமாகும். வேலை செய்யும் இடத்தில் தாழ்மை, பிரயாணத்தில் தாழ்மை, எல்லா காரியத்திலும் தாழ்மை என்று செயல்பட்டால் ஒருபோதும் இடறல் வருவது இல்லை.

    தாழ்ந்த இடத்தில் தண்ணீர் நிற்கும். உயர்ந்த இடத்தில் தண்ணீர் நிற்காது. மெய்யான, பரிசுத்தமான மனத்தாழ்மையாக வாழ்கிறவர்கள் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் பூரண சமாதானத்தின் விளக்கு பிரகாசித்துக் கொண்டு இருக்கும்.

    ராஜாவாகிய சவுல் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் தன்னைத்தானே உயர்த்தியபோது, அவனை தேவன் புறக்கணித்து தள்ளினார். ஒரு பொல்லாத ஆவி அவனைப் பிடித்துக் கொண்டது.

    ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த தாவீது, தன்னைத் தானே தாழ்த்தினபோது பலம் பெற்று இஸ்ரவேலின் ராஜாவாக மாறினார். நாற்பது வருஷம் அரசாண்டார்.

    தாழ்மையுள்ளவர்களுக்கு மிகுதியான பிரதிபலன்களைப் பரலோகத்தில் சேர்த்து வைக்கிறார். அவர்கள் ஆத்துமா நித்திய இளைப்பாறுதலை காண்பார்கள்.

    ‘அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி...’ (பிலி.2:8,9)

    சர்வ அதிகாரமும் நிறைந்த தேவனாகிய இயேசு குறித்து தேவதூதன் மரியாளிடத்தில் பேசிய போது, ‘பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும். ஆதலால் உன்னிடத்தில் பிறக்கிறவர் பரிசுத்தர்’ என்றான்.

    இயேசு மிகுந்த ஆடம்பர அரண்மனையில் பிறக்கவில்லை. அவர் மிகுந்த தாழ்மையில், அசுத்தமும் துர்நாற்றமுள்ள ஒரு மாட்டு தொழுவத்திலே பிறந்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்கும் படியாக பரலோகத்தின் சகல மகிமையையும் விட்டு ஒரு மனிதனாகும்படி இறங்கி வந்தார். அவரது இந்த உலக வாழ்க்கையின் தொடக்கம் எவ்வளவு தாழ்மையாக இருந்தது என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.

    முப்பதாவது வயதில் யோர்தான் நதிக்குச் சென்று யோவான் ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்று, எல்லோருக்கும் நன்மை செய்கிறவராய் சுற்றித் திரிந்தார். வியாதி உள்ளவர்களை குணமாக்கினார். பிசாசுகளை துரத்தி, அனேக அற்புதங்களை செய்து மரித்தோரை உயிரோடு எழுப்பினார்.

    கல்வாரி சிலுவைக்கு முன் சீடர்களின் கால்களை கழுவினார். கெத்சமனே தோட்டத்தில் பிதாவை நோக்கி ஜெபம் செய்தபோது, இயேசுவை பிடித்துச் சென்றனர். இரவில் ஐந்து பிரதான ஆசரியர்களால் விசாரிக்கப்பட்டு கன்னத்தில் அறைந்து, கோலால் அடித்து பரியாசம் செய்து, தலையில் முள்முடி சூட்டி சிலுவை சுமந்து சென்றபோது வாரினால் அடித்தார்கள். அடிக்கிறவர்களுக்கு தன் முதுகையும், தாடை மயிரை பிடுங்குகிறவர்களுக்கு தன் தாடையையும் ஒப்புக்கொடுத்தார். மூன்று ஆணிகளால் சிலுவையில் அறைந்து சரீரம் தொங்கினபோதும், ‘பிதாவே இவர்களை மன்னியும்’ என்றார்.

    அவரின் தாழ்மையை யாரால் வர்ணிக்க முடியும். பிதாவாகிய தேவன் எல்லா நாமத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் இயேசுவை உயர்த்தினார்.

    ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி.பூமணி, சென்னை-50. 
    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலயத்தின் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய பெருவிழா ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மே மாதம் 1-ந் தேதி பூண்டிமாதா பேராலய பங்குத்தந்தை பாக்கியசாமி தலைமையில் கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது.

    தொடர்ந்து ஆலயத்தில் தினசரி அருட்தந்தையர்கள் அருண்பேட்ரிக் மரிய ஜோமிக்ஸ் சாவியோ, யூஜின்டோனி, தங்கசாமி சுவக்கின் தலைமையில் நவநாள் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடந்தது. நேற்று காலை 8 மணியளவில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    தொடர்ந்து பகல் 12 மணிக்கு கிராம பொதுமக்களின் சார்பில் செண்டைமேள முழக்கத்துடன் புனித அன்னாள் சொரூபம் தாங்கிய ஆடம்பர பெரிய தேரோட்டம் நடைபெற்றது. மாலை 6.30மணியளவில் திவ்விய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. விழாவில் புள்ளம்பாடி, கோவண்டாகுறிச்சி, புதூர்பாளையம், வெள்ளனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித அன்னாள் அருள்பெற்று சென்றனர். விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    ஆங்காங்கு பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மறைவட்ட முதன்மைகுரு ஹென்றிபுஷ்பராஜ், உதவி பங்குதந்தை சதீஸ்ஏசுதாஸ், பட்டையதாரர்கள் மற்றும் அருட்சகோதரிகள் செய்திருந்தனர். விழாவையொட்டி லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மாலை 5.30 மணியளவில் புனித அன்னாளின் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும். 
    ×