என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    இறைமகன் இயேசு ‘முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப்பொறுப்பாளர்’ என்ற உவமையில் பிறரோடு நட்புறவு கொள்ளுவதின் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.
    “நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை” (சீராக் 6-15) என்பது மறைவாக்கு.

    ‘தம் நண்பர்களுக்காக உயிரைக்கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை’ என்பது இயேசுவின் இறைவாக்கு.

    நல்ல நண்பர்களை தமதாக்கிக் கொண்டு, நட்புறவை பரிமாறி வாழ்கின்ற இனிமையான வாழ்க்கைக்கு ஈடு இணை எதுவுமில்லை. இறைமகன் இயேசு ‘முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப்பொறுப்பாளர்’ என்ற உவமையில் பிறரோடு நட்புறவு கொள்ளுவதின் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.

    முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப்பொறுப்பாளர்

    செல்வந்தரான மனிதர் ஒருவருக்கு வீட்டுப்பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர் மீது பழி சுமத்தப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட தலைவர், “உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப்பொறுப்பாளராய் இருக்க முடியாது” என்று அவரிடம் கூறினார்.

    “வீட்டுப்பொறுப்பில் இருந்து தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே, மண் வெட்ட என்னால் இயலாது. இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறதே” என்று அவர் வருந்தினார். வீட்டுப்பொறுப்பிலிருந்து இன்னும் சில நாட்களில் அவர் நீக்கப்படப் போகின்றபடியினால், தலைவர் நீக்கிவிடும் போது பிறர் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்மதியோடு ஒரு செயலை செய்கின்றார்.

    வீட்டுப்பொறுப்பாளர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை வரவழைக்கிறார். அவரிடம் கடனைக் கேட்கிறார். ‘நூறு குடம் எண்ணெய்’ என்பதை ‘ஐம்பது குடம் எண்ணெய்’ என்று எழுதச்சொல்கிறார். இன்னொருவர், ‘நூறு மூட்டை கோதுமை’ என்றவுடன் ‘எண்பது மூட்டை கோதுமை’ என்று எழுதச்சொல்கிறார்.

    நேர்மையற்ற அந்த வீட்டுப்பொறுப்பாளரின் முன்மதியைக் கண்டு, கடன்பெற்றவர்கள் அவரைப் பாராட்டினர்.

    ேநர்மறைப் பார்வையுடன் புரிவதற்கும் விளக்குவதற்கும் இந்த உவமை சற்று முரண்பாடுடன் காணப்படுகின்றது. இது மறைநூல் அறிஞர்களுக்கோ, மக்களுக்கோ கூறப்பட்டதில்லை. மாறாக, இயேசு தமது சீடர்களுக்கே கூறியதாகும்.

    நீதியற்ற ஒரு பணியாளன், நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு தனக்கென்று நண்பர்களைத் தேடிக்கொள்ளுவதைப் பற்றிக் கூறுகின்றார்.

    வீட்டுப்பொறுப்பாளர்

    பாலஸ்தீன நாட்டில் அநேக செல்வந்தர்கள் இருந்தார்கள். யூதர்கள் அனைவரும் செல்வந்தர்களைக் குறித்து நன்கு அறிந்திருந்தனர். இவர்கள் தங்கள் உடைமைகளை மேற்பார்வை செய்ய வீட்டுப்பொறுப்பாளர்களையும் நியமித்திருந்தனர். செல்வந்தர்கள் உடைமைகளை குறித்த அத்தனை விவரமும் அவர்களை விட வீட்டுப் பொறுப்பாளர்களுக்கே தெளிவாக தெரியும்.

    செல்வந்தர்களின் தொழில் செழிப்புறுவதும், நலிவடைவதும் இந்த வீட்டுப் பொறுப்பாளர்களின் கரத்தில் தான் உள்ளது. சொல் ஆளுமையும், அறிவும், திறமையும், முன்மதியும் நிறைந்த வீட்டுப்பொறுப்பாளர்கள் தான் செல்வந்தர்களின் பலம் ஆகும்.

    இங்கே குறிப்பிடப்படும் வீட்டுப்பொறுப்பாளர் ஒரு அடிமை தான். எனினும், தன் தலைவரின் உடைமைகளுக்கு பொறுப்பாளியும் இவர் தான். தன்னுடைய அதிகாரம், பொறுப்பு எடுபட்டுப் போகக்கூடிய ஒரு இக்கட்டான நிலைக்கு உட்படுகின்றார்.

    முன்மதியோடு செயல்படுதல்

    வீட்டுப்பொறுப்பாளர் இங்கே நீதியற்றவராய் முனைந்து செயல்படத் துணிகிறார். இவரைப் போல் கடனாளிகளும் அநீதியாளர்களாகவே மாறிப்போகின்றனர். தன்னுடையவற்றில் இருந்து வீட்டுப்பொறுப்பாளி கடன் கொடுக்கவில்லை என்றாலும், கடன் கணக்கு தன்னுடைய கையில் இருக்கும் வரை இதை மாற்றவோ திருத்தவோ அவரால் முடியும். ஏனெனில் கடன் பெற்றவர்கள் யார் யார் தன்னிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறார்கள் என்பது தலைவருக்குத் தெரியாது.

    கடன் பெற்றவர்கள் அவரிடம் ஒரு ஒப்பந்தத்துடனேயே நிலத்தினை வாங்கியிருப்பார்கள். நிலத்திற்கூரிய கிரயத்தை பணமாக அல்லது பொருளாக செலுத்துவதே வழக்கம். இங்கும் பொருளாக செலுத்தவே உடன்பட்டிருக்கிறார்கள்.

    முதலாவது மனிதர் நூறு குடம் எண்ணெய் கடன்பட்டிருக் கிறார். நூறு குடம் எண்ணெய் ஏறக்குறைய 3,700 லிட்டருக்குச் சமம். இது ஒலிவ எண்ணெயாக இருக்கலாம்.

    இரண்டாவது கடன்காரர் கோதுமை கடன்பட்டவர். ஏறக்குறைய நூறு கலம். நூறு கலம் கோதுமையின் விலை ஏறக்குறைய நான்காயிரம் ரூபாய். இதை மாற்றி எண்பது கலம் என்று எழுதும்படி வீட்டுப்பொறுப்பாளர் கூறுகின்றார்.

    வீட்டுப்பொறுப்பாளர் தன் விருப்பப்படி ஒருவருக்கு சரிபாதி கடனையும், மற்றவருக்கு ஐந்தில் ஒரு பங்கு கடனையும் குறைக்கின்றார்.

    இங்கே இவரின் செயலும் அநீதி, பொருளும் அநீதி. ஆனால் நேர்மையற்ற உலகப்பொருள் மூலம் தனக்கு அடைக்கலம் தருகின்ற, நேசிக்கின்ற, தனக்கு நன்றியுணர்வு காட்டுகின்ற இரு நண்பர்களை உருவாக்குகின்றார். இந்த முன்மதியையே தலைவரும் பாராட்டுகின்றார்.

    நண்பர்களைத் தேடுவோம்

    பணம் உடையவருக்கு நண்பர் பலர் இருப்பர். இந்த செல்வத்தையும், நல்வாழ்வையும், மேன்மையையும் கொடுக்கிறவர் கடவுள் (சஉ. 6:2).

    நம் வாழ்வில் அருளப்படுகின்ற செல்வங்கள் நம் சுய நலனுக்கானதல்ல. இது பிறர் வாழ்வுக்காகவும் பகிரப்பட வேண்டியதே. நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான் (நீதி 17:17).

    சமயம், இனம், மொழி, தேசம் என்ற எல்லைகளைக் கடந்து மனித நேயத்துடன் எல்லாருடனும் நட்புறவு கொள்ள நம் உலகப் பொருள்கள் உதவிடட்டும். குருவான இயேசு தம் சீடர்களை ‘தோழர்களே’ என்று நட்புறவுடன் அழைத்தார். அவர்களை இறுதிமட்டும் நேசித்தார்.

    சில விரற்கடை அளவாயுள்ள ஆயுட்காலத்தை கொண்ட இம்மானிட பிறப்பில் பல பண்பில் உயர்ந்த நல்ல நண்பர்களை நமதாக்கி கொண்டு, இறைவழியில் நட்புறவு கமழும் நிறைவாழ்வு வாழ்வோம்.

    அருட்பணி. ம. பென்னியமின், உண்ணாமலைக்கடை. 
    தஞ்சை பூக்காரத்தெருவில் திருஇருதய பேராலயம் உள்ளது. இந்த பேராலய ஆண்டு திருவிழா நேற்று மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தஞ்சை பூக்காரத்தெருவில் திருஇருதய பேராலயம் உள்ளது. இந்த பேராலய ஆண்டு திருவிழா நேற்று மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையில் பாடல்திருப்பலியும், மாலையில் நவநாள் ஜெபம், சிறுதேர்பவனி, மறையுரை மற்றும் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறுகிறது.

    இத்திருவிழா அடுத்த மாதம் (ஜூலை) 8-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 6-ந் தேதி மாலை கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ்அக்குவினாஸ், 7-ந் தேதி சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆகியோர் தலைமையில் நற்கருணை பெருவிழாவும், தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் முன்னிலையில் கூட்டுப் பாடல் திருப்பலியும் நடக்கிறது. 7-ந் தேதி இரவு 8.30 மணியளவில் தேர்பவனி நடைபெறுகிறது.



    திருஇருதய பேராலயம் கட்டப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பேராலய வளாகத்தில் புதிதாக 80 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

    கொடியேற்ற விழாவுக்கு பேராலய பங்குத்தந்தை செபஸ்டின் பெரியண்ணன் தலைமை தாங்கினார். முன்னதாக புதிய கொடிகம்பத்துக்கு புனிதம் செய்யும் சடங்கு நடந்தது. தொடர்ந்து கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை தவிர்த்து அநியாயத்துக்கு எதிராகவே எப்பொழுதும் நின்று கண்முன் நடக்கும் அநீதியை கண்டு கோபமுற்ற இயேசுவின் அறச்சீற்றம் இத்தவக்காலத்தில் நமதாகட்டும்.
    கோபம் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அது வராமல் காக்க வேண்டும். மனிதனிடம் என்னென்ன குணங்கள் உண்டோ அவையெல்லாம் இயற்கையானவை. மனிதனுக்கு தேவை என்பதால் தான் இறைவன் அந்த குணங்களை படைத்திருக்கிறான். அந்த குணங்களுள் ஒன்று கோபம். கோபம் கொள்ளாத மனிதன் இருக்க முடியாது. கோபமிருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பது பழமொழி. மனிதர்கள் கோபப் படுகிறார்கள் சரி. இயேசுவே விவிலியத்தில் கடுமையாக கோபத்தை வெளி படுத்துகிறார் (யோவான் 2:13-25). என் தந்தையின் இல்லத்தை, கோவிலை வணிக கூடாரமாக்காதீர்கள் என கோபம் கொண்டு அடித்து விரட்டுகிறார். ஆலயம் என்பது காசு பார்க்கும் இடமல்ல. அது இறைவேண்டலின் வீடு என்று சீறுகிறார். இது கோபத்தை தாண்டிய அறச்சீற்றம் என்கிறார்.

    ஒருவனுக்கு கோபமே வராது என்றால் அவனுக்கு எதுவுமே வராது. அன்பு கொண்ட மனம் தான் கோபம் கொள்ளும். கோபம் கொண்ட மனம் தான் அன்பு கொள்ளும். எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை தவிர்த்து அநியாயத்துக்கு எதிராகவே எப்பொழுதும் நின்று கண்முன் நடக்கும் அநீதியை கண்டு கோபமுற்ற இயேசுவின் அறச்சீற்றம் இத்தவக்காலத்தில் நமதாகட்டும்.

    - வில்லியம், பங்குத்தந்தை, தூய லூர்து அன்னை ஆலயம், வடகரை. 
    இயேசுவை நம் வாழ்வில் நாம் அனுமதிக்கும் போது நிச்சயமாக அவர் போதுமான பலத்தை நமக்கு தருவார். னைத்து துயரங்களில் இருந்தும் நம்மை விடுவிப்பார்.
    நற்செய்தியில் இயேசுவை அன்பு செய்து அவரை பின்பற்றியது, பெத்தானியாவில் இருந்த மரியா, மார்த்தா, லாசர் என்பவர்களின் குடும்பம். இவர்கள் இயேசுவின் சீடர்களாக, நண்பர்களாக விளங்கினார்கள். ஆண்டவரே, உன் நண்பர் லாசர் நோயுற்று இருக்கின்றார் என்று இயேசுவுக்கு செய்தி மட்டுமே அனுப்பப்பட்டது. இயேசு அவர்களை அன்பு செய்ததால், நட்போடு பெத்தானியாவுக்கு சென்றார். ஆனால் அதற்குள் லாசர் இறந்து நான்கு நாள் ஆயிற்று.

    இயேசுவை கண்ட லாசரின் சகோதரிகள் அழுது புலம்பினார்கள். அவர்களின் துயரத்துக்கு செவி சாய்த்து, அவர்களோடு அழுது, துக்கத்தில் தோள் கொடுத்து, உள்ளம் குமுறி நொந்தார் இயேசு. இதுதான் அவருடைய அன்பு. இறைத்தந்தையால் நாம் வாழ்வு பெற அனுப்பப்பட்ட ஆண்டவர், நமக்கு செவிசாய்த்தார். நாம் விடுதலை பெற நமக்காக கண்ணீர் சிந்தினார். நம் பாவங்களுக்காக அவர் காயப்பட்டார்.

    இயேசுவின் நண்பனாக இருக்க, லாசர்களாக, நெருக்கமானவர்களாக நம்முடைய செயல்பாடுகள் மாற வேண்டும். லாசரின் கல்லறை கல்லை அப்புறப்படுத்தி, அவரை உயிர்த்தெழ செய்தார் இயேசு. ஆனால் நாம் கோபம், ஆணவம், பொறாமை உள்பட பல்வேறு காரணங்களால் பலருக்கு கல்லறை கட்டி, அவர்கள் வாழ்வை இழக்க காரணமாக இருக்கின்றோம்.

    இயேசுவை நம் வாழ்வில் நாம் அனுமதிக்கும் போது நிச்சயமாக அவர் போதுமான பலத்தை நமக்கு தருவார். அத்துடன் பலருக்கு நாம் கட்டிய கல்லறைகளின் கல்லை அப்புறப்படுத்த துணை புரிவார். அனைத்து துயரங்களில் இருந்தும் நம்மை விடுவிப்பார். எனவே, இத்தவக்காலத்தில் மட்டுமல்ல என்றுமே இயேசுவின் நண்பனாக வாழ நாம் முற்படுவோம்.

    அருட்பணி. அ.ஜோசப் செல்வராஜ், முதன்மை செயலாளர்,

    திண்டுக்கல் மறைமாவட்டம். 
    விவிலியத்தில் ரத்தம் என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ரத்தம் எனும் குறியீடு உணர்த்துகின்ற சிந்தனைகள் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நிறையவே உண்டு.
    விவிலியத்தில் ரத்தம் என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ரத்தம் எனும் குறியீடு உணர்த்துகின்ற சிந்தனைகள் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நிறையவே உண்டு.

    ‘ரத்தம்’ என்பது விவிலியத்தில் முன்னூறு முறைக்கு மேல் பயன்படுத்தப்படுகிறது. ‘ரத்தம் என்பது உயிர்’ என விவிலியம் குறிப்பிடுகிறது. ‘உயிர்களின் ரத்தத்தை, உயிராகிய ரத்தம்’ என விவிலியம் கூறுகிறது.

    “எந்த உடலையும் குருதியோடு உண்ணாதீர்கள்” ஏனெனில், எல்லா உடலின் உயிரும் குருதியே” என லேவியர் 17:14 குறிப்பிடுகிறது. ரத்தம் என்பது வாழ்வுக்கு சமமாக குறிப்பிடப்படுகிறது.

    பழைய ஏற்பாடு, ரத்த பலிகளை அங்கீகரித்தது. எனவே தான், ரத்தம் பூமியில் சிந்தப்படலாம், ஆனால் அதை உணவாக உட்கொள்ளக் கூடாது என விவிலியம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

    கடவுள் தனது சாயலாக மனிதனைப் படைத்து, தனது உயிர்மூச்சையே வாழ்வாகக் கொடுத்தார். எனவே கடவுள் விரும்புகிற பண்பு களை வெளிப்படுத்துகிற வாழ்வு உடையவனாக மனிதன் வாழவேண்டும். அதையே இறைவன் விரும்புகிறார்.

    கடவுள் ஒரு நல்ல தலைவராக, நல்ல முதலாளியாக இருக்கிறார். நாம் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்குரிய அத்தனை வசதிகளையும் செய்து தருகின்றார்.

    “கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதே. நன்றி உணர்வுடன் ஏற்றுக்கொண்டால் எதையும் விலக்க வேண்டியதில்லை” என்கிறது 1 திமோத்தேயு 4:4.

    கடவுளால் படைக்கப்பட்ட எல்லாம் நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கடவுள் ஒரு சிலவற்றை விலக்கவேண்டுமென காலப்போக்கில் சட்டங்களை தருகிறார். கடவுள் படைத்தவை அனைத்தும் நல்லவை, ஆனால் அவை படைத்தவரின் கட்டுப்பாட்டில் பயன்படுத்த வேண்டும் எனும் சிந்தனையை அது தருகிறது.

    கடவுளின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் எதையும் உணவாக்கிக் கொள்ள முடியாது என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி. அப்படி மீறி உட்கொள்வது பாவமாகி விடுகிறது. “பெருந்தீனிக்காரரைப் போல உணவு உண்ணாதே” என விவிலியம் அத் தகைய மனிதரை எச்சரிக்கிறது.

    “வீரர்கள் கொள்ளைப் பொருட்கள் மேல் பாய்ந்து, ஆடுகளையும், மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையில் போட்டு, அடித்து, அவற்றை ரத்ததோடே உண்டார்கள்” என 1 சாமுவேல் 14:32 கூறுகிறது. இது ஆண்டவருக்கு எதிரான பாவமாக மாறிவிட்டது.

    2 சாமுவேல் 23-ம் அதிகாரம் தாவீது மன்னனையும் அவருடைய வலிமை மிகு வீரரையும் பற்றிய ஒரு செய்தியை விவரிக்கிறது. போர் காலம்- தாவீதுக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. அப்போது அவரது வீரர்கள் அவருக்கு தன்ணீர் கொண்டு வர முடிவெடுக்கிறார்கள். எதிரிகளின் எல்லைகளுக்குள் புகுந்து போய் தண்ணீர் கொண்டு வருகின்றனர். ஆனால் அதை தாவீது பருக மறுத்து விடுகிறார்.

    “தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்றவர்களின் ரத்தமன்றோ இது! ஆண்டவரே, இதை நான் எவ்வாறு குடிக்க முடியும்?’ என்று சொல்லி, அதை குடிக்காமல் விட்டார் தாவீது.

    தண்ணீரைக் கூட ரத்தத்தைப் போல பாவித்து, அதைக் கூட குடிக்க மனமில்லாமல் இருந்தார் தாவீது. அந்த அளவுக்கு மனச்சான்றோடு வாழ்ந்தார், தாவீது.

    மனிதனுடைய செயல்களை மூன்றாகப் பிரிக்கலாம்.

    1. அறிவு சார்ந்த செயல்: ஒரு விஷயம் சரியா, தவறா என்று ஆராய்ந்து பார்த்து செய்கின்ற செயல் இது என சொல்லலாம்.

    2. உணர்வு சார்ந்த செயல்: ‘இந்த செயலைச் செய்ய விரும்புகிறேன், எனது உணர்வு இதை எனக்கு பரிந்துரை செய்கிறது’ என முடிவெடுக்கின்ற செயல்.

    3. மனச்சான்று சார்ந்த செயல்: நான் எதைச் செய்யலாம் என மனசாட்சி சார்ந்து முடிவெடுப்பது.

    தாவீது எடுத்த முடிவு, மனசாட்சி சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு. இந்த மனசாட்சிகளையும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

    1. துர்மனசாட்சி: நமது துர்மனசாட்சியை விட்டு இறைவனை நோக்கி திரும்பி வரவேண்டும். எப்படி தாவீது சரியான ஒரு செயலைக் கூட மனசாட்சிக்கு விரோதமாய் செய்யாமல் இருந்தாரோ, அப்படிப்பட்ட மனசாட்சி நமக்கு வேண்டும்.

    2. மாசு படிந்த மனசாட்சி: ‘கடவுளை அறிந்திருப்பதாய் சொல்லிக் கொள்கின்றனர், ஆனால் அவர்களுடைய செயல்கள் அதை மறுதலிக்கின்றன’ என மாசு படிந்த மனசாட்சி உடையவர்களை விவிலியம் சித்தரிக்கிறது.

    3. வலுவற்ற மனசாட்சி: இது நல்ல சிந்தனைகள் இருந்தாலும் அதைச் செய்வதற்குரிய வலு இல்லாத மனசாட்சியைப் பற்றியது. இதைப் பற்றியும் விவிலியம் பேசுகிறது. பாவம் செய்ய வேண்டாம் என முடிவெடுத்தாலும் மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுகின்ற நிலமை வலுவற்ற மனசாட்சியின் வெளிப்பாடு.

    நாம் நமது வாழ்க்கையில் இருக்கின்ற தீய, மாசுபடிந்த, வலுவற்ற மனசாட்சியை விலக்கி விட்டு நல்ல, தூய்மையான வலிமையான மனசாட்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உயிர் எனும் ரத்தம், இந்த சிந்தனைகளைக் கொண்டிருக்கும் போது கடவுள் விரும்பும் குணாதிசயங்களை நாம் வெளிப்படுத்த முடியும்.
    மணப்பாறையை அடுத்த என்.பூலாம்பட்டியில் புனித ஸ்நாபக அருளப்பர் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
    மணப்பாறையை அடுத்த என்.பூலாம்பட்டியில் புனித ஸ்நாபக அருளப்பர் ஆலயம் உள்ளது. பழமையான இந்த ஆலயம் கட்டப்பட்டு 300-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் திருவிழா கடந்த 15-ந் தேதி மாலை திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலி நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் அலங்கரிப்பட்ட 4 தேர்கள் சிறப்பு திருப்பலிக்கு பின் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து ஆலயத்தை அடைந்தன. நேற்று மாலை பெரிய தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட புனித ஸ்நாபக அருளப்பர் சொரூபம், பெரிய தேரில் வைக்கப்பட்டதை அடுத்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் பங்குத்தந்தைகள் தேரை மந்திரித்தனர்.

    முன்னால் 4 சப்பரங்கள் செல்ல அதை தொடர்ந்து ஆலயம் முன்பிருந்து பங்குத்தந்தைகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேர்பவனியை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். வீதிகளில் தேர் சென்றபோது உப்பு மற்றும் பொட்டுக்கடலையை தூக்கி வீசினர். வீதிகளில் பவனி வந்த தேர் ஆலயத்தை அடைந்தது.

    திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆண்டனி டிவோட்டா, திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். திருவிழாவின்போது பொதுமக்கள் துடைப்பத்தை வாங்கி கோவிலில் போட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். திருவிழாவையொட்டி அதிக அளவில் மாம்பழக்கடைகள் வைக்கப்பட்டிருந்தன. 
    குழப்பத்தில் வழிகாட்டவும், சோர்வில் உற்சாகமூட்டவும், பாவத்தை உணரவும், எப்போதும் இறைவனை நினைக்கவும் திருப்பாடல்கள் துணை செய்கின்றன.
    விவிலியம்! கிறிஸ்தவத்தின் புனித நூல். இறைவனின் ஏவுதலால் மனிதர்களால் எழுதப்பட்ட நூல் இது. இந்த உலகம் தோன்றும் முன்பு தொடங்கி, அழிவதற்குப் பின்பு வரையிலான நிகழ்வுகள் இந்த நூலில் உண்டு.

    ஆதிமனிதன் பாவத்தால் ஏதேனை விட்டு வெளியேறுகிறான், கடைசியில் மனிதன் மீட்பினால் இறைவனை அடைகிறான். ஆதியில் சாத்தான் ஏதேனுக்குள் நுழைகிறான். கடைசியில் இறைவனால் அவனும் அவன் தூதர்களும் அழிகின்றனர்.

    மனிதன் இறைவனின் அருகாமையை விட்டு வெளியேறுகிறான் என்பதில் ஆதியாகமம் பயணிக்கிறது. அப்படி பாவத்தின் பிடியில் விழுந்த மனிதனை இறைவன் எப்படி வழிநடத்துகிறார், மீட்கிறார் என்பதில் பைபிள் நிறைவடைகிறது.

    பைபிள் என்பது, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, இணை திருமறைகள் எனும் மூன்று பிரிவுகளின் தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்பிலும் பல நூல்கள் உண்டு. பழைய ஏற்பாட்டில் 39 நூல்களும், புதிய ஏற்பாட்டில் 27 நூல்களும், இணைதிருமறையில் 9 நூல்களும் உள்ளன.

    இந்த நூல்களில் மிக முக்கியமான நூல்களில் ஒன்று தான் திருப்பாடல்கள்! கிறிஸ்தவர்களால் அதிகம் பயன் படுத்தப்படும் நூல்களில் ஒன்று திருப்பாடல்கள். “வாழ்த்துப் பாடல்களின் தொகுப்பு” என்று இந்த நூலை அழைக்கின்றனர்.

    திருப்பாடல்கள் 150 பாடல்களின் தொகுப்பு. பைபிளில் உள்ள நூல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் எழுதுவது தான் வழக்கம். அல்லது ஒருவர் சொல்லச் சொல்ல இன்னொருவர் எழுதுவதுண்டு. ஆனால் திருப்பாடல் களைப் பொறுத்தவரை பல எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

    தாவீது மன்னர் இந்த சங்கீதங்களில் சுமார் 73 பாடல்களை எழுதியிருக்கிறார். எனவே பொதுவாக இதை தாவீது மன்னனின் சங்கீதங்கள் என அழைப்பதுண்டு. இவற்றைத் தவிர மோசே ஒரு பாடலையும், ஆஸாப் பன்னிரண்டு பாடல்களையும், கோராவின் மகன்கள் 10 பாடல்களையும், ஹெர்மான் ஒரு பாடலையும், எசேக்கியா பத்து பாடல்களையும், ஏதேன் ஒரு பாடலையும், சாலமோன் இரண்டு பாடல்களையும் எழுதியுள்ளனர். மிச்சமுள்ள பாடல்களின் ஆசிரியர்கள் யார் என்பதில் மாற்றுக்கருத்துகள் உள்ளன.

    சுமார் ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு இது என்பது இந்த நூலுக்கு இன்னும் வலிமையும், அழகும் சேர்க்கிறது. கி.மு. பதினான்காம் நூற்றாண்டு முதல், கி.மு. நான்காம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதிகாரங்களைப் பொறுத்தவரையில் சங்கீதங்கள் தான் நீளமான நூல். வார்த்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் எரேமியா நூல் பெரியது என்கிறது புள்ளி விவரம்.

    ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்த நூலில் பல்வேறு இறை சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. இறைவனை நோக்கி எழுப்பப்படுகின்ற விண்ணப்பங்களாகவும், இறைவனை நோக்கி முறையிடுகின்ற மன்றாட்டுகளாகவும், எதிரியைப் பழிவாங்குமாறு கடவுளிடம் வேண்டுவதாகவும், இறைவனைப் புகழ்ந்து பாடுவதாகவும், பிறருக்கு அறிவுரை சொல்வதாகவும், வரலாற்று பாடல்களாகவும், தீர்க்கதரிசனங்களாகவும் பல்வேறு முகம் காட்டுகின்றன திருப்பாடல்கள்.

    பழைய ஏற்பாட்டு நூல்களின் ஒன்றான திருப் பாடல்களின் வசனங்கள் புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. பழைய ஏற்பாட்டு நூல்களிலேயே அதிக முறை கோடிட்டுக் காட்டப்படும் நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவும் தனது போதனைகளில் திருப்பாடல்களை குறிப்பிடுவதால் இது சிறப்பிடம் பிடிக்கிறது.

    திருப்பாடல்களின் வரலாறு இப்படி இருந்தாலும் இது இன்றைக்கும் ஆன்மிகத்தைச் செழுமைப்படுத்தும் நூலாக அமைவதால் இதன் முக்கியத்துவம் நீடிக்கிறது. இந்தப் பாடல் களிலுள்ள வசனங்கள் வழியாக இறைவன் நம்முடன் நேரடியாகப் பேசும் அனுபவம் கிடைக்கிறது. துயரத்தின் பிடியில் இருக்கிறோமா? ஆனந்தத்தின் வழியில் நிற்கிறோமா? பாவத்தின் பாதையில் நடக்கிறோமா? எல்லா தருணங்களுக்கும் ஏற்ற பாடல்கள் இதில் உண்டு.

    இது கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் யூதர்களும் பயன் படுத்தும் நூலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இனிமையாக, இசையோடு இணைந்து பாடுவதற்கு உகந்த பாடல்களாக அமைந்துள்ளன. வார்த்தைகளின் ஒலி அடிப்படையிலான பாடல்களாக இல்லாமல், கருத்துகளின் ஒருங்கிசைவு அடிப்படையிலான பாடல்களாய் இவை அமைந்துள்ளது இனிமையானது.

    திருப்பாடல்கள் நமது வாழ்வின் முக்கியமான அங்கமாக மாறிவிட்டது. அதை மனதார விரும்பி ஏற்றுக்கொள்பவர்களுக்கு துயர் துடைக்கும் தோழனாக, வழிகாட்டும் ஆசானாக, புதியவை சொல்லும் ஆசிரியராக, வரம் தரும் இறைவனாக நம்மோடு பயணிக்கும்.

    திருப்பாடல்கள் பிரபலமாய் இருக்க முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இறைமகன் இயேசுவின் வருகையை தீர்க்க தரிசனமாய் சொல்கிறது. இயேசுவின் பிறப்பு, பாடுகள், மரணம், உயிர்ப்பு எல்லாமே திருப்பாடல்களில் மறைமுகமாய் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இரண்டு, வாழ்வின் எல்லா சூழல்களிலும் ஆறுதல் தரக்கூடிய பாடல்களாக இவை இருக்கின்றன. குழப்பத்தில் வழிகாட்டவும், சோர்வில் உற்சாகமூட்டவும், பாவத்தை உணரவும், எப்போதும் இறைவனை நினைக்கவும் திருப்பாடல்கள் துணை செய்கின்றன.

    ‘திருப்பாடல்கள்’ - ஆன்மிகத்தின் தேடல்கள், வாழ்வின் பாடங்கள்.

    சேவியர், சென்னை. 
    நாகர்கோவில் அருகே சரல் தூய பேதுரு பவுல் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    நாகர்கோவில் அருகே சரல் தூய பேதுரு பவுல் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவில் இன்று காலை 6.30 மணிக்கு கல்லறை தோட்டத்தில் திருப்பலி, மாலை 5.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியுஸ் தலைமைதாங்கி திருவிழா கொடியேற்றிவைக்கிறார். அதைதொடர்ந்து ஜெபமாலை, நவநாள் திருப்பலி ஆகியவை நடக்கிறது.

    விழாநாட்களில் தினமும் காலை திருப்பலி, மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி, இரவு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவில் 30-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மதியம் 12 மணிக்கு அன்பு விருந்து, இரவு 8 மணிக்கு அன்பியங்களுக்கு இடையே நடனப்போட்டி ஆகியவை நடக்கிறது.

    1-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, 8 மணிக்கு திருப்புமுனை ஆயர்இல்லம் அருட்பணியாளர் ஆன்றனி அல்காந்தர் கலந்துகொண்டு ஆடம்பர திருவிழா திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து விழாவை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பெஸ்கி, அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள். 
    நெய்வேலி அருகே உள்ள ரோமாபுரியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    நெய்வேலி அருகே உள்ள ரோமாபுரியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 17-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆலய பங்கு தந்தை கிறிஸ்துராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதை தொடர்ந்து தினசரி கூட்டு திருப்பலியும், தேர் பவனியும் நடைபெற்று வந்தது. 18-ந்தேதி மாலையில் நவநாள் திருப்பலியும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனியையொட்டி வெள்ளக்குளம் அருட்தந்தைகள் ஆரோக்கிய ஜான் ராபர்ட், ரெஜிஸ் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் புனித அந்தோணியார், மாதா, ஏசு ஆகியோரது சொரூபங்கள் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றது.

    தேரை கிறிஸ்தவர்கள் தோளில் சுமந்தபடி, கடலூர் மெயின்ரோடு, நெய்வேலி மேம்பாலம் வழியாக பவனியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தனர். இதில் விருத்தாசலம், நெய்வேலி, டவுன்ஷிப், வடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை கிறிஸ்துராஜ், வேதியர் தேவராஜ் ஆகியோர் செய்திருந்தனர். 
    திருச்செந்தூர் அமலிநகர் புதுமை புனிதர் அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்செந்தூர் அமலிநகர் புதுமை புனிதர் அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு ஆலயத்தில் இருந்து கொடிபவனி புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது. பின்னர் தூத்துக்குடி பங்குதந்தை பெஞ்சமின் டி சூசா திருவிழா கொடியேற்றி மறையுரையாற்றினார். இதில் பங்குதந்தை ரவீந்திரன் பர்னாந்து உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    நவ நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருயாத்திரை திருப்பலி, மதியம் 12 மணிக்கு ஜெபமாலை, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை பிரார்த்தனை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

    வருகிற 30-ந்தேதி மாலையில், புனிதரின் சப்பர பவனியும், தொடர்ந்து பங்குதந்தை அமலதாஸ் தலைமையில் மாலை ஆராதனையும் நடக்கிறது. அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலி, 7.30 மணிக்கு குரு செல்வராசு தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி, மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீரை தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது. 
    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள அந்தோணியார் கோவில் தேர் திருவிழா ஆண்டு தோறும் ஜூன் மாதம் நடைப்பெறும். இக்கோவில்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள அந்தோணியார் கோவில் தேர் திருவிழா ஆண்டு தோறும் ஜூன் மாதம் நடைப்பெறும். இக்கோவில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.

    இக்கோவில்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஆங்கில வழிமுறை திருப்பலி நடைப்பெற்று. பின்னர் மலையாள வழிமுறை திருப்பலியும், அதனை தொடர்ந்து தமிழ் வழிமுறையில் திருப்பலி நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து அந்தோணியரை பல்லாக்கில் வைத்து கோவிலில் இருந்து அனைத்து தரப்பு மக்களும் ஊர்வழமாக குன்னூர் மவுண்ட் ரோடு வழியாக மார்கெட், பஸ் நிலையம், வி.பி. தெரு வழியாக மீண்டும் அந்தோணியர் கோவிலை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் அனைத்து தரப்பு மதத்தினரும் கலந்து கொண்டனர்.
    கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் இந்த நாட்களில் சிலுவையின் மேன்மை குறித்து தியானிப்போம்.
    கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் இந்த நாட்களில் சிலுவையின் மேன்மை குறித்து தியானிப்போம். தேவனுடைய சாயலிலே படைக்கப்பட்ட மனிதன் பாவத்தின் மூலமாக தேவனோடு இருந்த நெருங்கிய உறவை இழந்து பாவியானான். ஆபிரகாமின் மூலமாக வரக்கூடிய சந்ததியின் மூலமாக முழு உலகையும் தேவன் ரட்சிக்கவும், பரிசுத்தமுள்ள ஒரு சந்ததியை உருவாக்கவும் விரும்பினார். மனிதனிடம் பரிசுத்தமுள்ள வாழ்வை எதிர்பார்த்த தேவன் மோசேயின் மூலமாக சீனாய் மலையிலே வைத்து இஸ்ரவேலருக்கான நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார்.

    நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதமும், நியாயப்பிரமாணத்தை மீறினால் தண்டனையும், ஆக்கினை தீர்ப்பும் வரும் என்றும் மோசேயின் மூலம் கூறினார். நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு பரிசுத்த ஜாதியாக இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்ந்தாலும் மாமிச பலவீனத்தினால் அநேகரால் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொள்ள இயலவில்லை.

    நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டாலும் ஒன்றிலே தவறினாலும் அவர்கள் குற்றவாளிகளாகவும், தேவனுடைய தண்டனைக்குரியவர்களாகவும் மாறினர். நியாயப்பிரமாணத்தைக் காத்து நடந்து தேவனைக் கிட்டிச் சேர வேண்டிய இஸ்ரவேலர்கள் நாளுக்கு நாள் பிரமாணங்களை மீறி தேவனுக்கு தூரமானார்கள். ஆனால் மாமிச பலவீனத்தினால் இஸ்ரவேலர் செய்ய முடியாததை கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றி, தம் சொந்த மாமிசத்தினாலே தேவனையும் ,தூரமாயிருந்த தேவ ஜனங்களையும் ஒப்புரவாக்கினார்.

    எபே:2:13-16-ல் முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் ரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இரு திறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாமிசத்தினாலே ஒழித்து, இரு திறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இரு திறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார் என்று பைபிளில் கூறுவது போல சிலுவையில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் ரத்தம் எல்லோருக்குமான மீட்கும் பொருளாக மாறி எல்லோரையும் தேவனோடுகூட ஒப்புரவாக்கியது. நாமும் அந்த மேன்மையான ரத்தினால் நம் பாவங்கள் கழுவ ஒப்புக்கொடுத்து நாமும் தேவனோடு ஒப்புரவாவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

    - போதகர்.அமல்ராஜ்
    ×