search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்
    X

    நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்

    இறைமகன் இயேசு ‘முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப்பொறுப்பாளர்’ என்ற உவமையில் பிறரோடு நட்புறவு கொள்ளுவதின் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.
    “நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை” (சீராக் 6-15) என்பது மறைவாக்கு.

    ‘தம் நண்பர்களுக்காக உயிரைக்கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை’ என்பது இயேசுவின் இறைவாக்கு.

    நல்ல நண்பர்களை தமதாக்கிக் கொண்டு, நட்புறவை பரிமாறி வாழ்கின்ற இனிமையான வாழ்க்கைக்கு ஈடு இணை எதுவுமில்லை. இறைமகன் இயேசு ‘முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப்பொறுப்பாளர்’ என்ற உவமையில் பிறரோடு நட்புறவு கொள்ளுவதின் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.

    முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப்பொறுப்பாளர்

    செல்வந்தரான மனிதர் ஒருவருக்கு வீட்டுப்பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர் மீது பழி சுமத்தப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட தலைவர், “உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப்பொறுப்பாளராய் இருக்க முடியாது” என்று அவரிடம் கூறினார்.

    “வீட்டுப்பொறுப்பில் இருந்து தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே, மண் வெட்ட என்னால் இயலாது. இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறதே” என்று அவர் வருந்தினார். வீட்டுப்பொறுப்பிலிருந்து இன்னும் சில நாட்களில் அவர் நீக்கப்படப் போகின்றபடியினால், தலைவர் நீக்கிவிடும் போது பிறர் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்மதியோடு ஒரு செயலை செய்கின்றார்.

    வீட்டுப்பொறுப்பாளர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை வரவழைக்கிறார். அவரிடம் கடனைக் கேட்கிறார். ‘நூறு குடம் எண்ணெய்’ என்பதை ‘ஐம்பது குடம் எண்ணெய்’ என்று எழுதச்சொல்கிறார். இன்னொருவர், ‘நூறு மூட்டை கோதுமை’ என்றவுடன் ‘எண்பது மூட்டை கோதுமை’ என்று எழுதச்சொல்கிறார்.

    நேர்மையற்ற அந்த வீட்டுப்பொறுப்பாளரின் முன்மதியைக் கண்டு, கடன்பெற்றவர்கள் அவரைப் பாராட்டினர்.

    ேநர்மறைப் பார்வையுடன் புரிவதற்கும் விளக்குவதற்கும் இந்த உவமை சற்று முரண்பாடுடன் காணப்படுகின்றது. இது மறைநூல் அறிஞர்களுக்கோ, மக்களுக்கோ கூறப்பட்டதில்லை. மாறாக, இயேசு தமது சீடர்களுக்கே கூறியதாகும்.

    நீதியற்ற ஒரு பணியாளன், நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு தனக்கென்று நண்பர்களைத் தேடிக்கொள்ளுவதைப் பற்றிக் கூறுகின்றார்.

    வீட்டுப்பொறுப்பாளர்

    பாலஸ்தீன நாட்டில் அநேக செல்வந்தர்கள் இருந்தார்கள். யூதர்கள் அனைவரும் செல்வந்தர்களைக் குறித்து நன்கு அறிந்திருந்தனர். இவர்கள் தங்கள் உடைமைகளை மேற்பார்வை செய்ய வீட்டுப்பொறுப்பாளர்களையும் நியமித்திருந்தனர். செல்வந்தர்கள் உடைமைகளை குறித்த அத்தனை விவரமும் அவர்களை விட வீட்டுப் பொறுப்பாளர்களுக்கே தெளிவாக தெரியும்.

    செல்வந்தர்களின் தொழில் செழிப்புறுவதும், நலிவடைவதும் இந்த வீட்டுப் பொறுப்பாளர்களின் கரத்தில் தான் உள்ளது. சொல் ஆளுமையும், அறிவும், திறமையும், முன்மதியும் நிறைந்த வீட்டுப்பொறுப்பாளர்கள் தான் செல்வந்தர்களின் பலம் ஆகும்.

    இங்கே குறிப்பிடப்படும் வீட்டுப்பொறுப்பாளர் ஒரு அடிமை தான். எனினும், தன் தலைவரின் உடைமைகளுக்கு பொறுப்பாளியும் இவர் தான். தன்னுடைய அதிகாரம், பொறுப்பு எடுபட்டுப் போகக்கூடிய ஒரு இக்கட்டான நிலைக்கு உட்படுகின்றார்.

    முன்மதியோடு செயல்படுதல்

    வீட்டுப்பொறுப்பாளர் இங்கே நீதியற்றவராய் முனைந்து செயல்படத் துணிகிறார். இவரைப் போல் கடனாளிகளும் அநீதியாளர்களாகவே மாறிப்போகின்றனர். தன்னுடையவற்றில் இருந்து வீட்டுப்பொறுப்பாளி கடன் கொடுக்கவில்லை என்றாலும், கடன் கணக்கு தன்னுடைய கையில் இருக்கும் வரை இதை மாற்றவோ திருத்தவோ அவரால் முடியும். ஏனெனில் கடன் பெற்றவர்கள் யார் யார் தன்னிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறார்கள் என்பது தலைவருக்குத் தெரியாது.

    கடன் பெற்றவர்கள் அவரிடம் ஒரு ஒப்பந்தத்துடனேயே நிலத்தினை வாங்கியிருப்பார்கள். நிலத்திற்கூரிய கிரயத்தை பணமாக அல்லது பொருளாக செலுத்துவதே வழக்கம். இங்கும் பொருளாக செலுத்தவே உடன்பட்டிருக்கிறார்கள்.

    முதலாவது மனிதர் நூறு குடம் எண்ணெய் கடன்பட்டிருக் கிறார். நூறு குடம் எண்ணெய் ஏறக்குறைய 3,700 லிட்டருக்குச் சமம். இது ஒலிவ எண்ணெயாக இருக்கலாம்.

    இரண்டாவது கடன்காரர் கோதுமை கடன்பட்டவர். ஏறக்குறைய நூறு கலம். நூறு கலம் கோதுமையின் விலை ஏறக்குறைய நான்காயிரம் ரூபாய். இதை மாற்றி எண்பது கலம் என்று எழுதும்படி வீட்டுப்பொறுப்பாளர் கூறுகின்றார்.

    வீட்டுப்பொறுப்பாளர் தன் விருப்பப்படி ஒருவருக்கு சரிபாதி கடனையும், மற்றவருக்கு ஐந்தில் ஒரு பங்கு கடனையும் குறைக்கின்றார்.

    இங்கே இவரின் செயலும் அநீதி, பொருளும் அநீதி. ஆனால் நேர்மையற்ற உலகப்பொருள் மூலம் தனக்கு அடைக்கலம் தருகின்ற, நேசிக்கின்ற, தனக்கு நன்றியுணர்வு காட்டுகின்ற இரு நண்பர்களை உருவாக்குகின்றார். இந்த முன்மதியையே தலைவரும் பாராட்டுகின்றார்.

    நண்பர்களைத் தேடுவோம்

    பணம் உடையவருக்கு நண்பர் பலர் இருப்பர். இந்த செல்வத்தையும், நல்வாழ்வையும், மேன்மையையும் கொடுக்கிறவர் கடவுள் (சஉ. 6:2).

    நம் வாழ்வில் அருளப்படுகின்ற செல்வங்கள் நம் சுய நலனுக்கானதல்ல. இது பிறர் வாழ்வுக்காகவும் பகிரப்பட வேண்டியதே. நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான் (நீதி 17:17).

    சமயம், இனம், மொழி, தேசம் என்ற எல்லைகளைக் கடந்து மனித நேயத்துடன் எல்லாருடனும் நட்புறவு கொள்ள நம் உலகப் பொருள்கள் உதவிடட்டும். குருவான இயேசு தம் சீடர்களை ‘தோழர்களே’ என்று நட்புறவுடன் அழைத்தார். அவர்களை இறுதிமட்டும் நேசித்தார்.

    சில விரற்கடை அளவாயுள்ள ஆயுட்காலத்தை கொண்ட இம்மானிட பிறப்பில் பல பண்பில் உயர்ந்த நல்ல நண்பர்களை நமதாக்கி கொண்டு, இறைவழியில் நட்புறவு கமழும் நிறைவாழ்வு வாழ்வோம்.

    அருட்பணி. ம. பென்னியமின், உண்ணாமலைக்கடை. 
    Next Story
    ×