என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அஜித், வினோத் கூட்டணியில் உருவாகும் தல 60 படம் குறித்த வதந்திக்கு நடிகை நஸ்ரியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    'நேர்கொண்ட பார்வை'க்கு பின் அஜித், வினோத் கூட்டணி அமைத்துள்ள படம் 'வலிமை'. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி திரை வட்டாரங்களில் பரபரப்பான செய்தியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகை நஸ்ரியா சமீபத்தில் டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் வலிமை என்ற சொல்லை அவர் பயன்படுத்தி இருந்ததால், அவர்தான், நடிகர் அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் நடிக்க போவதாக செய்தி பரவியது. 

    நஸ்ரியா, அஜித்

    ஆனால், அதை நஸ்ரியாவே தற்போது மறுத்திருக்கிறார். வலிமை படத்தில், நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நான் நடிக்க இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளில் உண்மை இல்லை. இன்னும், எதுவுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. எனவே, தற்போதைய நிலையில், இந்த வதந்தியை யாரும் பரப்ப வேண்டாம் என கூறியிருக்கிறார். இருந்த போதும், நடிகை நஸ்ரியாவிடம் படக்குழுவினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர். ஒரு சில நாட்களில், நஸ்ரியா வலிமை படத்தில் நடிக்கிறாரா, இல்லையா என்பதை படக்குழுவே உறுதி செய்துவிடும் என்றும் சொல்கின்றனர்.
    டிம் மில்லர் இயக்கத்தில் அர்னால்டு சுவர்ஸ்னெகர், மெக்கன்சி டேவிஸ் நடிப்பில் வெளியாகியுள்ள டெர்மினேட்டர் டார்க் ஃபேட் படத்தின் விமர்சனம்.
    டெர்மினேட்டர் வகை படங்கள் ஹாலிவுட்டில் 1984ஆம் ஆண்டு முதல் வெளியாகின்றன. முதல் பாகத்தில் இருந்தே டெர்மினேட்டர் பாகங்களின் ஆஸ்தான நடிகராக இருந்து வந்த அர்னால்டு இந்த படத்துடன் விடை பெறுகிறார். அதனாலேயே டெர்மினேட்டர் டார்க் ஃபேட் படம் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. 

    படம் தொடங்கிய முதல் காட்சியே மனித உடலும் இயந்திர உடலும் இணைந்த சைபார்க் மெக்கன்சி டேவிஸ் எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்துக்கு வந்து இறங்குகிறது. இன்னொரு இடத்தில் முழுக்க முழுக்க எந்திரமான காப்ரியல் லூனா தரை இறங்குகிறது. இந்த இயந்திரத்துக்கு நடாலியாவை கொல்வதுதான் இலக்கு. தன் அண்ணனுடன் அமைதியாக வாழ்ந்து வரும் நடாலியா இந்த இயந்திரத்தால் தன் அண்ணன், அப்பாவை இழக்கிறார். 

    டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்

    நடாலியாவை காப்பாற்றுவதற்காக தான் மெக்கன்சி 2042ஆம் ஆண்டில் இருந்து தற்காலத்துக்கு வந்து இருக்கிறார். காப்ரியலுடன் போரிட்டு நடாலியாவை காப்பாற்றுகிறார். நடாலியாவுக்கு பிறக்க போகும் குழந்தை தான் இந்த உலகத்தை இயந்திரங்களின் ஆதிக்கத்தில் இருந்து காப்பாற்ற இருக்கிறது. எனவே தான் இந்த போர். நடாலியாவை காப்பாற்ற முன்னாள் இயந்திரங்களான அர்னால்டும் லிண்டாவும் உதவுகிறார்கள். அவர்களது முயற்சி வெற்றி அடைந்ததா? என்பதே கதை.

    கதையின் நாயகி மெக்கன்சி டேவிஸ் தான். தரை இறங்கியது முதல் இறுதிக்காட்சியில் நடாலியாவை காப்பாற்ற உயிரை விடுவது வரை படத்தை தாங்கும் கதாபாத்திரம். ஆக்‌ஷன், செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு உதவும் லிண்டாவும் அர்னால்டும் சரியான தேர்வுகள். அர்னால்டை படம் முழுக்க எதிர்பார்த்து போனால் ஏமாற்றமே மிஞ்சும். இரண்டாம் பாதியில் வரும் அர்னால்டு சில காட்சிகளே வருகிறார். கிளைமாக்ஸ் காட்சி அவரது ரசிகர்களுக்கான விருந்து. 

    டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்

    வில்லன் இயந்திரமாக வரும் காப்ரியல் பார்வையிலேயே வெறுப்பை வரவைக்கிறார். 2 உருவங்களாக பிரிந்து மனிதனாகவும் அருவமாகவும் அவர் சண்டையிடும் காட்சிகள் கிராபிக்ஸ் கலக்கல். முந்தைய டெர்மினேட்டர் வரிசை படங்களை பார்த்தவர்களுக்கு எளிதில் புரியும் கதை. ஆக்‌ஷன் காட்சிகளும் சேசிங் காட்சிகளும் கிராபிக்சில் மிரட்டி இருக்கிறார்கள். ஆனால் முந்தைய படங்களில் இருந்த விறுவிறுப்பு இந்த படத்தில் குறைவுதான். 

    கேஜிஎஃப் படத்தின் மூலம் வசனங்களில் கவர்ந்த அசோக் டெர்மினேட்டரையும் தமிழ் படுத்தி இருக்கிறார். பொதுவாக தமிழில் டப் செய்யப்படும் ஆங்கில கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களில் இருக்கும் மிகைத்தனம் இதில் இல்லை. பதிலாக சில புத்திசாலித்தன வசனங்கள் இருக்கின்றன. அசோக்கிற்கு பாராட்டுகள். 

    டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்

    129 நிமிட படத்தில் அதிக நேரம் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஜேம்ஸ் கேமரூனின் திரைக்கதையில் ஆக்‌ஷன் காட்சிகளை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம். இருந்தாலும் டெர்மினேட்டர் வரிசை ரசிகர்களையும் அர்னால்டு ரசிகர்களையும் இந்த டெர்மினேட்டர் ஏமாற்றாமல் ரசிக்க வைக்கிறான். 

    மொத்தத்தில் ‘டெர்மினேட்டர்’ ஆக்‌ஷன் விருந்து.
    பிரபல இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு, நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகும் ’லாக்கப்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
    குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், சில படங்களில் நாயகனாகவும் நடித்து வந்தவர் நிதின் சத்யா. கடந்த ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான 'ஜருகண்டி' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தற்போது தனது இரண்டாம் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 

    ஜெயம் ராஜாவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஜி.சார்லஸ் இந்த புதிய படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வெங்கட்பிரபு முதன்முறையாக வில்லனாக நடிக்கிறார்.  

    வைபவ், வெங்கட்பிரபு

    'ஷ்வேத் நிதின் சத்யா' நிறுவனம் மூலம் நிதின் சத்யா தயாரித்து வருகிறார். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு 'லாக்கப்' என தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அரோல் கரோலி இசையமைத்து வருகிறார். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.
    8 ஆண்டுகளுக்கு பின்னர் இசையமைப்பாளர் இளையராஜாவை இயக்குனர் பாரதிராஜா நேரில் சந்தித்து பேசினார்.
    இசையமைப்பாளர் இளையராஜா - இயக்குனர் பாரதிராஜா பல்வேறு வெற்றி படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். காலத்தால் அழியாத பல்வேறு படைப்புகளை கொடுத்த இவர்கள் இருவரும், மனக்கசப்பு காரணமாக நீண்ட நாட்களாக பேசாமல் இருந்தனர். இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் சந்தித்து கொண்டனர். தேனியில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. 

    பாரதிராஜாவின் டுவிட்டர் பதிவு

    இது தொடர்பாக பாரதிராஜா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ”பல ஆண்டுகளுக்கு பிறகு இரு இதயங்கள் இணைந்தன. இயலும், இசையும் இணைந்தது; இதயம் என் இதயத்தை தொட்டது என் தேனியில்” என குறிப்பிட்டுள்ளார். இளையராஜாவுடன் காரில் இருப்பது போன்ற புகைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 
    நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கை நவம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022-ம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. இதை எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்பட்டதால் வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை குறித்து நடிகர் சங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்குகள் நேற்று நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. 

    சென்னை ஐகோர்ட்டு

    அப்போது விஷால் தரப்பு வழக்கறிஞர் ‘நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடியும் முன்பே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய முடியாது சங்க விதிகளின்படி உறுப்பினர்களை நீக்கவும், மாற்றவும் செயற்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார். இது தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 6-ந்தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.
    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் தலைவி படத்திற்கு தடை கோரி ஜெ.தீபா மனு தாக்கல் செய்துள்ளார்.
    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து தலைவி என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படம் இந்தியிலும் ஜெயா என்ற பெயரில் உருவாகிறது. இதேபோல் குயின் என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். 

    சென்னை ஐகோர்ட்டு

    இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் தலைவி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது அனுமதியின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்ககூடாது. மேலும், ஜெயலலிதாவின் கண்ணியம் பாதிக்கப்படாமல் படம் எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஜெ.தீபா மனுவில் குறிப்பிட்டுள்ளார். 
    நடிகை பரவை முனியம்மாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    மதுரையை சேர்ந்த நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா, தூள் முதல் மான் கராத்தே வரை பல படங்களிலும் நடித்து பிரபலமானார். 83 வயதான அவர் கிட்னி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். கலைமாமணி விருது பெற்ற இவருக்கு, அரசின் உதவி தொகையாக மாதம் 6,000 ரூபாய் கிடைக்கிறது. இத்தொகை, மருத்துவ சிகிச்சைக்கே போதாத நிலையில், மிகவும் கடினமான சூழ்நிலையில், நாட்களை கடத்தி வருகிறார்.

    சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன் பிறகும் அவரால் பேச முடியவில்லை. காதும் கேட்கவில்லை. நேற்று மதியம் ‘பரவை’ முனியம்மா, மூச்சுவிட சிரமப்பட்டார். 

    இதை அறிந்து நடிகர் அபி சரவணன், அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்த்துள்ளார். பரவை முனியம்மாவின் உடல்நலம் குறித்து அபி சரவணனிடம் நடிகர் சங்கத்தில் இருந்து கார்த்தி, நாசர், பொன்வண்ணன், ஐசரி கணேஷ் மற்றும் பாக்யராஜ் ஆகியோர் விசாரித்தனர். அவருக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்லி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
    எம்.ஜி.ஆர்-சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 72.
    தமிழில் எம்.ஜி.ஆரின் ஆசை முகம், அன்னமிட்ட கை, தாயின் மடியில், பணம் படைத்தவன், என் எண்ணன், சிவாஜியின் நெஞ்சிருக்கும் வரை, ஜெமினிகணேசனின் கங்கா கவுரி உள்பட பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். ஐதராபாத்தில் வசித்து வந்த இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

    அதற்காக ஐதராபாத் பிலிம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். இவர் தமிழ் மொழி தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மறைந்த கீதாஞ்சலியின் கணவர் ராமகிருஷ்ணாவும் பிரபல நடிகர் ஆவார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். 

    கீதாஞ்சலி

    மறைந்த கீதாஞ்சலிக்கு அதித் ஸ்ரீனிவாஸ் என்ற மகன் உள்ளார். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த கீதாஞ்சலி, மறைந்த என்.டி.ராமாராவ் இயக்கி, நடித்த ‛சீதாராம கல்யாணம்' படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, தெலுங்கில் என்டிஆர்., நாகேஸ்வரராவ், கிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்த இவர், மலையாளம், இந்தியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

    கடைசியாக ‛பாரிஸ் பாரிஸ்' படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான தமன்னா நடித்துள்ள ‛தெட் இஸ் மகாலட்சுமி' படத்தில் நடித்தார்.  கடைசியாக தமிழில் கங்கா கவுரி படத்தில் நடித்தார். கீதாஞ்சலியின் மறைவு தெலுங்கு சினிமா திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமானார். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமீர் கானுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. 

    ரேவதி

    பின்னர் இதில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வந்தது. படத்தின் கதாநாயகன், வில்லன் என 2 வேடங்களுமே கமல்ஹாசன் தான். முன்னதாக இந்த படம் தேவர் மகன் படத்தின் 2ஆம் பாகம் என்ற ரீதியில் செய்திகள் வந்தன. தற்போதைய தகவல்படி தேவர் மகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ரேவதி இந்த படத்திலும் நடிக்க இருக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
    100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த காமெடி நடிகர் ஜெயச்சந்திரன் குளியலறையில் வழுக்கி விழுந்து மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.
    நடிகர் ஜெயச்சந்திரன் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்புக்கு சென்று வீடு திரும்பிய ஜெயச்சந்திரன், மறுநாள் காலை குளியலறைக்கு சென்றபோது எதிர்பாராத வகையில் வழுக்கி விழுந்ததால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

    உடனே அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்த ஜெயச்சந்திரனுக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர், 

    ஜெயச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஷால்

    நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஷால், பொன்வண்ணன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். வடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சமீபத்தில் படப்பிடிப்பின்போது திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு காமெடி நடிகர் மரணமடைந்தது திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
    விஜய் கந்தசாமி இயக்கத்தில் சிவநிஷாந்த், நீருஷா நடிப்பில் உருவாகி வரும் துப்பாக்கியின் கதை படத்தின் முன்னோட்டம்.
    பி.ஜி.பி. எண்டர்பிரைசஸ் சார்பில் பி.ஜி.பிச்சைமணி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘துப்பாக்கியின் கதை’. இயக்குநர் விஜய் கந்தசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவநிஷாந்த் என்பவர் ஹீரோவாக நடிக்க, பெங்களூருவை சேர்ந்த நீருஷா என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் டேனியல், ஆர்.எஸ்.சிவாஜி, ஜார்ஜ், மிப்புசாமியுடன் இலங்கை நடிகர் லால்வீர்சிங் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.

    துப்பாக்கியின் கதை 

    சாய் பாஸ்கர் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் "துப்பாக்கியின் கதை" குடும்பத்துடன் பார்க்கக் கூடிய, இளைஞர்கள் ரசிக்கக்கூடிய படமாக உருவாகி வருகிறது. படத்தின் கதை உண்மையிலேயே ஒருவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வை மையப்படுத்தி அதன் தாக்கத்தில் உருவான கதை தான். படம் பார்க்கும்போது இந்த நிகழ்வு எங்கே நடந்தது, யாருக்கு நடந்தது என்பதை ரசிகர்கள் நன்றாகவே தெரிந்து கொள்வார்கள் என்கிறார் இயக்குநர் விஜய் கந்தசாமி.
    ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
    ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. இதில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

    தனுசு ராசி நேயர்களே பட போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் நவம்பர் மாதம் ரிலீசாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், விஷாலின் ஆக்‌ஷன் போன்ற படங்கள் நவம்பர் மாதம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×