என் மலர்
சினிமா செய்திகள்
விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீரின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது.
தமிழில் கமல்ஹாசனின் பாபநாசம் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ரோஷன் பஷீர். தொடர்ந்து விஜய்யின் பைரவா படத்திலும் வில்லனாக வந்தார். குபேர ராசி படத்தில் நடித்துள்ளார். தற்போது மூன்று ரசிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் மலையாளத்தில் பிளஸ் டூ படத்தில் அறிமுகமானார். வசூல் சாதனை நிகழ்த்திய மோகன்லாலின் திரிஷ்யம் படத்தில் வில்லனாக நடித்து அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தின் தமிழ் ரீமேக் ஆகவே பாபநாசம் வந்தது.

ரெட் ஒயின் படத்திலும் மோகன்லாலுடன் நடித்துள்ளார். பேங்கிங் ஹவர்ஸ், டூரீஸ்ட் ஹோம், இன்னனு ஆ கல்யாணம் ஆகிய படங்களிலும் தெலுங்கில் துருஷ்யம் படத்திலும் நடித்துள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ரோஷனுக்கும் வக்கீலுக்கு படித்துள்ள பர்ஸானா என்ற பெண்ணுக்கும் பெற்றோர்கள் திருமணம் நிச்சயம் செய்து இருந்தனர். பர்ஸானா பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் உறவினர் ஆவார். ரோஷன்பர்ஸானா திருமணம் கேரளாவில் நடந்தது. கொரோனா ஊரடங்கினால் குறைவானவர்களே திருமணத்தில் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் போட்டியிலிருந்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் விலகியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடக்கவிருந்த சூழ்நிலையில், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உயர் நீதிமன்றத் தலையீட்டின் பேரில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தச் சூழலில் பாரதிராஜா தலைமையில், 'தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்' என்று புதிய சங்கமொன்றை உருவாக்கியுள்ளனர். இந்தப் புதிய சங்கம் உருவாக்கத்தைக் கைவிட வேண்டும் என்று தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி உள்ளிட்ட பலர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், புதிய சங்கத்தைக் கைவிட யாருமே முன்வரவில்லை.
இதனிடையே, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 'தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி' என்ற பெயரில் தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணி போட்டியிடுவதாக அறிவித்தது. இதில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட இருந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிலிருந்து தற்போது விலகியுள்ளார்.

இது தொடர்பாக சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"நான் தயாரிப்பாளர் நலன் காக்கும் அணியில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட இருந்தேன். ஆனால், அந்த அணியிலிருந்து விலகியுள்ளேன். அதற்கான தன்னிலை விளக்கமே இந்தக் கடிதம்.
நமது தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு வலுவான தலைமையில் அமைய வேண்டுமெனக் கடந்த பத்து நாட்களாக இருபெரும் தலைவர்களை ஒன்றிணைக்கக் கடுமையான முயற்சிகள் எடுத்து வந்தோம். அந்த முயற்சிகள் எதுவுமே பலனளிக்காமல் போய்விடவே நானே சுயமாக எடுத்த முடிவுதான் இது.
அதற்கு ஒரே காரணம் 1351 தயாரிப்பாளர்களின் நலன் மட்டுமே அவர்களுடைய நலன் கருதியே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஏற்கனவே நமது சங்கத்தை பிளவுபடுத்தப் பலர் நினைக்கும் இந்த சூழ்நிலையில் ஒரு வலுவான தலைமையை உருவாக்க வேண்டுமென்பதே என் போன்ற பல தயாரிப்பாளர்களின் எண்ணம்.
தொடர்ந்து தயாரிப்பாளர்களின் உரிமைக்காகப் போராடும் அனைத்து முயற்சிகளுக்கும் என் குரல் முதல் குரலாக ஒலிக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மிக விரைவில் நாம் ஒரு மிகச் சிறந்த வலுவான தலைவரை உருவாக்கி நம் சங்கத்தை மீட்டெடுப்போம்"
இவ்வாறு சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்திற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
சிந்து சமவெளி சர்ச்சை படத்தில் அறிமுகமாகி பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக வளர்ந்த அமலாபால் திருமணம், விவாகரத்து என்றெல்லாம் பரபரப்பாகி மீண்டும் தீவிரமாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து அதிர வைத்தார்.
தற்போது கதாநாயகியை மையப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கிறார். சமீப காலமாக அமலாபால் சமூக வலைத்தளத்தில் சர்ச்சை புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ஆண் நண்பர்களுடன் மதுகோப்பையுடன் இருக்கும் படங்களை வெளியிட்டார். இன்னொரு ஆண் நண்பர் அருகில் நிற்க கடற்கரையில் படுத்திருப்பதுபோன்ற புகைப்படம் வந்தது.

தற்போது புகைப்பிடித்து வாயில் இருந்து வரும் புகையை வட்டமாக வெளியிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். அதில் “எல்லா நற்பண்புகளும் சலவை செய்த துணிபோல் இல்லை. எல்லா புனிதர்களுக்கும் ஒளிவட்டம் இல்லை. எல்லா பாவிகள் கையிலும் ரத்தம் இல்லை.” என்றெல்லாம் தத்துவ பதிவையும் வெளியிட்டுள்ளார். புகைப்புடிக்கும் அமலாபாலுக்கு எதிராக ரசிகர்கள் பலரும் வலைத்தளத்தில் கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட்ட செய்தி பொய் என்று எஸ்.பி.பி. உடல்நலம் குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
எஸ்.பி.பிக்கு தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இன்று எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:
Today’s update from
— Maalai Malar News (@maalaimalar) August 18, 2020
Sp Charan about SPB Sir’s Health#SPB#SPBalasubramanyam#SPBCharanpic.twitter.com/g021vlh6Nq
"அப்பாவின் உடல்நிலை நேற்று இருந்தது போலத்தான் இருக்கிறது. செயற்கை சுவாசத்துக்கான வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட்டதாக ஒரு செய்தி உலவுகிறது. அது பொய். அவர் விரைவில் அதன் உதவி இல்லாமல் சுவாசிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.
மருத்துவர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து பிரார்த்தியுங்கள். உங்கள் அன்பு, அக்கறை, பிரார்த்தனைகளுக்கு குடும்பமாக நாங்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவின் திடீர் முடிவு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்தாண்டு மலையாளத்திலும் அறிமுகமானார். இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் வீட்டிலேயே இருக்கும் திரிஷா, சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். விழிப்புணர்வு ஏற்படுத்துவது, டிக்டாக் வீடியோ பதிவிடுவது என சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார்.

கடந்த ஜூன் மாதம் சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகினார். இதையடுத்து சில வாரங்களுக்கு பின் மீண்டும் சமூக வலைதளத்தில் அவர் இணைந்தாலும், போட்டோ, வீடியோ பதிவிடுவதை குறைத்துக்கொண்டார்.
இந்நிலையில், நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அனைத்து பழைய பதிவுகளையும் நீக்கி இருக்கிறார். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 7 புகைப்படங்கள் மட்டுமே இருக்கின்றது. இதுதவிர மற்ற பழைய புகைப்படங்கள் அனைத்தையும் திடீரென நீக்கிவிட்டார். அதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் சைலன்ஸ் படத்தின் முன்னோட்டம்.
ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக சைலன்ஸ் தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். ஷெனியல் டியோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்த நாளையொட்டி மராட்டியத்தில் உள்ள 2 கிராமங்களை தத்தெடுத்து உள்ளார்.
கொரோனா பரவலால் வேலையிழந்து தவிப்பவர்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நடிகர், நடிகைகள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்த நாளையொட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள பதார்தி, சக்கூர் ஆகிய 2 கிராமங்களை தத்தெடுத்து இருப்பதாக அறிவித்துள்ளார். இலங்கை நடிகையான ஜாக்குலின் பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினார்.

கிராமங்களை தத்தெடுத்தது குறித்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறியதாவது: “ கொரோனா தொற்றினால் ஏராளமான மக்கள் பாதித்துள்ளனர். இது அனைவருக்கும் கடினமான காலம். பலர் அடிப்படை தேவைகளுக்கே போராடுகிறார்கள். மக்களுக்கு நம்மால் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 2 கிராமங்களை தத்தெடுத்து உள்ளேன்” என்றார். இந்த கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்குதல், வேலை வாய்ப்பு பயிற்சி, ம்ருத்துவ சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல பணிகளை ஜாக்குலின் செய்ய உள்ளாராம்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து அவரது தங்கை எஸ்.பி.சைலஜா விளக்கம் அளித்துள்ளார்.
புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து அவரது தங்கை எஸ்.பி.சைலஜா ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “ஒவ்வொரு நாளும் எஸ்.பி.பி-யின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. மருத்துவர்கள் அவருக்கு வென்டிலேட்டர் உதவியின்றி சிகிச்சை அளிக்க தொடங்கி உள்ளனர். அவருக்கு நினைவாற்றலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல அறிகுறியாகும். டாக்டர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அவர் குணமடைய நீங்கள் பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், உலகம் முழுவதும் அவரைத் திரும்பப் பார்க்க விரும்புகிறது. இந்த பின்னடைவுக்குப் பிறகு எனது சகோதரர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘அண்ணையா’ இதிலிருந்து மீள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் பரவிய நிலையில், நடிகை சுனைனா அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
வழக்கமாக ஜூன், ஜுலை மாதங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்தனர். ஆனால் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அது திட்டமிட்டபடி தொடங்கப்பட வில்லை. வருகிற செப்டம்பர் மாதம் இதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்க பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளர்களாக நடிகைகள் அதுல்யா, சுனைனா, ரம்யா பாண்டியன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக சமூக வலைதலங்களில் தகவல் பரவி வந்தது. இதையடுத்து ரசிகர்கள் பலர் அந்தந்த நடிகைகளிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், நடிகை சுனைனா பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்பதாக வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ரியாலிட்டி ஷோக்களில்பங்கேற்றால் என்னுடைய படங்களை யார் முடித்து கொடுப்பது என யோசிக்கிறேன். நான் எப்போது எந்த ஒரு ரியாலிட்டி ஷோவிலும் பங்குபெற விரும்பியதில்லை” என சுனைனா கூறியுள்ளார்.
இதேபோல் நடிகை ரம்யா பாண்டியனும் பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்பதாக வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
'பாகுபலி' திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து 'சாஹோ'வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான 'சாஹோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது பிரபாஸின் 20-வது படத்தை, 'சாஹோ' படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ராதே ஷ்யாம் என பெயரிட்டுள்ளனர். இதன் இயக்குநர் கே கே ராதா கிருஷ்ணா.
இதைத் தொடர்ந்து பிரபாஸின் 21-வது படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற 'மகாநடி' என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார். இதில் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

இந்நிலையில், பிரபாஸின் 22-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக பிரபாஸ் அறிவித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தை ஓம் ராவத் இயக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாக உள்ளது.
தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் முழுக்க முழுக்க 3டி-யில் உருவாக உள்ளது. 2022-ம் ஆண்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ராட்சசன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய கௌரவம் கிடைத்துள்ளது.
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இந்தப் படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது.
விஷ்ணு விஷால் நடித்த படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழை அடுத்து இந்தப் படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஐ.எம்.டி.பி தளத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று ‘ராட்சசன்’ திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி முதலிடத்தில் ‘ராட்சசன்’, இரண்டாம் இடத்தில் ‘விக்ரம் வேதா’ 3-ம் இடத்தில் ‘நாயகன்’ ஆகிய படங்கள் உள்ளன. இத்தகவலை ‘ராட்சசன்’ படக்குழுவினர் தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நடிகர் மாதவனை வைத்து ’எவனோ ஒருவன்’ என்ற படத்தை கொடுத்த இயக்குனர் நிஷிகாந்த் காமத் இன்று காலமானார்.
தமிழில் மாதவன் நடித்த ’எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் பிரபல பாலிவுட் இயக்குனர் நிஷிகாந்த் காமத். இவர் சில காலமாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று காலை இவர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது.

தற்போது மாலை 4:24 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நிஷிகாந்த் காமத், தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற ’த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.






