என் மலர்
சினிமா செய்திகள்
உறியடி, உறியடி 2 படங்களை இயக்கி நடித்த விஜய் குமாரின் அடுத்த படம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'உறியடி' என்கிற முதல் படத்திலேயே சாதி பிரச்னை சார்ந்த ஒரு அழுத்தமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, அதனை மாணவர்களின் வாழ்க்கையோடு இணைத்து அதிரடியாக கூறியவர் விஜய்குமார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றது.

அடுத்ததாக அவர் இயக்கி நடித்த 'உறியடி 2' திரைப்படமும் மக்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு தீங்காக விளங்கும் நச்சு ஆலையை பற்றி பதிவு செய்திருந்தது. மக்களின் உறுதிமிக்க போராட்டத்தை காட்சிப்படுத்தியதோடு, அரசியல் கட்சிகளின் போலி வேடத்தையும் 'உறியடி 2' தோலுரித்தது.

இதனால் தமிழ் திரை ரசிகர்களை பொறுத்தவரை, சமூக மேம்பாடு சார்ந்த கதைக்களத்தை மிக அழுத்தமாகவும், ரசிக்கும் வகையிலும் படமாக தரக்கூடியவர் விஜய்குமார் என்கிற பிம்பம் ஏற்பட்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் விஜய்குமாரின் நாயகனாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அப்பாஸ் இயக்குகிறார். இதனை தயாரிப்பு நிறுவனம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
பிரபல நடிகை ஒருவர் தான் நடித்த படத்தை தியேட்டரில் குடும்பத்துடன் பார்த்து ரசித்திருக்கிறார்.
பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லட்சுமி'. அக்ஷய் குமார் முன்னணி கேரக்டரில் நடித்து இருந்த இந்த படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

'முனி' படத்தின் ரீமேக் என்று கூறிவிட்டு 'முனி' டப்பிங் போலவே இருந்தது என்றும் விமர்சகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நாயகியாக நடித்த கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரையரங்கில் குடும்பத்துடன் படம் பார்த்ததாகவும் இந்த அனுபவத்தை தான் மீண்டும் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் திரையரங்கில் உட்கார்ந்தபடி உள்ள புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் நடக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
'விஸ்வாசம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜாக்கி ஷெராப் என பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். இந்த படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் கடந்த பிப்ரவரி மாதமே நிறைவடைந்துவிட்டது.
மார்ச்சில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக புனே, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்குள் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பிற்கு செல்லலாம் என்று சொல்லப்பட, ''டிசம்பர் மாதம் கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் போகலாம்'' என்று முடிவெடுத்தார் ரஜினி. இதற்கிடையில் டிசம்பர் 31-ம் தேதி கட்சியைத் தொடங்கவிருக்கும் அறிவிப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார். அப்போது பேசும்போது, கட்சி வேலைகள் தீவிரமாகும் முன் முதல் கட்டமாக 'அண்ணாத்த' படத்தின் மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிடுவதாகவும் கூறியிருந்தார்.

அதன் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது, அதற்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது. " 'அண்ணாத்த' படத்தின் மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்பையும் முழுக்க முழுக்க ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியிலேயே நடத்த திட்டமிட்டுள்ளோம். ஐதராபாத் செல்ல ரஜினி சாருக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் அனைவரையுமே ஒரு பயோ பபுளுக்குள் கொண்டுவர உள்ளோம். கடந்த ஐபிஎல் தொடரில் அதே பயோ பபுள் ஏற்பாடுகள்தான் 'அண்ணாத்த' டீமிற்கும் செய்யப்படவுள்ளது. அந்த பயோ பபுளில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்களுக்கு அந்த ஓட்டல், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. அதேபோல் பயோபபுளில் இருப்பவர்கள் யாரும் வெளியேபோய்விட்டு மீண்டும் உள்ளே நுழையவும் முடியாது.
மருத்துவர்களின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட சில நாள்களில் கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். தீவிர பாதுகாப்புடன் 'அண்ணாத்த' படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் 14-ம் தேதியில் இருந்து 40 நாள்கள் ரஜினி சாரின் ஷூட்டிங் இருக்கும். அதன் பின், அவர் சென்னை திரும்பிவிடுவார். படத்தை 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, வெளியிட திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தளபதி 65’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக அவரின் 65-வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே 65-வது படத்தை இயக்குவதாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் சம்பள பிரச்சினை காரணமாக படத்திலிருந்து விலகி விட்டார் என்று கூறப்பட்டது. இதனால் விஜய்யின் புதிய படத்தை இயக்குவோர் பட்டியலில் மகிழ் திருமேனி, நெல்சன், பேரரசு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.
இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அனிருத் இசைக்க இருக்கிறார்.
We are happy to announce Thalapathy @actorvijay ’s #Thalapathy65bySunPictures directed by @nelsondilpkumar and music by @anirudhofficial#Thalapathy65pic.twitter.com/7Gxg1uwy22
— Sun Pictures (@sunpictures) December 10, 2020
இதற்கு முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய்யை வைத்து சர்கார் படத்தை தயாரித்து வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலு & பால்கி இயக்கத்தில், தர்மா, தர்ஷினி, ஆலிஷா நடிப்பில் உருவாகி வரும் சூறாவளி படத்தின் முன்னோட்டம்.
வடமாநிலங்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட ஒரு கும்பல் அங்கிருந்து தப்பித்து தமிழ்நாட்டுக்குள் வருகிறது. இங்கே வந்த அந்த கிரிமினல்ஸ் கும்பல் பல வீடுகளில் வேலை செய்வது போல் சென்று அங்குள்ள குளியல் அறைகளில் கேமராவை மறைத்து, பெண்கள் குளிப்பதை படமெடுத்து, அதை வைத்து அப்பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து பணம் பறிப்பதை ஒரு வேலையாக செய்கின்றனர். பல இடங்களில் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடக்கவே காவல்துறை உஷாராகிறது.
ஒரு பண்னையாரிடம் கூலி வேலைக்கு சென்ற கதாநாயகனின் நேர்மையை நேசித்த பண்னையாரின் மகள் ( கதாநாயகி ), நாயகனை நேசிக்கிறாள். இப்படிப்பட்ட சூழலில் அந்த கும்பல் கதாநாயகி வீட்டிலும் அதே கைவரிசையை காட்ட, இதை அறிந்து கொண்ட ஹீரோ அக்கும்பளை சூறாவளி போல் சூறையாட தயாராகிறார். அவர்களை காவல்துறை சூறையாடுகிறதா? அல்லது ஹீரோ சூரசம்ஹாரம் செய்தாரா?
இப்படத்தில் தர்மா, தர்ஷினி, ஆலிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். லால்ராய் அசோசியேட்ஸ் சார்பில் லால்பகதூர் தயாரிக்கும் சூறாவளி படத்தில் ஜேக்கப் சாம்யேல் இசையமைக்கிறார். சந்திரன்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். பாலு & பால்கி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்குகிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார் ஒரு படத்தில் டூப் இல்லாமல் சண்டை போட்டு இருக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ”போடா போடி” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. அதிரடி கதாபாத்திரங்கள், ரிஸ்க்கான காட்சிகள் என துணிச்சலாக எடுத்து நடிக்கும் திறமையான நடிகை வரலட்சுமி. இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது.

வரலட்சுமியின் கைவசம் தற்போது காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, சேசிங், ஆகிய தமிழ் திரைப்படங்கள் உள்ளன. தெலுங்கிலும் இவருக்கு நந்தி, கிராக் ஆகிய படங்களும் கன்னடத்தில் ரணம் என மொத்தம் ஒன்பது படங்கள் உள்ளன. மேலும் இவரது நடிப்பில் சேசிங் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது இந்த படத்தில் வரலட்சுமி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கே வீரக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் அனைத்திற்கும் நடிகை வரலட்சுமி டூப் போடாமலேயே நடித்து தன் திறமையை காட்டியுள்ளார். மூன்று வில்லன்கள் உள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
படப்பிடிப்பு மே மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி தொடங்க முடியாமல் போனது.

இந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித் குமார், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால் நடிகைகள் சமந்தா, நயன்தாரா ஆகியோர் இதில் கலந்துகொள்ளவில்லை. விரைவில் அவர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவரது கன்னத்தில் இருந்த நகக்கீறல்களும் சித்ராவின் நகக்கீறல்கள்தான் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தற்கொலை என தெரியவந்துள்ளதால், அதற்கு யார் காரணம் என்ற கோணத்தில் அடுத்தகட்ட விசாரணையை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சனம் ஷெட்டி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார். ரசிகர்களின் ஆதரவு இருந்தும் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், சனம் ஷெட்டி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சனம் ஷெட்டி, இன்னும் தனது சொந்த வீட்டிற்கு செல்லவில்லையாம். அவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதலால், யாரும் எதிர்பாராத வகையில் சனம் ஷெட்டி விரைவில் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சீசனில் வனிதா வெளியேற்றப்பட்ட ஒரு சில தினங்களில் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார். அந்த வகையில் தற்போது சனம் ஷெட்டியும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தனது மகளை ஹேம்நாத் அடித்து கொலை செய்திருக்கலாம் என சித்ராவின் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சித்ராவின் தாயார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: எனது மகளை ஹேம்நாத் அடித்து கொலை செய்திருக்கலாம் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் தனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை என்றும் தைரியமானவர் எனவும் அவர் தெரிவித்தார். சித்ரா தாயாரின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறுபுறம் சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்ராவின் கணவர் ஹேம்நாத் மோசமானவர் என நடிகை ஷாலு ஷம்மு பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக நடிகைகள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், நடிகை ஷாலு ஷம்மு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், “உன்னை இந்த வகையில் இழப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை.
நான் உன்னுடன் கடைசியாக பேசும்போது, வாழ்க்கைத் துணை தொடர்பான விவகாரத்தில், உன் மனதை மாற்ற முயற்சி செய்தேன். அதைநீ ஏற்கத் தயாராக இல்லை. இப்படி நடக்கும் என எனக்குத் தெரிந்திருந்தால், உன்னை தடுக்கும் முயற்சியை நான் நிறுத்தியிருக்கமாட்டேன். உன்னை இழந்த நேரத்தில் எங்கள் இதயம் நொறுங்கிவிட்டது சித்து” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் “எதிர் நபர் மோசமானவர் என்று நமக்குத் தெரிந்தாலும், ஏன் எப்போதும் காதல் கண்ணை மறைத்துவிடுகிறது” என குறிப்பிட்டுள்ளார். ஷாலு ஷம்முவின் இந்தப்பதிவு சித்ரா தற்கொலை விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சித்ரா பணப்பிரச்சினையால் தவித்ததாக நடிகை சரண்யா துராடி தெரிவித்துள்ளார்.
டி.வி. நடிகை சித்ரா தற்கொலை பற்றி நடிகை சரண்யா துராடி அளித்துள்ள பேட்டி வருமாறு: கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் மிகுந்த நட்போடு பழகி வந்தோம். தென்ஆப்பிரிக்காவுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றபோதுதான் இருவரும் சந்தித்தோம். அதன் பிறகு எங்களது நட்பு தொடர்ந்தது. என்னிடம் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஒருபோதும் பேசியது இல்லை.
கடந்த ஆண்டு மலேசியாவில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றபோதும் ஒன்றாகவே தங்கினோம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சமீபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை சந்தித்தேன். அப்போதுதான் படப்பிடிப்புக்காக ஓட்டலில் தங்கி இருப்பதாக தெரிவித்தார்.

சித்ரா கடைசியாக இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதுதான் கடைசி வீடியோவாக இருக்கும் என்று நினைக்கவில்லை. தனது திருமணம் பற்றியும், புதிய வீடு குறித்தும் என்னிடம் பேசினார். அவருக்கு பணப்பிரச்சினை இருந்தது. தனது பிரச்சினை பற்றி யாரிடமாவது சித்ரா பேசி இருக்கலாம். அவரது தற்கொலை முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






