என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபாஸின் பிரம்மாண்ட படத்திற்காக போடப்பட்ட செட் ஒன்றை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள படக்குழுவினர் அனுமதி அளித்துள்ளனர்.
    யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார்.  

    அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

    ராதே ஷ்யாம் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்துக்காக போடப்பட்ட மருத்துவமனை செட் ஒன்றின் பெரும்பாலான பகுதிகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள படக்குழுவினர் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி அந்த செட்டில் உள்ள 50 படுக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள், பிபிஇ கிட் உடைகள் ஆகியவற்றை தனியார் மருத்துவமனைக்கு கொடுத்து உதவி உள்ளனர். ராதே ஷ்யாம் படக்குழுவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
    நடிகை நயன்தாரா நடித்துள்ள படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு, தற்போது அதன் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, நல்ல திரைக்கதைகள் அமையும் போது, மலையாளத்திலும் படங்கள் நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் நிழல், பிரபல படத்தொகுப்பாளரான அப்பு என் பட்டாத்திரி இப்படத்தை இயக்கி இருந்தார். இதில் நடிகர் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்திருந்தார்.

    நிழல் படத்தின் போஸ்டர்

    திரில்லர் படமான இது, கடந்த மாதம் 9-ந் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், இரண்டே வாரங்களில் தியேட்டர்களில் இருந்து எடுக்கப்பட்டது. இதனால் இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு, தற்போது அதன் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மே 11-ந் தேதி ‘நிழல்’ படம் ஓடிடி-யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    பிரபுதேவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ராதே படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்துள்ளதோடு படத்தையும் தயாரித்துள்ளார்.
    பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘ராதே’. பிரபுதேவா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும்.

    இப்படத்தை கடந்தாண்டு ரம்ஜான் பண்டிகையன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படம் ரிலீசாகவில்லை. இதனால் கடந்த ஓராண்டாக வெளியிடப்படாமல் முடங்கிக் கிடந்த இப்படம் இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    ராதே படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக ராதே படம், வருகிற மே 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகாது என நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். ஆனால் திட்டமிட்டபடி ஓடிடி மற்றும் டி.டி.ஹெச்-ல் வெளியாகும் எனக்கூறியுள்ள அவர், ரசிகர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே படத்தை கண்டுகளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். மேலும் கொரோனா பரவல் குறைந்த பின்னர் ராதே படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதையும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான ஷாலு ஷம்முவின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    தமிழில் 2013ல் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அதன் பிறகு ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். தற்போது பவுடர், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார் ஷாலு ஷம்மு.

    ஷாலு ஷம்மு

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். வழக்கமாக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தும் ஷாலு ஷம்மு, தற்போது பாவாடை தாவணியில் அச்சு அசல் கிராமத்து பெண் போல மாறி போட்டோஷுட் நடத்தி உள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.
    நடிகை ஜெயசித்ரா, "புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.
    1977-ம் ஆண்டில் ஏ.பீம்சிங் டைரக்ட் செய்த "பாத பூஜை''யில் ஜெயசித்ரா நடித்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்தார்.

    ஜெயசித்ராவின் 100-வது படம் "நாயக்கரின் மகள்.'' முதல் படத்தை டைரக்ட் செய்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான், 100-வது படத்தையும் இயக்கினார். இதையொட்டி, கோபாலகிருஷ்ணனுக்கு மோதிரம் அணிவித்து வாழ்த்து பெற்றார், ஜெயசித்ரா.

    பிற்காலத்தில், டைரக்டர் மணிரத்தினத்தின் "அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்தார்.

    1988-ல், கே.பாலசந்தரின் "புதுப்புது அர்த்தங்கள்'' படத்தில் ரகுமானின் மாமியாராக (கீதாவின் அம்மாவாக) நடித்தார். இந்தப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு குழந்தை பிறந்தது. ஜெயசித்ரா படப்பிடிப்புக்காக ஸ்டூடியோ வந்து போவது சிரமமாக இருக்கும் என்பதால், குடியிருந்த பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, படப்பிடிப்பை நடத்தினார்கள்.

    1991-ல் ரகுமானை கதாநாயகனாக வைத்து, "புதிய ராகம்'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்தார்.

    ஜெயசித்ராவின் மகன் அம்ரேசுக்கு அப்போது ஒரு வயது. அவனையும் அப்படத்தில் நடிக்க வைத்தார்.

    ஜெயசித்ரா தமிழிலும், இதர தென்மாநில மொழிகளிலும் 200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி மொழி தெரியாதாகையால், இந்திப்படங்களில் நடிக்கவில்லை.

    படங்களில் நடித்து வந்தபோது, "சுமங்கலி'' டெலிவிஷன் தொடரில் நடித்தார். அந்தத் தொடரில் இவர் ஏற்று நடித்த சாவித்திரி என்ற வேடம், பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    பின்னர் "சிவரஞ்சனி'' என்ற தொடரை சொந்தமாகத் தயாரித்தார். அந்தத் தொடரின் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளையும் கவனித்தார்.

    இந்தத் தொடரில் ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ், கண்ணன் என்ற கேரக்டரில் நடித்தார்.

    ஜெய்சித்ரா -கணேஷ் தம்பதிகளின் மகன் அம்ரேஷ். இப்போது "பிளஸ்-2'' படித்து முடித்துள்ளார். சினிமாவில் அவரை முன்னுக்குக்கொண்டு வரவேண்டும் என்பது ஜெயசித்ராவின் விருப்பம். அதற்காக நடனம், சண்டை முதலியவற்றில் பயிற்சி அளித்து வருகிறார்.

    "சிவரஞ்சனி'' டெலிவிஷன் தொடரில், சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர் அம்ரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரைப்பட அனுபவங்கள் பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    "நான் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியபோது, ரொம்ப பிசியாக இருந்தேன். 1974 முதல் 1976 வரை, ஒவ்வொரு ஆண்டும் 18 படங்களில் நடித்தேன். ஆயிரத்திற்கு மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சியும் பண்ணி இருக்கிறேன்.

    கால்ஷீட் பணிகளை கவனிப்பதற்கு யாரையும் வேலைக்கு வைத்துக்கொள்ளவில்லை. நானே கவனித்தேன். சோர்வின்றி உழைத்ததாலும், என் பணிகளில் கவனமாக இருந்ததாலும்தான் 200 படங்களுக்கு மேல் நடிக்க முடிந்தது.

    ரஜினிகாந்த் தமிழ்ப்படங்களில் நடிக்க வருவதற்கு முன், சிவாஜிராவ் என்ற பெயரில் "தொலிரேகி -கடிசிந்தி'' என்ற தெலுங்குப்படத்தில் என்னுடன் நடித்துள்ளார்.

    முதன் முதலில் கமல் கதாநாயகனாக நடித்த "பட்டாம் பூச்சி'' படத்தில், நான்தான் அவருக்கு ஜோடியாக நடித்தேன். இதுகுறித்து பெருமைப்படுகிறேன்.

    நான் டைரக்ட் செய்த `புதிய ராகம்' படத்தை, ராஜீவ் காந்திக்கு போட்டுக்காட்ட நினைத்தேன். ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் வழியில் அவரை விமான நிலையத்தில் சந்தித்தேன்.

    தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்ததால், படம் பார்க்க இயலாமையைத் தெரிவித்தார். எனக்கு வாழ்த்து எழுதிக் கொடுத்தார்.

    படத்தை தியேட்டரில் தொடங்கி வைத்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ள எண்ணினேன். தியேட்டரில் மின்சார தடை ஏற்பட்டதால், படத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை. இதனால் நான் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. சென்றிருந்தால், அந்த குண்டு வெடிப்பில் நானும் சிக்கி இருப்பேன்.

    நல்ல கேரக்டர் கிடைத்தால், படங்களில் நடிப்பேன்.

    என் மகனுக்கு நடிப்புத் திறமை இருக்கிறது. எனவே, நல்ல முறையில் அவனை அறிமுகப்படுத்த பயிற்சி அளித்து வருகிறேன்.

    எல்லோரும் சினிமாத்துறையில் முன்னேறி விட முடியாது. அதற்கு, கடவுளின் அனுக்கிரகம் தேவை.''

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.
    சூர்யாவின் கஜினி, தனுஷின் சுள்ளான் படங்களை தயாரித்த சேலம் சந்திரசேகர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
    கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் இயக்குனர் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு, ஜோக்கர் துளசி என சிலர் இறந்தும் போய் உள்ளனர். 

    அந்த வகையில், தற்போது சூர்யாவின் கஜினி, தனுஷின் சுள்ளான் படங்களை தயாரித்த சேலம் சந்திரசேகர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் பிப்ரவரி 14, சபரி, கில்லாடி போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    தமிழ் சினிமாவில் பரத்துடன் ஒரு படத்தில் நடித்த நடிகை, தற்போது 10 ஆண்டுகளுக்கு மீண்டும் தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
    சண்டை இயக்குனர் ஸ்டண்ட் சில்வா ஒரு புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அந்தப் படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    சாய் பல்லவியின் தங்கை இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு இயக்குனர் விஜய் கதை எழுதியுள்ளார். தற்போது இந்தப் படத்தில் மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. 

    ரீமா கல்லிங்கல்

    ரீமா 2011 ஆம் ஆண்டில் ஜி.என்.ஆர் குமாரவேலனின் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான ‘யுவன் யுவதி’ படத்தின் நடித்திருந்தார். தற்போது ஸ்டண்ட் சில்வா இயக்கும் இந்தப் படத்தின் மூலம் ரீமா 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார்.
    தமிழில், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்த சுனைனா, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    கொரோனா 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. பல மாநிலங்கள் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளன.

    இந்த தொற்றால் சினிமா நடிகர், நடிகைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை சுனைனாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழில், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர்.

    சுனைனா

    கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து சுனைனா டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

     ‘பலத்த எச்சரிக்கையுடன் இருந்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டின் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என் குடும்பத்தினர் தவிர வேறு யாருடன் தொடர்பு கொள்ள வில்லை என்பதால் அவர்களும் தனிமையில் உள்ளனர். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். அனைவருக்கும் என் பிரார்த்தனைகள்’எனக் கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டு வரும் தக்‌ஷா குழு திருநெல்வேலியில் களமிறங்கி உள்ளது.
    நடிகர் அஜித் வழிகாட்டுதலின் கீழ் தக்‌ஷா குழுவினர் உருவாகியுள்ள டிரோன் கேமராக்கள் கொரோனா தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமாகப் பரவி வருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தக்‌ஷா குழுவும் கொரோனா தடுப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    அஜித்

    அஜித்தின் வழிகாட்டுதலின் கீழ் தக்‌ஷா குழு உருவாக்கிய ட்ரோன்கள், கொரோனா பரவும் பகுதிகளில் கிருமிநாசினியை தெளித்து வருகின்றன. இந்தக் குழு தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் ட்ரோன்கள் மூலம் சாலைகளில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். எனவே அரசுக்கு உதவி வரும் தக்‌ஷா குழுவை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
    ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பாத்திமாவின் மகனான காஷிப்பின் புதிய பாடலுக்கு சமூக வலைத்தளத்தில் வரவேற்பு கிடைத்தது இருக்கிறது.
    ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி, மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான பதினெட்டாம்படி உள்ளிட்ட வெற்றி படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.எச்.காஷிப். காஷிப்பின் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பாத்திமாவின் மகனான காஷிப் சினிமா பாடல்கள் மட்டும் அல்லாமல் தனி இசை பாடல்களிலும் தன் திறமையை நிரூபித்து வருகிறார். 

    இவர் இசை உருவாக்கத்தில் காதலர் தினத்துக்காக உருவாக்கி வெளியிட்ட ஆல்பம் லட்சக்கணக்கான ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. அடுத்து ரெண்டகம், ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துவரும் காஷிப் இந்த கொரோனா காலத்தில் ரசிகர்களை மகிழ்விக்க தன் புதிய ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார். 

    புனித ரமலான் பண்டிகையொட்டி அல்லா யா அல்லா என்ற அவரது ஆல்ப பாடலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மாஷூக் ரகுமான் எழுதிய வரிகளுக்கு அமினா குரல் கொடுக்க அஸ்வின் ராம் இயக்கி உள்ளார்.
    கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை இறப்புக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 69. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், அன்பு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர் பிரேம்ஜி, யுவன் உட்பட என் சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை...

    எதையும் சாதாரணமாக எளிமையாக எடுத்துக் கொண்டு செல்பவர்கள் நீங்கள். கடந்த இரண்டு வருடமாக, இதற்கு முன் நட்பாக இணைந்திருந்தாலும்.. இந்த இரண்டு வருடம் இணைந்து பணிபுரியும் போது எவ்வளவு அழகாக, எளிமையாக, எந்த சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் எனப் பார்த்திருக்கிறேன்.

    வெங்கட் பிரபு

    ஆனால், அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு இதைக் கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதறிவேன். அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று. ஆறுதல் சொல்ல முடியாத ஒரு இழப்பு.

    அப்பாவிற்கும், குடும்பத்திற்கும், உங்களனைவருடனும், இழப்பையும்... வேதனையையும் பகிர்ந்துகொள்கிறேன். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். கண்ணீருடன் சிலம்பரன் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் கொரோனா ஊரடங்கு நேரத்தில் மக்களுக்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் தனது தாயின் தேவி அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். 
    ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த நன்றாக படிக்கும் மாணவர்களை தத்தெடுத்து பட்டப்படிப்பு படிக்க வைத்து வருகிறார்கள். கடந்த வருடம் ஊரடங்கில் மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்கினார். 

    மேலும் ஆதரவற்ற சாலையோர மக்களுக்கு உணவுகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். தற்போது மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டிருப்பதால், தினமும் 500 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்து இருக்கிறார். 

    விஷால்

    இந்த உணவு பொருட்களை தேவி அறக்கட்டளைையின் ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் சென்னையில் உள்ள பல இடங்களில் சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு வழங்கி வருகிறார். அதுபோல், உணவின்றி தவித்து வரும் சாலையோர கால்நடைகளுக்கும் உணவுகளை கொடுத்து வருகிறார்கள். 
    ×