தொழில்நுட்பம்
சாம்சங் ஸ்மார்ட்போன்

61 சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனைக்கு தடை

Published On 2021-10-22 15:32 GMT   |   Update On 2021-10-22 15:32 GMT
சாம்சங் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனைக்கு திடீர் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.


சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனைக்கு மாஸ்கோ நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. மொத்தம் 61 கேலக்ஸி போன் மாடல்களின் விற்பனையை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பட்டியலில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மாடலும் இடம்பெற்று இருக்கிறது.

பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. விற்பனை நிறுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் சுவிட்சர்லாந்தை பூர்விகமாக கொண்டு இயங்கி வரும் ஸ்க்வின் எஸ்.ஏ. எனும் நிறுவனத்தின் காப்புரிமைகளை மீறியது கண்டறியப்பட்டு இருக்கிறது.

சாம்சங் பே சேவை ஸ்க்வின் எஸ்.ஏ. நிறுவனத்தின் எலெக்டிரானிக் பேமண்ட் சிஸ்டத்தை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. சாம்சங் தனது எலெக்டிரானிக் பேமண்ட்ஸ் சிஸ்டம் உருவாக்கும் போது ஸ்க்வின் நிறுவனம் காப்புரிமை செய்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறது.



ஸ்க்வின் எஸ்.ஏ. நிறுவனம் தனது பேமண்ட் சிஸ்டத்திற்கான காப்புரிமையை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே ரஷ்யாவில் பதிவு செய்ததாக தெரிவித்து இருக்கிறது. சாம்சங் தனது பேமண்ட் சிஸ்டத்தை 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து ரஷ்யாவில் இதனை 2016 வாக்கில் பயன்பாட்டிற்கு வழங்கியது.

நீதிமன்ற உத்தரவு படி 2017 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஜெ5 மாடலில் துவங்கி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் ப்ளிப் 3 போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
Tags:    

Similar News