தொழில்நுட்பம்
ஆப்பிள்

ஐபோன்களை பாதித்த பெகாசஸ் ஸ்பைவேர் - உடனடி பதில் அளித்த ஆப்பிள்

Published On 2021-07-20 10:24 GMT   |   Update On 2021-07-20 10:24 GMT
செய்தியாளர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் ஐபோன்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல்களுக்கு ஆப்பிள் நிறுவனம் பதில் அளித்துள்ளது.


இஸ்ரேல் நாட்டை சேர்ந்த NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் செய்தியாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பெகாசஸ் ஸ்பைவேர் ஐபோன் மாடல்களையும் பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 மாடல்களில் பயனருக்கே தெரியாமல் இந்த ஸ்பைவேர் நுழைந்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஐபோன்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது என தகவல்கள் வெளியாகி வருகின்றன. பெகாசஸ் தாக்குதலில் பல ஐபோன்கள் குறிவைக்கப்பட்டன. எனினும், எத்தனை யூனிட்கள் வெற்றிகரமாக ஹேக் செய்யப்பட்டன என்ற விவரங்கள் வெளியாகவில்லை. 



இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு தலைவர் இவான் ஸ்டிக் கூறும் போது, “இதுபோன்ற தாக்குதல்கள் மிகவும் சிக்கலானவை ஆகும். இவற்றை செயல்படுத்த அதிக செலவாகும். மேலும் இவை மிகவும் குறிப்பிடத்தக்க நபர்களை குறிவைத்தே நடத்தப்படுகின்றன. ஐபோன்களில் பாதுகாப்பு அம்சத்தை மேலும் பலப்படுத்துவதற்கான பணிகளில் ஆப்பிள் ஈடுபட்டு வருகிறது.”

“உலகை வாழ்வதற்கு ஏற்ற சிறந்த பகுதியாக மாற்ற நினைக்கும் செய்தியாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான சைபர் தாக்குதல்களை ஆப்பிள் கடுமையாக கண்டிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக பாதுகாப்பு விஷயத்தில் புதுமையை புகுத்துவதில் ஆப்பிள் சிறந்து விளங்குகிறது. மேலும் உலகின் பல்வேறு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் உலகில் கிடைக்கும் நுகர்வோர் மொபைல் சாதனங்களில் ஐபோன் மிகவும் பாதுகாப்பானது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். எங்களது சாதனங்களின் தரவுகளை பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என தெரிவித்தார். 
Tags:    

Similar News