தொழில்நுட்பம்
நத்திங் இயர் 1 வெளியீட்டு தேதி அறிவிப்பு
நத்திங் நிறுவனத்தின் புதிய இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜூலை மாத இறுதியில் அறிமுகமாகிறது.
லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜூலை 27 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. நத்திங் நிறுவனத்தின் முதல் இயர்பட்ஸ் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் போதே இந்தியாவிலும் அறிமுகமாகிறது.
இந்தியாவில் நத்திங் இயர் 1 ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் வட்டியில்லா மாத தவணை முறை வசதியுடன் விற்பனை செய்யப்படும் என ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த இயர்பட்ஸ் ஜூன் மாதத்திலேயே அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், இதன் வெளியீடு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான நீண்ட பயணத்தின் சிறுதுவக்கம் தான் இயர் 1 என நத்திங் நிறுவனர் கால் பெய் தெரிவித்து இருக்கிறார். புது இயர்போன் டிசைன் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இது தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கும் என நத்திங் தெரிவித்துள்ளது.
நத்திங் இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜூலை 27 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது இயர்பட்ஸ் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.