தொழில்நுட்பம்
மத்திய அரசின் விதிமுறைகளை ஏற்கும் விவகாரத்தில் பேஸ்புக் வெளியிட்ட சூசக தகவல்
மத்திய அரசு பிறப்பித்து இருக்கும் புது விதிகளை ஏற்பது குறித்து பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் பதில் அளித்து இருக்கிறார்.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைதள நிறுவனங்ங்கள், ஓடிடி தளங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை வெளியிட்டது. இதன்படி, சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் சா்ச்சைக்குரியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்க வேண்டும்.
மேலும், குறைகளை உடனக்குடன் நிவா்த்தி செய்ய சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு அதிகாரி தலைமையில் குறைதீர்க்கும் முறையை செயல்படுத்த வேண்டும். அதுபோல, அவதூறான செய்தியை முதலில் பரப்பும் நபரை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும்.
புதிய விதிமுறைகளை பின்பற்ற மத்திய அரசு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் அளித்தது. இதற்கான காலக்கெடு இன்று (மே 25) நிறைவுக்கு வருகிறது. விதிகளுக்கு இணங்காத நிறுவனங்கள் தடை செய்யப்படும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என மத்திய அரசு எச்சரித்து இருந்தது.
எனினும், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இதுவரை இணங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறும் போது, "தகவல் தொழில்நுட்ப துறையின் புதிய விதிகளுக்கு இணங்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். எனினும், சில விஷயங்கள் குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறோம். இவை குறித்து அரசுடன் கூடுதலாக ஆலோசிக்க வேண்டியுள்ளது."
"தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்றுவதோடு, செயல்பாட்டு நடைமுறைகளை அமல்படுத்துவது, செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பாக பணியாற்றி வருகிறோம். எங்களது தளத்தில் மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் பேஸ்புக் உறுதியாக உள்ளது”என்றார்.