தொழில்நுட்பம்
கோவின் வலைதள ஸ்கிரீன்ஷாட்

CoWIN தளத்தில் செக்யூரிட்டி கோட் அம்சம் அறிமுகம்

Published On 2021-05-08 08:06 GMT   |   Update On 2021-05-08 08:06 GMT
மத்திய அரசின் கொரோனாவைரஸ் தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்போருக்கு பிரத்யேக செக்யூரிட்டி கோட் அனுப்பப்படுகிறது.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொது மக்கள் CoWIN தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி முறையை பாதுகாப்பாகவும், விரைவாகவும் மேற்கொள்ள இந்த முறை பின்பற்றப்படுகிறது.

இந்த நிலையில், CoWIN தளத்தில் முன்பதிவு செய்வோருக்கு நான்கு இலக்க பாதுகாப்பு குறியீடு அனுப்பப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் தீயவர்கள் சதி செய்து பணம் பறிக்கும் முயற்சியை தடுக்க முடியும். தடுப்பூசி மையங்களில் இந்த நான்கு இலக்க குறியீட்டை தெரிவித்ததும், தடுப்பூசி சான்று உருவாக்கப்படும். 



குறியீட்டு முறையை கொண்டு தடுப்பூசி சான்று உருவாக்குவதில் ஏற்படும் தவறுகளை குறைக்க முடியும். தனிப்பட்ட முறையில் தடுப்பூசி திட்டம் மூலம் ஆதாயம் தேட முயற்சி செய்வோரிடம் இருந்து மக்களை காப்பாற்றவும் புதிய குறியீட்டு முறை பயன்தரும்.

பொது மக்கள் CoWIN தளத்தில் முன்பதிவு செய்யும் போது, அவர்களுக்கான தடுப்பூசி மையம் உறுதி செய்யப்பட்டதும், நான்கு இலக்க குறியீடு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் தினத்தன்று இந்த குறியீட்டை தடுப்பூசி மையத்தில் உள்ள அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.

பின் தடுப்பூசி செலுத்திக் கொண்டதும், CoWIN தளம் சென்று தடுப்பூசி சான்றிதழை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News