தொழில்நுட்பம்
ஜியோமீட்

ரிலையன்ஸ் ஜியோவின் வீடியோ கான்பரன்சிங் செயலி அறிமுகம்

Published On 2020-07-03 07:02 GMT   |   Update On 2020-07-03 07:02 GMT
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோமீட் வீடியோ கான்பரன்சிங் செயலி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வீடியோ கானபரன்சிங் சேவையான ஜியோமீட் செயலி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஜியோமீட் செயலியில் ஒரே சமயத்தில் 100 பேருடன் வீடியோ கால் பேச முடியும். மேலும் இதை கொண்டு, இடைவிடாது 24 மணி நேரத்திற்கு உரையாடல்களை நடத்த முடியும். 

ஜியோமீட் செயலி ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ், மேக் ஒஎஸ் மற்றும் இணையம் என பல்வேறு தளங்களில் கிடைக்கிறது. பயனர்கள் இந்த செயலியினை ஜியோமீட் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்ய முடியும்.

பயனர்கள் ஜியோமீட் இன்வைட் லின்க் கொண்டு அழைப்புகளில் இணைந்து கொள்ளலாம். இதற்கென செயலியை தனியே டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனினும், அழைப்புகளை துவங்குபவர் ஜியோமீட் செயலியை இன்ஸ்டால் செய்திருப்பது அவசியம் ஆகும்.

இந்த சேவையில் ஹெச்டி ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அழைப்புகளை முன்கூட்டியே ஷெட்யூல் செய்யும் வசதியும், ஷெட்யூல் பற்றிய விவரங்களை அதில் கலந்து கொள்ள இருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஜியோமீட் அழைப்புகள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்வதோடு, பாஸ்வேர்டு கொண்டு பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பயனர்கள் அனுமதியின்றி அழைப்புகளில் பங்கேற்பதை தவிர்க்க வெய்டிங் ரூம் எனும் அம்சம் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News