தொழில்நுட்பம்
ஸ்மார்ட்போன் பயன்பாடு

ஸ்மார்ட்போன்களில் எவ்வளவு ரேம் இருக்க வேண்டும்?

Published On 2019-10-05 09:33 GMT   |   Update On 2019-10-05 09:33 GMT
ஸ்மார்ட்போன் வாங்கும் போது அதில் குறைந்தபட்சம் எத்தனை அளவு ரேம் இருக்க வேண்டும் என்பது பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



பேசுவதற்கு மட்டும் கைபேசி என்பது பழங்கதை. பாட்டு கேட்பது, புகைப்படம் எடுப்பது, வங்கியில் பணம் போடுவது எடுப்பது, பொருட்களை வாங்குவது விற்பது, சமூக வலைத்தளங்களில் நண்பர்களுடன் பேசுவது, வருமான வரி முதல் பல கட்டணங்களை இணையதளம் மூலம் கட்டுவது என்று லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் செய்யும் எல்லா வேலைகளையும் நாம் இன்று நம் மொபைல் போன் மூலம் செய்கிறோம். 

இப்படி பல வேலைகளை இடையூறு இல்லாமல் செய்ய நமக்கு தேவையானது தான் 'ரேம்' எனப்படும் 'ரேன்டம் ஆக்சஸ் மெமரி' நாம் டவுன்லோடு செய்யும் ஆப்களும், கேம்களும் நம் சிபியு (சென்ரல் ப்ராசசிங் யூனிட்) வில் தானே சேமிக்கப்படுகிறது. அப்படியிருக்கையில் 'ரேம்' என்பது எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நாம் நம் போனில் ஒரு ஆப்பை திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, மற்றொரு ஆப்பை திறக்க நேர்ந்து, மீண்டும் பழைய ஆப்பிற்கு போக நேர்ந்தால், ரேம் அந்த ஆப்பில் செய்துக் கொண்டிருந்த வேலை உடனடியாக விட்ட இடத்திலிருந்து தொடரும் வகையில் திறக்கப்படும். இது தான் 'ரேம்' செய்யும் வேலை. 

நாம் மொத்தமாக ஒரு பொருளை வாங்கி வைத்திருக்கும் போது, அதிலிருந்து கொஞ்சத்தை எடுத்து கைக்கெட்டும் வகையில் டக்கென்று எடுக்கும் வகையில் வைத்துக் கொள்வோம் இல்லையா. அது போல் தான் சிபியு, ஜிபியூ வில் சேமிக்கப்பட்டிருக்கும் ஆப்பை 'ரேம்' மில் எடுத்து வைத்து உபயோகப்படுத்துவது.



ரேம்மின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்

முதன் முதலில் வந்த போன்களில் 192 எம்.பி. ரேம் தான் கொடுக்கப்பட்டிருந்தது. முதலில் வந்த ஐபோனில் 128 எம்.பி. ரேம் தான் இருந்தது. இது ஆண்டு தோறும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு தற்போதைய போன்களில் 8 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட்போன் மூலம் பல வேலைகளை ஒரே நேரத்தில் துரிதமாக செய்ய வேண்டுபவர்களுக்கு 8 ஜிபி ரேம் என்பது தேவைப்படுகிறது. 8 ஜிபி என்பது எல்லோருக்கும் தேவைப்படக்கூடியது என்று சொல்ல முடியாது, பொதுவாக 4 ஜிபி ரேம் என்பது பெரும்பான்மையானவர்களுக்கு போதுமானதாக இருக்கும். பொதுவாக ஒரு ஸ்மார்ட் போனில் ஒரு நாளைக்கு 10 ஆப் என்ற அளவிற்கு திறக்கிறார் என்றும், ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 30 வெவ்வேறு ஆப்களை உபயோகிக்கிறார் என்றும் வைத்துக் கொண்டால், அதற்கு கிட்டத்தட்ட 3 ஜிபி அளவிற்கான மெமரி உபயோகப்படுத்தப்பட்டிருக்கும்.



ஏன் அதிக ரேம் தேவை

தற்போதைய போன்களில் பெரிய அளவிலான மென்பொருட்களுடன் வருகிறது. பல சிக்கலான பணிகளை ஸ்மார்ட்போன் மூலமாகவே செய்கிறோம். கேமராக்கள் மூலம் பெரிய படங்களை 'ஆர்.ஏ.டபிள்யூ' (RAW) ஃபார்மெட்டில் படமாக்கும் செயல்பாடுகள் போனில் இருக்கிறது. பெரிய தொடு திரைகள் வந்துள்ளன. 

ஒரு ஆப்பை திறந்து வைத்துவிட்டு மற்றொரு ஆப்பில் ஒரு வேலையை முடித்து விட்டு திரும்பும் போது பழைய ஆப் மூடியிருந்தால், திரும்பவும் முதலிலிருந்து திறக்க அதிக நேரம் ஆகும். இதனால் துரிதமாக வேலை செய்ய முடியாது. பல பேர் இன்று மெயில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாட்ஸ்அப்பில் மற்றொருவருடன் பேசிக் கொண்டிருப்பார். 

வாட்ஸ்அப்பில் பேசிக் கொண்டிருப்பவர் அனுப்பும் ஒரு புகைப்படத்தையோ, ஆவணத்தையோ, டவுன்லோட் செய்து, மெயிலில் வேறொருவருக்கு அனுப்ப வேண்டியிருக்கலாம். அதே நேரம் இந்த வேலை பற்றிய விவரத்தை மற்றொரு சமூக வலைத்தளத்தில் பதிவிட வேண்டியிருக்கலாம். 

இம்மாதிரி தருணத்தில் ஒரே நேரத்தில் பல ஆப்களுக்கு மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டி இருக்கும். இதற்கு அதிக ரேம் உள்ள போன்கள் வசதியாகவும், மென்மையாகவும் தொடர்ந்து இயக்கக் கூடியதாகவும் இருக்கும். எனவே தற்போதைய பலருடையப் பயன்பாட்டிற்கு 4 ஜிபி ரேம் உள்ள ஸ்மார்ட்போன்கள் உகந்ததாக இருக்கின்றன.
Tags:    

Similar News