தொழில்நுட்பம்
டிக்டாக் லோகோ

டிக்டாக் செயலி பயனர் விவரங்களை சேகரித்து சீனாவிற்கு அனுப்புகிறது

Published On 2019-07-02 06:20 GMT   |   Update On 2019-07-02 06:20 GMT
டிக்டாக் செயலி பயனர் விவரங்களை சேகரித்து அவற்றை சீனாவிற்கு அனுப்பி வருவதாக காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.



காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் டிக்டாக் செயலி பயனர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை சீனாவிற்கு அனுப்பி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பயனர் விவரங்களை பாதுகாக்க முறையான டேட்டா பாதுகாப்பு கட்டமைப்புகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள், செயலிகள், சமூக வலைதளம் மற்றும் இணைய பயன்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பயனர் விவரங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் குழந்தைகளின் விவரங்களை அனுமதியின்றி சேகரித்ததாக, டிக்டாக் செயலி மீது அமெரிக்க அரசு 57 லட்சம் டாலர்கள் அபராதம் விதித்தது. சீனா டெலிகாம் உதவியுடன் டிக்டாக் செயலி பயனர் விவரங்களை பரிமாற்றம் செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார். 



தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் அரசாங்கம் உடனடியாக பயனர் விவரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் டிக்டாக் செயலி அதிக டவுன்லோடுகளை பெற்று பிளே ஸ்டோரில் முன்னணி இடம் பிடித்தது. முன்னதாக டிக்டாக் செயலியை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. பின் கடும் நிபந்தணைகளுடன் செயலி மீதான தடை நீக்கப்பட்டது. தடைக்கு பின் மீண்டும் அறிமுகமான டிக்டாக் அதிக டவுன்லோடுகளை கடந்தது.

சமீபத்தில் வெளியான விவரங்களில் பிளே ஸ்டோரில் அதிக டவுன்லோடுகளை கடந்த செயலிகள் பட்டியலில் டிக்டாக் செயலி கடந்த ஐந்து காலாண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. 2019 முதல் காலாண்டில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிக டவுன்லோடு செய்யப்பட்ட செயலியாக டிக்டாக் அறிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News