தொழில்நுட்பம்

ஆதார் உதவி எண் விவகாரத்திற்கு காரணம் நாங்க தான் - கூகுள் விளக்கம்

Published On 2018-08-04 04:47 GMT   |   Update On 2018-08-04 04:47 GMT
இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோரின் கான்டாக்ட்களில் தானாக ஆதார் சேவை மைய உதவி எண் தானாக சேமிக்கப்பட்டதற்கு கூகுள் பொறுப்பேற்றுக் கொண்டது. #UIDAIMystery #Google


இந்தியா முழுக்க மொபைல் போன் பயன்படுத்துவோரின் கான்டாக்ட்களில் ஆதார் சேவை மையத்திற்கான (UIDAI) இலவச அழைப்பு எண் தானாக சேமிக்கப்பட்டு இருப்பதாக கடந்த சில நாட்களாக பலர் குற்றஞ்சாட்டி வந்தனர். மர்ம முறையில் ஆதார் சேவை உதவி எண் சேமிக்கப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஆதார் சேவை மையம் உடனடியாக பதில் அளித்திருந்தது. 

அதில் மொபைல் போன் பயன்படுத்துவோர் கான்டாக்ட்-இல் தானாக சேமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் ‘18003001947’ பழைய எண், இந்த இலவச எண் செயலற்று கிடக்கிறது என தெரிவித்தது. மத்திய அரசின் ஆதார் மையம் இவ்வாறு செய்யவில்லை எனில், பயனற்ற நம்பரை யார் பதிவு செய்தார்கள் என்ற குழப்பத்திற்கு கூகுள் பதில் அளித்துள்ளது.

இதுகுறித்து கூகுள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஆதார் சேவை மைய இலவச அழைப்பு எண் மொபைல் போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆன்ட்ராய்டு செட்டப் விசார்டில் தவறுதலாக கோடிங் செயய்ப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட ஆன்ட்ராய்டு செட்டப் அன்று முதல் தளத்தில் இருந்ததோடு, புதிய சாதனங்களிலும் அப்டேட் ஆகியிருக்கிறது.

சில ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கும் ஆதார் சேவை மைய இலவச அழைப்பு எண் தங்களது போன்புக்-இல் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் ஆன்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாறும் போது சின்க் செய்யப்பட்டு இருக்கலாம். இது ஆன்ட்ராய்டு சாதனங்களில் முறையற்ற பயன்பாடு கிடையாது என கூகுள் உறுதியாக தெரிவித்துள்ளது. 

எனினும், இந்த பிழையை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் மொபைல் போன் உற்பத்தியாளர்களுக்கு இதற்கான அப்டேட் வெளியிடப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. #UIDAIMystery #Google
Tags:    

Similar News