ஆப்பிள் டிவி HD விற்பனையை நிறுத்திய ஆப்பிள்
- ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
- புதிய ஐபேட் ப்ரோ மற்றும் புது ஐபேட் மாடல்களுடன் ஆப்பிள் டிவி 4K மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் டிவி மாடலை இருவித வேரியண்ட்களில் விற்பனை செய்து வந்தது. 2017 வாக்கில் டிவி 4K மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நான்காம் தலைமுறை ஆப்பிள் டிவி HD மாடலுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் ஆப்பிள் புதிய டிவி 4K மாடலை அறிமுகம் செய்த நிலையில், பழைய HD வேரியண்ட் விற்பனையை நிறுத்தி இருக்கிறது.
புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் (10th Gen) மாடல்களுடன் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய டிவி 4K மாடலை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் டிவி HD வேரியண்ட் ஆப்பிள் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. டிவி ஒஎஸ் கொண்ட முதல் டிவி மற்றும் டிவி சீரிசில் நான்காம் தலைமுறை மாடலாக ஆப்பிள் டிவி HD விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் ஏ8 சிப் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
நான்காம் தலைமுறை ஆப்பிள் டிவி HD மாடலுடன் சிரி வசதி கொண்ட ரிமோட் வழங்கப்பட்டது. இதில் டச்பேட் மற்றும் மோஷன் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 32 ஜிபி மாடல் விலை 149 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 358 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் டிவி 4K மாடலை அறிமுகம் செய்தது. இதில் 4K ரெசல்யூஷன், ஏ10எக்ஸ் பியுஷன் சிப்செட், HDR வசதி வழங்கப்பட்டு இருந்தது.
தற்போது புதிய ஆப்பிள் டிவி 4K 2022 மாடலில் மேலும் சக்திவாய்ந்த ஏ15 பயோனிக் பிராசஸர், யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் கொண்ட புதிய சிரி ரிமோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ. 14 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில், விற்பனை நவம்பர் 4 ஆம் தேதி துவங்க இருக்கிறது.