weekly rasipalan 18.1.2026 to 24.1.2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
- மிதுனம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் வாரம்.
- கடகம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம்.
மேஷம்
பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். இது மேஷ ராசிக்கு மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தொழில் தொடர்பான விஷயங்களில் அதிகப்படியான ஆர்வத்தை அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் தொழில் திறமை பிரமிக்க வைக்கும்.
படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானம் பல மடங்கு உயரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும். ஏழரைச் சனியால் கணவன், மனைவிக்குள் நிலவிய பிணக்குகள் நீங்கி இணக்கம் ஏற்படும். தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் கைகூடும். திருமணம், புத்திரம் போன்ற சுப காரியங்களில் இதுவரை இருந்த தடைகள் நீங்கும்.
குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் அரசியல்வாதிகளின் திட்டங்கள் பலிதமாகும். தந்தை வழி உறவுகளுடன் நிலவிய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தை மாத செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அகலும்.
ரிஷபம்
தடைபட்ட பாக்கிய பலன்கள் கைகூடும் வாரம். ரிஷப ராசிக்கு 9-ம் மிடமான பாக்கியஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. வாழ்க்கை முன்னேற்றத்திற்கான புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வராக்கடன்கள் வசூலாகும். தன ஸ்தானத்தில் குரு நிற்பதால் எதையெதையோ செய்து நஷ்டத்தை அடைந்தவர்களுக்கு தன்னம்பிக்கையோடு பிழைக்கும் வழி தென்படும்.
பதவி உயர்வு, ஊதிய உயர்வு என விரும்பிய மாற்றங்களால் ஏற்றம் உண்டாகும். வாழ்க்கைத் தரம் உயரும். வீடு, வாகனம் தொடர்பான முயற்சியில் ஈடுபட உகந்த நேரம். தந்தை விருப்ப ஓய்வு பெறலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தென்படும். நீண்ட நாட்களாக தடையான காரியங்கள் துரிதமாக நடைபெறும்.
18.1.2026 அன்று மாலை 4.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணவரவில் தடை, தாமதம் ஏற்படுவதால் மன சஞ்சலம் உண்டாகும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதப்படும். பண விசயத்தில் யாரையும் நம்பக்கூடாது. தை வெள்ளிக்கிழமை அம்பிகை வழிபாடு செய்யவும்.
மிதுனம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசி அதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். பணம் சம்பாதிப்பதிலும் குடும்பத் தேவைகளை நிறைவு செய்வதிலும் கவனம் செலுத்துவீர்கள். வீடு வாகனம் சொத்து திருமணம் புத்திர பிரார்த்தம் போன்றவற்றில் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும்.
உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூலி தொழிலாளிகளுக்கு ஒப்பந்த வேலை கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம், திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. பண்டிகை கால விடுமுறை பயனுள்ளதாக அமையும். எதிர்பாராத பண வரவுகளால் கையிருப்பு சேமிப்பு உயரும். சில மறைமுக எதிர்ப்புகள், போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் வெற்றி நிச்சயம்.
அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 18.1.2026 அன்று மாலை 4.41 முதல் 21.1.2026 அன்று நள்ளிரவு 1.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்ப விஷயங்களில் மற்றவர்கள் தலையிடுவதை புறக்கணிக்கவும். அவல் பாயாசம் படைத்து மகா விஷ்ணுவை வழிபடவும்.
கடகம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். ராசிக்கு சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் பார்வை உள்ளது. சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனதில் செய்ய நினைத்த காரியங்களை மறு நிமிடமே செய்து முடிப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்கு விற்பனையும் லாபமும் படு ஜோராக இருக்கும்.
பணியாளர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு, மன பாரம் குறையும். சில தம்பதிகள் இணைந்து கூட்டுத் தொழில் முயற்சி செய்யலாம். அதற்கு தேவையான நிதியும் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். அரசு வேலைக்கான நேர்காணலில் வெற்றி உறுதி. கவுரவப்பதவிகள் தேடி வரும். மாமனார், சகோதரர் மூலம் தன வரவு உண்டாகும்.
தந்தை மகன் உறவு பலப்படும். தம்பதிகளிடம் புரிதல் அதிகரிக்கும். திருமணம், குழந்தை, வீடு வாகன யோகம் போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும். 21.1.2026 அன்று நள்ளிரவு 1.35 முதல் 23.1.2026 அன்று காலை 8.33 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உண்ண, உறங்க முடியாமல் உழைக்க நேரும். அலைச்சல் மிகுதியாகும். தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் கேட்கவும்.
சிம்மம்
கடனை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எதிரிகளை வெல்லக்கூடிய சாமர்த்தியம் அதிகரிக்கும். கடன் வாங்கி சொத்துக்கள் வாங்குவீர்கள். சிலர் வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் ஆபரில் மாற்றலாம். அரசு வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வாழ்க்கை துணையால் எதிர்பாராத அதிர்ஷ்ட பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
வீட்டில் மங்களகரமான சுப காரியங்கள் நடக்கும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், சலுகைகளும் உற்சாகத்தை அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போல் இருக்கும். அடிவயிறு தொடர்பான உடல் உபாதைகள் கை கால் மூட்டு வலி வரலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
23.1.2026 அன்று காலை 8.33 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. அல்லது ஆதாயம் குறையும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தினமும் பறவைகளுக்கு தானியங்களை இரையிட துன்பங்கள் விட்டு விலகும்.
கன்னி
எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகளின் முன்னேற்றம் தொடர்பான திட்டமிடுதலில் ஆர்வம் அதிகரிக்கும். சிந்தனையில் ஏற்பட்ட குழப்பம் விலகும். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். நினைத்ததை நிறைவேற்றுவதில் நிலவிய தடைகள் அகலும்.
உபரி வருமானம் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். சொத்து சேர்க்கை கூடும். சொத்துக்களின் மதிப்பு ஏறும். சகோதரர்களுடன் இணைந்து முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த காலம். அரசு வகையில் மேற்கொண்ட முயற்சிகள் சாதகமாகும். அரச பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு.
பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். புத்திர பிரார்த்தம் உண்டாகும். கதை, கட்டுரை, கவிதை எழுதுவதில் தகவல் தொடர்பு சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகமாகும். சிலர் கடன் பெற்று வசதி, வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வார்கள். தாய், தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் விலகும். இஷ்ட தெய்வத்தை மனதார வழிபடவும்.
துலாம்
தடை தாமதங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுணங்கி கிடந்த பணிகள் விறுவிறுப்படையும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். வராக்கடன்கள் வசூலாகும். அடமான நகைகள் மீண்டு வரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட நிரந்தர வருமானத்திற்கான வழி பிறக்கும்.
தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலைப் பளு குறையும். பத்திரிக்கை எழுத்து துறை,ஜோதிடம், ஆடிட்டிங் கமிஷன் வணிகம், கூட்டுத் தொழில், வங்கி போன்றவற்றில் பணிபுரிபவர்களின் வாழ்வாதாரம் உயரும். பிள்ளைகளின் திருமணம், புத்திரபாக்கியம், உயர் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து விதமான சுபபலன்களும் கைகூடும்.
பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு மீண்டும் சொந்த ஊர் செல்லும் எண்ணம் உதயமாகும். அறுவை சிகச்சை செய்ய வேண்டிய நிலை மாறி சாதாரண வைத்தியத்தில் குணமாகும். தை வெள்ளிக்கிழமை சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கவும்.
விருச்சிகம்
எண்ணத்தில் தெளிவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் உப ஜெய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் உச்சம் பெறுகிறார். வீடு மாற்றம் வேலை மாற்றம் வரலாம். மாமனாரால் மைத்துனரால் ஏற்பட்ட மனச் சங்கடம் தீரும். வேற்று மதத்தினர், இனத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் இலக்கை அடைய முடியும்.
பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி மீண்டும் தொடரும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். மறுமண முயற்சி நிறைவேறும். மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும்.
குடும்பத் தேவையை நிறை வேற்றுவீர்கள். நிம்மதியாக உறங்கி, சந்தோஷமாக இருப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இருந்த சங்கடங்கள் குறையத் துவங்கும். தை மாத செவ்வாய்க்கிழமை சுமங்கலி பெண்களிடம் நல்லாசி பெறவும்.
தனுசு
பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். ராசிக்கு 2-ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. இரண்டாம் இடத்தில் அதிக கிரகச் சேர்க்கை உள்ளதால் பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் வந்து சேரும். பொருள் கடனும், பிறவிக் கடனும் தீரும். ஆன்ம பலம் பெருகும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட சங்கடங்கள், விரயங்கள் சீராகும்.
புதிய நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். புதிய நட்புகளால் சந்தோஷம் உண்டாகும். புதிய நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சுப விரயங்கள் அதிகரிக்கும். குடும்பத்தாரின் அன்பும் அனுசரணையும் கிடைக்கும். சிலருக்கு வெளியூருக்கு வேலை மாறுதல் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றி விடுவீர்கள்.
பெண்களுக்கு வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு. முன்னோர்களின் சொத்துகளை வம்சாவளியாக பயன்படுத்துவதில் நிலவிய சர்ச்சைகள் சீராகும். கை மறதியாக வைத்த நகை கிடைக்கும். புதிய எதிர்பாலின நண்பர்கள் கிடைப்பார்கள். தை மாதம் பெண் தெய்வங்களை வழிபடுவது சிறப்பாகும்.
மகரம்
கவனமாக செயல்பட வேண்டிய காலம். ராசியில் அஷ்டமாதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் குறுக்கீடுகள் அதிகரிக்கும். வேலையில் திடீரென பொறுப்புகள் மாற்றப்பட்டு மன உளைச்சல் அதிகமாகும். வேலைப்பளு மிகுதியாக இருக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு பிறருக்கு கிடைக்கலாம்.
தொழிலில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் கணிசமான பணப் புழக்கம் கைகளில் புரளும். சொத்து வாங்கும் முயற்சி சித்திக்கும். சிலருக்கு வீடு, வாகனத்தை பராமரிக்கும் செலவு அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணத்தில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். தேவைக்கேற்ற வருமானம் இருந்தாலும் வரவிற்கு மீறிய செலவும் இருக்கும். சிலருக்கு நிர்பந்த ஊர் மாற்றம், இடமாற்றம் செய்ய நேரும்.
குறுக்கு வழியில் வருமானம் ஈட்டுவது, தவறான நட்பு போன்றவற்றைத் தவிர்க்கவும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்கு பிரயோகத்தை தவிர்க்க வேண்டும். அலைச்சல் மிகுதியாக இருந்தாலும் நிம்மதியான தூக்கம் இருக்கும். புதிய முயற்சிகளையும் கொடுக்கல், வாங்கல்களையும் தவிர்க்கவும். ஏற்கனவே தொடங்கிய செயல்களைத் தொடர்ந்து செய்யலாம். ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு.
கும்பம்
விரயங்களை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசிக்கு 12-ம்மிடமான விரய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் கவனத்தை தொழிலில் மட்டும் செலுத்தினால் தேவையற்ற சங்கடங்களிலிருந்து தப்ப முடியும். புதியதாக சொந்த தொழில் செய்யும் முயற்சியை ஒத்தி வைக்கவும்.
வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும்.
சிலரின் கல்வி சார்ந்த விசயங்களில் ஏற்பட்ட தடை அகலும். பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளின் விசாரணை தாமதமாகும். வாழ்க்கைத் துணைக்கு தாய் வழி பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். சுபச் செலவிற்காக கடன் பெற நேரலாம். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் ஏற்பட்ட மன சங்கடம் தீரும்.
நிலம், தோட்டம், வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். திருமணம் நிச்சயமாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உடன் பிறந்தவர்களுடன் நல்லுறவு ஏற்படும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளி நாட்டில் சென்று பிழைக்கும் எண்ணம் தோன்றும். இடமாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் என நிம்மதியைத் தேடும் மாற்றங்கள் உண்டு. தை மாத பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபடவும்.
மீனம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் வாரம். மீன ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் 2,9ம் அதிபதி செவ்வாய் உச்சம் பெற்றுள்ளார். இது இழந்த அனைத்து வித இன்பங்களையும் மீட்டுத் தரக்கூடிய அமைப்பாகும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். தொட்ட காரியங்கள் துலங்கும். முறையான முன்னோர்கள் வழிபாட்டால் தடைபட்ட சுப காரியங்கள் கைகூடும்.
சிலருக்கு கவுரவப்பதவிகள் கிடைக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த தந்தை மீண்டும் குடும்பத்துடன் இணைவார். நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். தீராத கடனைத் தீர்க்கும் வழி தென்படும்.
எதிரி தொல்லைகள் குறையும். திருமண முயற்சிகள் கைகூடும். நிலுவையில் உள்ள தொகைகள் கைக்கு வந்து சேரும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். தேங்கி கிடந்த பொருட்கள் விற்பனையாகும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளிக்க முடியும். பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. ஞாயிற்றுகிழமை சிவ வழிபாடு செய்ய நன்மைகள் இரட்டிப்பாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406