வழிபாடு

பேச்சியம்மன்

அணைத் தண்ணீரை திறக்கும்முன் வழிபடப்படும் பேச்சியம்மன்

Published On 2025-09-17 09:05 IST   |   Update On 2025-09-17 09:05:00 IST
  • மலைவாழ் மக்கள் பேச்சியம்மனுக்கு பாறையில் பீடம் அமைத்துள்ளனர்.
  • இங்குள்ள கிணற்று தண்ணீரை அருந்தினால் கற்கண்டு சுவை போல் இனிக்கும்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணைக்கு அருகே பிரசித்திப் பெற்ற பேச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த பேச்சியம்மனுக்கு வழிபாடு நடத்திய பின்னர்தான், பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கிறார்கள்.

தல வரலாறு

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது, வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. அப்போது பூமியை சமநிலைப் படுத்த வேண்டி சிவபெருமான் அகத்திய முனிவரை பணிக்கிறார். அதன்படி அகத்திய முனிவரும், ரிஷிகளும் சேர்ந்து தென்திசை நோக்கி வந்தனர். அப்போது அகத்திய முனிவர் பேச்சிப்பாறையில் சுயம்புவாக தோன்றிய காளிதேவியைக் கண்டதாகவும், தேவி அகத்தியரிடம் பேசி மகிழ்ந்ததால் அகத்தியரே காளிதேவியை 'பேச்சியம்மன்' என்று திருநாமம் சொல்லி வணங்கியதாகவும் கோவில் வரலாறு கூறுகிறது.

மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் வந்தபோது தென்கோடியில் அமைந்துள்ள பேச்சிப்பாறை அடர்காட்டில் தங்கியுள்ளனர். அந்த சமயம், பீமனுக்கும் அர்ஜூனனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணபரமாத்மா தோன்றி, உங்களில் யார் பக்கம் நியாயம் உள்ளது? என்பதை அருகிலுள்ள தேவியிடம் சென்று கேட்குமாறு கூறினார். உடனே பீமனும், அர்ஜூனனும் அருகில் இருந்த பேச்சியம்மனிடம் சென்றனர். அப்போது, தேவியானவள் வானுக்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்து அருள்பாலிக்க, இருவரும் வந்த விஷயத்தை மறந்ததாக கூறப்படுகிறது.

 

கோவில் தோற்றம்

இப்பகுதி மலைவாழ் மக்கள் பேச்சியம்மனுக்கு பாறையில் பீடம் அமைத்துள்ளனர். ஆண்டுதோறும் தங்களின் இஷ்டதெய்வமான தேவிக்கு காட்டு விலங்குகளை பலிகொடுத்து வழிபட்டுள்ளனர். ஆனால் தற்போது சைவ பூஜையே நடைபெறுகிறது.

1897-ம் ஆண்டு திருவாங்கூர் மகாராஜா ஸ்ரீமூலம் திருநாள் ராமவர்மா மகாராஜா விவசாயத்துக்காக பேச்சிப் பாறையில் அணைகட்ட உத்தரவிடுகிறார். அதன்படி அணைகட்டும் வேலைகள் நடந்து, மறுநாள் வந்து பார்த்தால் கட்டப்பட்ட பகுதி இடிந்து போயிருக்கும். தினந் தோறும் இதே நிலைதான் ஏற்பட்டது. இதனால் மன்னரும் மக்களும் வேதனை அடைந்தனர். இந்நிலையில் மூட்டுக்காணி ஆதிவாசி கிராமத் தலைவனின் கனவில் தோன்றிய தேவி, ''தான் காலம்காலமாக இப்பாறையில் நிலைகொண்டிருக்கிறேன், தன்னுடையை பார்வையை மறைத்து அணை கட்டக்கூடாது'' என்று கூறியுள்ளார்.

இதை அவர் அணைகட்டும் தலைமைப் பொறியாளர் மின்சின் அலெக்சாண்டரிடம் கூறினார். உடனே அவர், அன்றிரவு கோவில் பீடமிருந்த பாறையில் சென்று தேவியை பிரார்த்திக்க, அவருக்கு காட்சி தந்தார் தேவி. அப்போது அவர் தேவியிடம் தனக்கு அணை கட்டிமுடிக்க உதவ வேண்டும் என்றும், அப்போதுதான் தென் திருவாங்கூர் மக்களின் தண்ணீர் பஞ்சம் அகலும் என்றும் வேண்டினார். இதனால் மனம் இரங்கிய தேவி, தன்னுடைய திவ்ய ரூபத்தைக்காட்டி, ''நான்தான் பேச்சியம்மன். தனக்கு இப்பாறையில் உள்ள இடத்துக்கு பதில், அணையின் முன்பகுதியில் (தற்போது கோவில் இருக்கும் இடம்) இருப்பிடம் அமைத்து, தன்னை பூஜித்தால் எந்தவித தடங்கலும் வராது'' என்று கூறி மறைந்தார்.

அதன்பின் பொறியாளர் மின்சின் அலெக்சாண்டர் தற்போது கோவிலிருக்கும் இடத்தில் பீடம் போன்ற கோவில் அமைத்தார். ஏழு தினங்கள் பூஜையும், ரத்த பலியும் கொடுத்த பின் அணை கட்டும் பணி எந்தவித இடையூறுமின்றி துரிதமாக நடந்தது. 1906-ம் ஆண்டு அணை கட்டும் வேலை முடிந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அன்று முதல் இன்று வரை பேச்சிப்பாறை அணை தண்ணீரை ஜூன் மாதம் விவசாயத்துக்காக திறக்கும்போது பேச்சியம்மன் கோவிலுக்கு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் வழிபாடு, பூஜைகள் நடத்துவார்கள். கோவிலில் வழிபாடு நடத்தியபின்னர், அணைக்கட்டில் தண்ணீர் திறக்கும் கதவுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதன்பின்னரே அணை திறக்கப்படும்.

அணைக்கட்டில் இருந்து சற்று முன்புறம் காணப்படும் கோவில், தற்கால கோவில் வடிவமைப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளே தேவி, பீடத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறாள். கோவிலின் இடதுபுறம் விநாயகருக்கு சிறிய சன்னிதி உள்ளது. சற்றுதொலைவில் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு 1965-ம் ஆண்டு மாசி மாதம் பரணி நட்சத்திரம் நாளில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனால் ஆண்டு தோறும் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் திருவிழா நடைபெறுகிறது. இங்குள்ள கிணற்று தண்ணீரை அருந்தினால் கற்கண்டு சுவை போல் இனிக்கும்.

கோவில், காலை 5 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம்

நாகர்கோவிலில் இருந்து 67 கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது.

Tags:    

Similar News