வழிபாடு

நிலையான செல்வத்தை அருளும் நாணய வழிபாடு..!

Published On 2025-10-17 14:15 IST   |   Update On 2025-10-17 14:15:00 IST
  • லட்சுமி மற்றும் குபேர பகவானை வழிபடும்போது நாணய வழிபாடு மிகவும் முக்கியமானது.
  • குபேர பகவானின் 108 போற்றிகளை மனதார உச்சரிக்க வேண்டும்.

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்தால் செல்வத்தையும், ஐஸ்வரியத்தையும் அள்ளித்தருவார் என்பது நம்பிக்கை. குறிப்பாக லட்சுமி மற்றும் குபேர பகவானை வழிபடும்போது இந்த நாணய வழிபாடு மிகவும் முக்கியமானது. இந்த வழிபாட்டில், நாணயங்களை வைத்து அர்ச்சனை செய்வது, குபேரர் மற்றும் லட்சுமி தேவியின் அருள் பெறவும், பொருளாதார கஷ்டங்களை நீக்கி, நிலையான செல்வத்தை பெற உதவும் என்பது நம்பிக்கை.

குபேர பகவானுக்கு உகந்த எண் 5. அதனால் ஒரு தட்டில் உங்கள்  கை நிறையும் அளவிற்கு 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.

இப்படி செய்யும் போது குபேர பகவானின் 108 போற்றிகளை மனதார உச்சரிக்க வேண்டும். போற்றி சொல்லியபடியே தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அந்த ஒலியோடு சேர்ந்து குபேர மந்திரங்களை சொல்ல வேண்டும்.

நாணய பூஜை செய்து முடித்தவுடன் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி நாணய வழிபாடு பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை.

இந்த வழிபாட்டை தீப ஒளித் திருநாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரையும் அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் செய்ய வேண்டும்.

Tags:    

Similar News