வழிபாடு

ஐராவதேஸ்வரர் - அதிதுல்ய குஜாம்பிகை

null

மன அமைதி தரும் பெருந்தோட்டம் ஐராவதேஸ்வரர்

Published On 2025-12-26 08:43 IST   |   Update On 2025-12-26 09:12:00 IST
  • ஒரு சமயம் மகாலட்சுமி தேவி, துர்வாச முனிவரிடம் மலர் மாலை ஒன்றை அளித்தார்.
  • கருவறையில் இறைவன் ஐராவதேஸ்வரர் லிங்க திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் பெருந்தோட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது ஐராவதேஸ்வரர் திருக்கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில், சோழர் காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவன் ஐராவதேஸ்வரர் என்றும், இறைவி அதிதுல்ய குஜாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

ஒரு சமயம் மகாலட்சுமி தேவி, துர்வாச முனிவரிடம் மலர் மாலை ஒன்றை அளித்தார். அதனை துர்வாச முனிவர் இந்திரனுக்கு பரிசளித்தார். இந்திரன், அந்த மாலையை தான் அமர்ந்திருந்த ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீது வைத்தான். ஆனால் அந்த யானையோ மாலையை தரையில் வீசி காலால் மிதித்தது. இதைக் கண்ட துர்வாச முனிவருக்கு கோபம் தலைக்கேறியது. ஐராவதத்தைப் பார்த்து, ''நான் கொடுத்த மாலையை அவமதித்த உனக்கு தேவலோகத்தில் இருக்க தகுதியில்லை. பூலோகத்தில் காட்டு யானையாக சுற்றி திரிவாய்'' என சாபமிட்டார்.

அதன்படி பூலோகம் வந்த யானை ஒவ்வொரு சிவாலயமாக சுற்றித் திரிந்தது. ஒரு முறை இத்தலத்திற்கு வந்தபோது, இங்கிருந்த விநாயகர் 'இறைவனை வழிபடக்கூடாது' என வாதிட்டார். அந்த விநாயகர் ஆலயத்தின் வடகிழக்கு திசையில் 'வாதாடும் கணபதி' என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பின்பு சமாதானம் அடைந்த விநாயகர் யானையை வழிபட அனுமதித்தார். அதன்பிறகே யானைக்கு சாப விமோசனம் கிடைத்தது. ஐராவத யானை வழிபட்டதால் இத்தல இறைவன், 'ஐராவதேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

இந்த ஆலயம் கிழக்கு நோக்கி காணப்படுகிறது. கோவில் முகப்பை தாண்டியதும் பலிபீடம், நந்தி காட்சி அளிக்கின்றன. அடுத்ததாக உள்ள மகாமண்டபத்தின் தென்திசையில் நால்வர் திருமேனி உள்ளது. வலதுபுறத்தில் அன்னை அதிதுல்ய குஜாம்பிகை நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். மேல் இருகரங்களில் கும்பத்தையும், தட்டையும் தாங்கி, கீழ் இருகரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி காட்சி அளிக்கிறார். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னைக்கு விதவிதமாக அலங்காரம் செய்வர்.

மகாமண்டபத்தை அடுத்து அர்த்தமண்டபம் காணப்படுகிறது. கருவறையில் இறைவன் ஐராவதேஸ்வரர் லிங்க திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிள்ளையார், பிரம்மா, துர்க்கா ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் நான்கு வாரத்துக்கு துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள்.

திருச்சுற்றில் தல விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் காட்சி அளிக்கின்றன. இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் கோபக் குணம் குறைந்து, மனதில் அமைதியும், நிதானமும் நிலவும் என்கிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு புதன் தலத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

Tags:    

Similar News