வழிபாடு

ஆகாச மாரியம்மன்

ஆகாச மார்க்கமாக வந்தருளும் ஆகாச மாரியம்மன்

Published On 2025-10-09 10:21 IST   |   Update On 2025-10-09 10:21:00 IST
  • இளம்பெண் வடிவில் வந்த அம்மன் சிரித்து மறைந்தாள்.
  • கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், சக வியாபாரிகளிடமும் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் பிரசித்தி பெற்ற ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆகாச மாரியம்மனுக்கு திருவுருவத் திருமேனி கிடையாது. ஜோதி வடிவில் அம்மனை பக்தர்கள் வழிபடுகின்றனர். சமயபுரம் மாரியம்மனே இந்த கோவிலில் அருவமாக இருந்து ஆட்சி செய்கிறார் என்கிறார்கள்.

தல வரலாறு

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, திருநறையூரில் கவரைச் செட்டியார்கள் என்ற வணிக சமூகத்தார் பாரம்பரியமாக கண்ணாடி வளையல் வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் குதிரையில் ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்யும் பழக்கத்தை உடையவர்கள். ஒருமுறை, சமயபுரம் கோவிலுக்கு பங்குனி பெருவிழாவின்போது வணிகம் செய்ய வந்தனர். இரவில் அங்கேயே தங்கி, உறங்கினர்.

அவர்களில் பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றியசமயபுரம் மாரியம்மன், இளம்பெண் வடிவம் எடுத்து கைகளுக்கு கண்ணாடி வளையல்களை அணிவிக்க கூறினார். அந்த பெரியவரும் அப்பெண்ணின் பொன்னிற கைகளில் வளையல் அணிவிக்க முயன்றார். ஆனால் அணியும்போது வளையல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக உடைந்து கீழே விழுந்தது. இதனால் வியாபாரி குழப்பமடைந்து, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்.

தெய்வீக அம்சமாக தோற்றமளித்த அப்பெண்ணின் கைகளை வளையல்களால் அலங்கரிக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டவர், ''தாயே, வளையல்கள் அனைத்தும் உடைந்து விட்டன. உன் அழகிய கைகளை வளையல்களால் அலங்கரிக்க என்னிடம் இப்போது வளையல்கள் இல்லை. என் ஊருக்கு வந்தால் உன் இரு கைகளுக்கும் விதவிதமான வளையல்கள் அணிவித்து அலங்கரிப்பேன். உனக்கு முல்லை, மல்லிகை மலர்களைச் சூட்டுவேன்'' என்று அன்புடன் வேண்டினார்.

இதைக்கேட்டு இளம்பெண் வடிவில் வந்த அம்மன் சிரித்து மறைந்தாள். உடனே, வியாபாரி கனவு கலைந்து எழுந்தார். அவரின் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வளையல்கள் அனைத்தும் உடைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். தவிர, அவருடன் வந்திருந்த மற்ற வியாபாரிகளுக்கு அம்மை போட்டிருப்பதையும் கண்டார். இதனால் அந்த பெரியவர் மிகவும் மனம் வருந்தினார். இது சமயபுரத்தாளின் சோதனை என்பதை அறிந்த அவர் கோவிலை நோக்கிக் கைகூப்பி வணங்கி நின்றார்.

விடிந்ததும் கோவில் அர்ச்சகர் அந்த வியாபாரியிடம், ''ஐயா, வெளியூரிலிருந்து வந்திருக்கும் வளையல் வியாபாரி தாங்கள் தானே? உடைந்த வளையல்களுக்கு பதிலாக இந்த பொற்காசுகளை வைத்துக் கொள்ளுங்கள். சமயபுரத்தாள் இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்'' என்றார். மேலும், அம்மை நோய் தாக்கியவர்களுக்கு மாரியம்மனின் அருட்பிரசாதமான திருநீற்றை வழங்கினார். அவர்கள் அதை நெற்றி மற்றும் உடல் முழுவதும் பூசியவுடன் அம்மை நோய் குணமடைந்து எழுந்தார்கள்.

கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், சக வியாபாரிகளிடமும் கூறினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த வியாபாரிகள், தங்கள் அனைவருக்கும் அன்னை காட்சி தரவேண்டும் என்று வேண்டினார்கள். அதை ஏற்று அன்னை ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் காட்சி தந்து அருளாசி வழங்கினாள். அன்னையை தரிசித்த வியாபாரிகள், ''தாயே, ஆகாச மாரி.. ஆகாச மாரி..'' என போற்றி புகழ்ந்து வணங்கினர். பின்பு, ''எங்கள் ஊருக்கு வந்து அருள வேண்டும்'' என்று ஆகாச மாரியம்மனை மனமுருக வேண்டினார்கள்.

இதைக் கேட்ட சமயபுரம் மாரியம்மன் அவர்களிடம், ''உங்கள் ஊர் எது?'' என்று கேட்க, ''நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் திருநறையூர்'' என்றனர். அவர்களது பக்தியை மெச்சிய அன்னை, ''முல்லைக்கும், மல்லிக்கும், கை வளையல்களுக்கும் ஆண்டுதோறும் வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை சமயபுரத்திலிருந்து ஆகாச மார்க்கமாக திருநறையூருக்கு வந்து, பத்து நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சமயபுரம் திரும்பி விடுவேன்'' என்று அருளினாள். சமயபுரத்தாள் சொன்னதுபோல் ஒவ்வொரு வருடமும் திருநறையூர் தலம் வந்து தங்கி அலங்காரத்துடன் காட்சி தந்து அருள்புரிகிறாள் என்பது ஐதீகம்.

வெள்ளிக்குடத்துடன் ஆகாச மாரியம்மன்

 

வைகாசி திருவிழா

இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் அமாவாசையை அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்கி, பதிமூன்று நாட்களுக்கு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது சமயபுரம் மாரியம்மன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து, திருவிழாவுக்கு என்று செய்யப்படும் விக்ரகத்தில் சேர்ந்து தரிசனம் கொடுப்பதாக ஐதீகம். இந்த ஊர் மக்கள் அளிக்கும் கண்ணாடி வளையல்கள், மல்லிகை, முல்லை பூக்களை ஏற்றுக் கொள்வதற்காகவே சமயபுரத்தாள் ஆகாய மார்க்கமாக இந்த ஊருக்கு வந்து திருவிழாவில் கலந்து கொள்கின்றாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களும் செப்புக் குடத்தில் கலசம் வைக்கப்பட்டு விழா எடுக்கப்படுகின்றது. கலச நீரும், அம்மனுக்குச் சாத்தப்படும் எலுமிச்சை மாலையில் உள்ள எலுமிச்சம் பழமும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருவிழாவில் தர்ப்பை புல்லால் அம்மன் உருவாக்கப்படுகிறார். ஒவ்வொரு நாளும் லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன் போன்ற பல்வேறு வடிவங்களில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகிறாள். கடைசி நாளில் ராஜராஜேஸ்வரி வடிவத்தில் உச்சம் பெறுகிறாள்.

பதிமூன்றாம் நாள் அம்மன் நின்ற கோலத்தில் தேரில் சமயபுரத்திற்கு எழுந்தருள்வதுடன் விழா நிறைவு பெறுகிறது. அச்சமயம் அம்மன் கையில் வெள்ளிக்குடம் சுமந்தவாறு வீதியுலா நடைபெறும். இதன்மூலம், அம்மன் சமயபுரம் செல்கிறாள் என்பது நம்பிக்கை. இக்கோவிலில், வைகாசி மாதம் நடைபெறும் திருவிழாவை தவிர மற்ற நாட்களில் அம்மன் உருவமற்றவராக அதாவது சூட்சும ரூபத்தில் இருக்கிறார்.

கோவில் தோற்றம்

 

திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள அம்மனை வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், அம்மனுக்கு மல்லிகைப் பூ, வளையல்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். மேலும், காவடிகள், அங்கப்பிரதட்சணம், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகிறார்கள்.

அமைவிடம்

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவிலில் (திருநறையூர்) அமைந்துள்ளது, ஆகாச மாரியம்மன் கோவில்.

Tags:    

Similar News