ரீவைண்ட் 2024: கோலி, ரோகித் முதல் நிதிஷ், தேஜஸ்வி வரை.. இந்தாண்டு வைரலான புகைப்படங்கள்
- 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை ரோகித் தலைமையிலான இந்திய அணி வென்றது.
- மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.
இன்றோடு 2024 ஆம் ஆண்டு முடிவடையவுள்ளது. நாளை நாம் 2025 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறோம்.
இந்நிலையில், இந்தியாவில் இந்தாண்டு பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது. பல புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலானது. அவ்வகையில் இந்தாண்டு வைரலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த ரீவைண்ட் செய்தியில் நாம் பார்க்கவுள்ளோம்.
1. டி20 உலகக்கோப்பையை வென்றபின் ரோகித்தும் கோலியும் கட்டிப்பிடித்த புகைப்படம்
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை ரோகித் தலைமையிலான இந்திய அணி வென்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை கோலி வென்றார். 2007-க்கு பிறகு மீண்டும் டி20 உலகக்கோப்பையை வென்றது இந்திய அணியின் உணர்ச்சிமிகு தருணமாக இருந்தது.
அப்போது ரோகித்தும் கோலியும் கண்களில் அக்கண்ணீரோடு ஒருவரை ஒருவர் கட்டியணைத்து புகைப்படம் இணையத்தில் வைரலானது.
2. மக்களவை தேர்தலுக்கு பின்பு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் பயணம் செய்த புகைப்படம்
2024 மக்களவை தேர்தலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தார். பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தார். மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.
மக்களவை தேர்தலுக்கு பிறகு அதிக இடங்களை வென்ற நிதிஷ்குமாரும் சந்திரபாபு நாயுடுவும் பாஜக கூட்டணியின் கிங் மேக்கர்களாக உருவெடுத்தனர்.
அந்த சமயத்தில் நிதிஷ்குமாரும் தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் பயணம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
3. ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்பு துக்கத்தில் மூழ்கிய வினேஷ் போகத்தின் புகைப்படம்
ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவிலான மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்று பதக்கம் வெல்வதை உறுதி செய்திருந்தார்.
அப்போது வினேஷ் போகத் 50 கிலோ எடையை விட சில கிராம்கள் எடை அதிகமாக உள்ளதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த செய்தியறிந்து சோகத்தில் மூழ்கிய வினேஷ் போகத்தின் புகைப்படம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
4. திருமணத்தின்போது லூடோ விளையாடிய மாப்பிள்ளையின் புகைப்படம்
திருமணத்தன்று மணமகனும் மணமகளும் பரபரப்பாக இருப்பார்கள். ஆனால் திருமணம் நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு வரை ஒரு மாப்பிள்ளை தனது நண்பர்களுடன் மனமேடையிலேயே செல்போனில் லூடோ விளையாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.
5. தாங்கள் இணைந்து நடித்த கரண் அர்ஜுன் படத்தை பார்த்து ரசித்த ஷாருக்கான் சல்மான் கானின் வீடியோ
ஷாருக்கானும் சல்மான் கானும் இணைந்து நடித்த கரண் அர்ஜுன் திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை சல்மான் கானும் ஷாருக் கானும் இணைந்து டிவியில் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
6. டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வாகன பேரணியை மரத்தின் மேலே அமர்ந்து ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்த நிகழ்வு
2007-க்கு பிறகு மீண்டும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. இதனையடுத்து வெற்றி பெற்ற இந்திய அணியினர் மும்பையில் வாகன பேரணி சென்றனர். அப்போது மரத்தின் மேலே ஏறி அமர்ந்த ரசிகர் ஒருவர் இந்திய அணி வீரர்களை புகைப்படம் எடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.