இளம்பெண்ணை முந்திரி காட்டுக்குள் அழைத்து சென்று நகை-செல்போனை பறித்து சென்ற ஆசாமி: கள்ளக்காதலால் விளைந்த விபரீதம்
- இளம் பெண்ணின் இந்த பரபரப்பு புகாரால் திகைத்துப் போன போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
- பெண்ணை பைக்கில் ஏற்றிக்கொண்டு ஆரோவில் வழியாக பொம்மையார்பாளையம் அழைத்துச் சென்றுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை திருக்கனூர் பகுதியை சேர்ந்த திருமணமான 28 வயது இளம் பெண் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை அந்த பெண் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ராபின்சன்னிடம் பதட்டத்துடன் புகார் அளித்தார்.
அதில், கடந்த ஒரு வார காலமாக செல்போன் மூலம் பழக்கமான ஒரு நபர் தன்னை பொம்மையார் பாளையம் பகுதியில் உள்ள முந்திரி காட்டுக்குள் அழைத்துச் சென்று தன்னிடமிருந்த 3 பவுன் தாலிச் செயின், பைக் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு சென்று விட்டதாக புகார் அளித்தார்.
இளம் பெண்ணின் இந்த பரபரப்பு புகாரால் திகைத்துப் போன போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
புகார் அளித்த பெண்ணிடம் வில்லியனூர் அருகே சுல்தான்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் எனகூறி வாலிபர் ஒரு நாள் அந்த பெண்ணுக்கு செல்போனில் பேசியுள்ளார். அப்போது ஸ்ரீதர் சாரி ராங் நம்பர் என போனை துண்டித்துள்ளார்.
பின்னர் அவ்வப்போது ஸ்ரீதர், அந்த பெண்ணின் போன் நம்பருக்கு போன் செய்து பேசி வந்துள்ளார்.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சம்பவத்தன்று அந்த பெண் தனது கணவரிடம் ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு புதுவைக்கு பைக்கில் வந்துள்ளார்.
அப்போது, தான் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு வந்துள்ளதாக ஸ்ரீதரிடம் அந்த பெண் போனில் பேசியுள்ளார். சிறிது நேரத்தில் ஜிப்மர் மருத்துவமனை வாசலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஸ்ரீதர் தான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்தி விட்டு அந்த பெண்ணை அவர் ஓட்டிவந்த பைக்கில் ஏற்றிக்கொண்டு ஆரோவில் வழியாக பொம்மையார்பாளையம் அழைத்துச் சென்றுள்ளார்.
முதல் முதலாக நேரில் சந்தித்த இருவரும் தனிமையில் பேச அங்குள்ள முந்திரி காட்டுக்குள் சென்றுள்ளனர்.
அப்போது ஸ்ரீதர் அந்த பெண் அணிந்திருந்த தாலி செயின் அழகாக இருப்பதாக கூறி அதனை வாங்கி உள்ளார்.
பின்னர் அந்த பெண் வைத்திருந்த செல்போனையும் எடுத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் ஸ்ரீதர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தன்னை நம்ப வைத்து ஏமாற்றியதை உணர்ந்த அந்த பெண் அதன் பிறகு தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி நகை, பைக், செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்ற ஸ்ரீதரை தேடி வருகின்றனர்.