புதுச்சேரி

மாணவர்களை ஊக்கப்படுத்தவே பல்கலை. விழாவில் எல்.முருகன் பங்கேற்றார்- கவர்னர் தமிழிசை விளக்கம்

Published On 2022-07-15 14:45 IST   |   Update On 2022-07-15 14:45:00 IST
  • மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரி எல்.முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகி உள்ளது.
  • என்.ஐ.டி. கல்லூரியில் 25 சதவீதம் புதுவை மக்களுக்கு கிடைக்க உறுதி செய்துள்ளேன்.

புதுச்சேரி:

லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தும் பணியை கவர்னர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர், கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்று முதல் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று இந்தியா முழுவதும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே அரசு மூலம் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டாலும், பிரதமர் அறிவிப்பு மக்களை ஊக்கப்படுத்தி ஊசி போட வரவழைக்கும்.

பிரதமர் ஊக்கத்தினால் தான் கொரோனாவை எதிர்கொண்டோம். மக்கள் பாதிக்கக்கூடாது என்று ஊக்கப்படுத்தி வருகிறார். கொரோனா பாதிப்பு அதிகமாவதால் பூஸ்டர் தடுப்பூசி நம்மை பாதுகாக்கும்.

புதுவை முழுக்க 75 பள்ளிகளை பார்க்க திட்டமிட்டு ஒவ்வொரு பள்ளியாக செல்கிறேன். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ திறமையாளர்கள் உள்ளனர். அரசு பள்ளியை மேம்படுத்த முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்துள்ளேன். பள்ளிக்கு நேரடியாக செல்வதால் பல விஷயங்கள் தெரிகின்றன.

புதிதாக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தைத்து சீருடை தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் வினியோகம் செய்ய ஆரம்பித்துள்ளோம். மாணவர் பஸ் நிதித்துறையில் ஆலோசனை நடந்து வருகிறது.

அரசு பள்ளியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடுநிலை, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் அரசு பள்ளியை நோக்கி வர ஆரம்பித்துள்ளது இது மகிழ்ச்சியான விஷயம். அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, தனியார் பள்ளிகளை விட அதிகமாக நல்ல நிலைமைக்கு வர பணிகள் செய்யப்படும்.

தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.

கவர்னர்கள் எல்லோரும் வேந்தர்களாக, அந்தந்த கல்வி நிலையங்களை மேம்படுத்த பணியாற்றுகிறார்கள். அரசும், கவர்னரும் கலந்து ஆலோசிக்க வேண்டும். வேந்தர்களாக இருப்பதற்கே கவர்னருக்கு உரிமையில்லை என்ற வழிவகை செய்யக்கூடாது.

கல்வியை மேம்படுத்ததான் கவர்னர்கள் முயற்சி செய்கிறார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரி எல்.முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகி உள்ளது. இன்னொரு மாநில கவர்னராக இருந்தாலும், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் கருத்து கூறுகிறேன்.

பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து உழைத்து மந்திரியான அவரை அழைத்தது மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். அதை அரசியலாக்க எடுத்துக்கொள்ளாமல், மத்திய-மாநில அரசை சார்ந்தோர் கவர்னருடன் இணைந்து பட்டமளிப்பு விழாக்களை குழந்தைகளுக்கு வழிகாட்டும் விழாக்களாக கொண்டு செல்லவேண்டும். இதில் அரசியல் ஏதும் இல்லை. அந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் உரிமை இருக்கிறது.

ரெட்டியார்பாளையம் சாலை விபத்தில் குழந்தை இறந்தது வருத்தமளிக்கிறது. மிகுந்த மனவேதனை அடைந்தேன். வாகன நெரிசல் சரிசெய்யப்படும். குழந்தைகளை அழைத்து செல்லும் போது எச்சரிக்கை தேவை.

சாலையை விரிவுப்படுத்துவதும், சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற மக்களும் உதவ வேண்டும். புறவழிச்சாலை பணிகள் தொடர்பாக விசாரிக்கிறேன். தவறுகள் சரி செய்யப்படும். உயிரிழப்புகளை அனுமதிக்க முடியாது. அரசு மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்.

என்.ஐ.டி. கல்லூரியில் 25 சதவீதம் புதுவை மக்களுக்கு கிடைக்க உறுதி செய்துள்ளேன். புதுவை மத்திய பல்கலைக்கழகத்திலும் புதுவை மாணவர் ஒதுக்கீடு தொடர்பாக துணைவேந்தரிடம் விசாரிக்கிறேன். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு தமிழகத்தில் தருவதைப்போல் புதுவையில் தருவது தொடர்பான கோப்பு நிலுவையில் இருப்பது பற்றி விசாரிக்கிறேன்

இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

Tags:    

Similar News