கணவருடன் தூங்கிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
- மர்மநபர் ஒருவர், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
- பெண்ணின் சார்பில் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அடுத்த நெட்டப்பாக்கம் அருகே உள்ள கரியமாணிக்கம்பேட் பகுதியை சேர்ந்தவர் 33 வயது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்.
இவர் இரவு தனது கணவருடன் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர், திடீரென அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பெண் திடுக்கிட்டு எழுந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் அருகில் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது கணவரை எழுப்பினார். அதற்குள் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் சார்பில், நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பிருதிவிராஜ் (வயது 31) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை காண்பித்து அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்தது அவர் தானா? என விசாரித்தனர். ஆனால் அந்த பெண்ணால் வாய் பேச முடியாது என்பதால் அவர்தானா? என்பதை உறுதிசெய்ய முடியவில்லை.
இதையடுத்து அந்த பெண்ணையும், பிருதிவிராஜையும் புதுச்சேரி நலத்துறை சார்பில் செயல்படும் வாய் பேச முடியாதவர்களுக்கான பாடசாலைக்கு அழைத்து வந்தனர். அங்குள்ள ஆசிரியர்களை கொண்டு அந்த பெண்ணிடம் செயல் விளக்கம் பெறப்பட்டது.
அதை வைத்து பார்க்கும் போது, அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது பிருதிவிராஜ் தான் என்பது உறுதியானது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் போலீசார் அடைத்தனர்.