புதுச்சேரி

எந்த கம்பெனி செக்யூரிட்டி? என கேட்டு போலீசாரின் தொப்பியை தட்டி விட்டு மது போதையில் அலப்பறை செய்த வாலிபர்

Published On 2023-08-13 11:33 IST   |   Update On 2023-08-13 13:56:00 IST
  • கடுப்பான போலீசார் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
  • மணிகண்டன் மீது ஆயுதங்கள் வைத்து ரகளையில் ஈடுபட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி:

திண்டிவனம் ஏரிக்கரையோரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தனது 6 நண்பர்களுடன் புதுச்சேரி எல்லை பகுதியான சேதராப்பட்டில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்தியுள்ளனர்.

அப்போது உச்சகட்ட மது போதையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மணிகண்டன் தன்னுடன் வந்த நண்பர்களை விரட்டி, விரட்டி சரமாரியாக தாக்கினார். இதனால் அவருடன் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். ஒருவர் மணிகண்டனிடம் வசமாக சிக்கிக்கொண்டார். அவரை மணிகண்டன் பீர் பாட்டிலால் தலையில் தாக்கினார்.

அடி வாங்கிய நண்பர் அவரை விட்டு செல்லாமல் வாடா பிரச்னை ஆகப்போகுது எனக்கூறி அழைத்து செல்கிறார். பின்னர் மணிகண்டன் தன் சட்டையை கழற்றி நண்பரின் தலையில் அமுக்கி அழைத்து செல்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கே மதுபானம் அருந்தி கொண்டிருந்தவர்களை பார்த்து சண்டைக்கு வாடா.. நீ வேண்ணுனா.. வந்து பார்ரா என அவ்வழியே செல்பவர்களை வடிவேலு பாணியில் அழைத்தவாறு ஆபாச வார்த்தைகளால் அர்சித்தவாறு சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சேதராப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மது போதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த மணிகண்டனை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர்.

நீங்கள் காக்கி சட்டை அணிந்திருக்கிறீர்கள், எந்த கம்பெனி செக்யூரிட்டி? எனக்கூறி தொப்பியை தட்டு விட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் நான் யாருனு தெரியுமா? என போலீசாரை தள்ளிவிட்டுள்ளார். இதில் கடுப்பான போலீசார் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது.

மேலும் அவரிடம் அடி வாங்கி ஓட்டம் பிடித்த நண்பர்கள் யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. போலீஸ் நிலையத்தில் வைத்து, மணிகண்டனிடம், வந்த இடத்தில் ஒழுங்கா குடி, இல்லாவிட்டால் தர்ம அடிதான் என அறிவுரை வழங்கினர். தொடர்ந்து மணிகண்டன் மீது ஆயுதங்கள் வைத்து ரகளையில் ஈடுபட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News