புதுச்சேரி

புதுவையில் நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை

Published On 2023-05-07 12:37 IST   |   Update On 2023-05-07 12:37:00 IST
  • நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் தேர்வுக்கு பயந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது புதுவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

தேசிய தேர்வு முகாம் மூலம் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு இன்று மதியம் நடக்கிறது.

தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

புதுவையில் காலாப்பட்டு ஸ்டெடி பள்ளி, வில்லியனூர் ஆச்சார்யா, தேங்காய்திட்டு ஆச்சார்யா. முத்தியால்பேட் வாசவி, ஊசுடு பாரத் வித்யாஷ்ரம், குளூனி சி.பி.எஸ்.இ. விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பொறையூர் ஆதித்யா வித்யாஷ்ரம் ஆகிய 8 மையங்களில் நீட் தேர்வுக்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

புதுவையில் 5,758 மாணவ-மாணவிகள் எழுத தயாராகி கொண்டிருந்தனர். தேர்வு மையத்துக்கு மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

மதியம் 2 மணிக்கு தேர்வு எழுத மாணவர்கள் தயராகினர்.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு பயந்து புதுவையில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுவை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளம். இவர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிசியோ தெரபிஸ்டாக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாட்டால் கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

துரைராஜ் தற்போது பாலாஜி நகரில் தனியாக வசித்து வருகிறார். பரிமளம் மகன் ஹேமச்சந்திரன் (வயது18) மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்தார். ஹேமசந்திரன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இன்று மதியம் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் வீட்டில் உள்ள அறையில் ஹேமசந்திரன் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பரிமளம் கதறி அழுதார். அவரது கதறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

ஹேமச்சந்திரன் கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதினார். இதில் குறைந்த அளவிலான மதிப்பெண் பெற்றார். இந்தாண்டு அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று இன்று நீட் தேர்வுக்கு ஆர்வமாக படித்து வந்தார்.இன்று தேர்வு எழுதவும் தயாராகி வந்தார்.

இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் தேர்வுக்கு பயந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது புதுவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News