புதுச்சேரி

பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர் போட்டியா?

Published On 2023-08-25 14:33 IST   |   Update On 2023-08-25 14:33:00 IST
  • இந்தியா கூட்டணி சார்பில் 2 முறை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
  • தேர்தலை எதிர்கொள்ளவும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

புதுச்சேரி:

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது.

அகில இந்திய அளவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இந்தியா கூட்டணி சார்பில் 2 முறை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலை எதிர்கொள்ளவும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் பா.ஜனதா சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டமும் டெல்லியில் நடத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் துரிதப்படுத்தியுள்ளன.

புதுவையில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தற்போதைய எம்.பி. வைத்தி லிங்கமே மீண்டும் போட்டியிடுவார் என்ற தகவல் கட்சியினரிடையே எழுந்துள்ளது.

ஆளும்கட்சி கூட்டணி தரப்பில் பா.ஜனதா போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக ஓராண்டுக்கு முன்பே புதுவை தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் எல்.முருகன் நியமிக்கப்பட்டார். அவர் மாதம் 2 முறை புதுவை வந்து கட்சி தொண்டர்களை சந்தித்து தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளார்.

பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனைகளை பொதுமக்களிடம் சேர்க்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. தொகுதிதோறும் வாக்காளர் சந்திப்பு இயக்கமும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடலாம் என்ற தகவல் பரவியது. ஆனால் புதுவை பா.ஜனதாவினர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தனர். புதுவையை சேர்ந்தவர்கள் தான் போட்டியிட வேண்டும் என கட்சித்தலைமையிடம் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்களின் பெயரும் வேட்பாளராக பேசப்படுகிறது. இதனிடையே பா.ஜனதாவை ஆதரிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. பா.ஜனதா சார்பில் எம்.பி. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பா.ஜனதா கட்சி கூட்டங்களில் தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே பா.ஜனதாவில் செயல்பட்டு வந்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இவர் ஏற்கனவே வணிகர்கள் கூட்டமைப்பில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். தனக்கு வணிகர்கள், தான் சார்ந்த சமூகத்தின் ஆதரவு கிடைக்கும் என்றும் பா.ஜனதா தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது போல் பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜனதா நிர்வாகி ஆகியோரும் விரும்புவதாக கூறப்படுகிறது.

அவர்கள் தனித்தனியாக பா.ஜனதா தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News