புதுச்சேரி

பா.ஜனதா வேட்பாளர் அனைவரது வீடுகளிலும்சோதனை நடத்த வேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்

Published On 2024-04-08 10:02 GMT   |   Update On 2024-04-08 10:02 GMT
  • இந்திய ஜனநாயகத்தையும், மத சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் தேர்தல்.
  • புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசு மறுத்துவிட்டது.

புதுச்சேரி:

புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் இன்று புதுவை உழவர்கரை நகராட்சி ஜவகர் நகரில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாடுமுழுவதும் 18-வது பொதுத்தேர்தல் நடக்கிறது. சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இது 2 வேட்பாளர்களுக்கு இடையில் நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய ஜனநாயகத்தையும், மத சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் தேர்தல்.

இது வழக்கமான தேர்தலும் அல்ல. இது தேர்தல் யுத்தம். புதுவைக்கு பிரதமர் மோடி பிரசாரத்துக்கு வருவதாக தெரியவில்லை. ஒரு வேளை வந்தால், அவரிடம் கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறதிகள் என்ன ஆச்சு? என புதுவை மக்கள் கேள்வியாக கேட்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் சுப்புராயன் எம்.பி., புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பினார். அப்போது புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசு மறுத்துவிட்டது. தற்போது எப்படி மாநில அந்தஸ்து கெடுப்போம்? என எதை வைத்து சொல்கின்றனர்.

புதுவையில் 800 மதுக்கடைகள் இருந்தது. தற்போது கூடுதலாக 250 ரெஸ்டோபார்கள் திறந்துள்ளனர். இளைஞர்களை சீரழிக்கவே ரெஸ்டோபார்கள் திறக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கஞ்சா போதையால் சிறுமி பாலியல் வன்கொடு மையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுவையின் உள்துறை அமைச்சர் யார்? அவருக்கும், கஞ்சா வியாபாரிகளுக்கும் என்ன தொடர்பு என? அவர்தான் விளக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிசயமான மாநிலம் புதுவை. இங்குதான் ரேஷன்கடைகள் இல்லை.


ரங்கசாமி நல்ல மனிதர்தான். ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என புலம்புகிறார். சுயமரியாதை இல்லை என புலம்புகிறார். தன் கைகள் கட்டுப் பட்டுள்ளதாகவும், சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் கூறுகிறார்.

சுதந்திரமாக செயல்பட முடியாத முதலமைச்சரால் மாநில மக்களுக்கு என்ன செய்ய முடியும்?இந்தியா கூட்டணி தவிர்த்து தேர்தலில் 2 கூட்டணி நிற்கிறது.

மோடி தலைமையிலான நள்ளிரவு கூட்டணி ஒன்று, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கள்ளக் கூட்டணி மற்றொன்று. மோடியை பற்றி எந்த இடத்திலும் பழனிசாமி விமர்சிப்பதில்லை. பாராளுமன்ற தேர்தலில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தது அதிமுக. இந்தியா கூட்டணி கட்சிகள் தனித்தனியே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம்.

10 ஆண்டுக்கு மேல் ஒரே கூட்டணியாக செயல்பட்டு வருகிறோம். தேர்தல் அறிக்கை தனித்தனியே விட்டிருந்தாலும், அதில் எந்த முரண்பாடும் கிடையாது.

நெல்லையில் சமீபத்தில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.

ஆனால் நயினார் நாகேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் விதி மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கும் பிற மாநிலங்களில் இருந்து பணம் வந்துள்ளது. எனவே பாஜனதா வேட்பாளர்கள் வீடுகளில் தேர்தல் துறை சோதனையிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News