புதுச்சேரி

எதிராளியை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த சிறுவன் உள்பட 4 பேர் கைது

Published On 2023-07-10 11:06 IST   |   Update On 2023-07-10 11:06:00 IST
  • சந்தேகம் அடைந்த போலீசார், அந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர்.
  • பிடிப்பட்ட தேவநாதனுக்கும், கோனேரிக்குப்பத்தை சேர்ந்த உலகநாதனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

புதுச்சேரி:

புதுவை வில்லியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் கோனேரிகுப்பம் சுடுகாடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது போலீஸ் வாகனத்தை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த கும்பல் ஓட்டம் பிடித்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர். 3 பேர் தப்பியோடி விட்டனர்.

பிடிபட்டவர்களிடம் சோதனை செய்தபோது, நாட்டு வெடிகுண்டு, 2 கத்திகள், மிளகாய்பொடி ஆகியவை இருப்பதை கண்டுஅதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து 4 பேரையும் போலீஸ்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கூடப்பாக்கம் ரைஸ்மில் தெருவை சேர்ந்த தேவநாதன் (18), கமலேஷ் (19), அகரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் நள்ளிரவில் கொள்ளையடிக்க திட்டம் திட்டியதும் தெரியவந்தது.

மேலும் பிடிப்பட்ட தேவநாதனுக்கும், கோனேரிக்குப்பத்தை சேர்ந்த உலகநாதனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. எனவே உலகநாதனை கொலைசெய்ய சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு, மிளகாய் பொடி, 2 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய கூடப்பாக்கத்தை சேர்ந்த ராமு, தீனா, கவுதம் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

எதிராளியை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு, கத்திகளுடன் பதுங்கியிருந்த கும்பலை போலீசார் தக்க நேரத்தில் கைது செய்ததால் கொலை சம்பவம் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News