விபத்தில் சிக்கி காக்கிநாடா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புதுவை மாநிலம் ஏனாம் பிராந்திய பெண்களை முன்னாள் அமைச்சரும், புதுவை அரசின் டெல்லி பிரதிநிதியுமான மல்லாடி கிருஷ்ணா ராவ் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து ஆறுதல் கூறினார்.
பலியான 7 பெண்கள் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்-முதல் -அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
- கொல்லப் பள்ளி சீனிவாச அசோக் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.
- ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
ஏனாம் நீளாப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஆந்திர மாநிலம் தலரேவு பகுதியில் தனியார் இறால் பண்ணையில் பணிபுரிகின்றனர். இங்கு பணிபுரியும் 14 பெண்கள் மாலை 3 மணிக்கு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
தலரேவு பைபாஸ் சாலையில் வந்தபோது காக்கிநாடா நோக்கி சென்ற ஆம்னிபஸ் எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது.
இதில் மேட்டக்குரு கிராமத்தை சேர்ந்த செஸ்டி வெங்கடலட்சுமி(41), காரிபார்வதி(42), குர்சம்பேட்டாவை சேர்ந்த நிம்மகயாலா லட்சுமி(54), ஏனாம் வெங்கன்னா நகர் சிந்தப்பள்ளி ஜோதி(38), காலி பத்மா(38), பிரான்சிதிப்பா பகுதியை சேர்ந்த போக்கா ஆனந்தலட்சுமி(47), சத்தியவதி(35) ஆகிய 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
படுகாயமடைந்த 7 பேர் காக்கிநாடா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து ஆந்திரா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுவை அரசின் டெல்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டியை தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சிகிச்சை பெற்று வரும் பெண்களை கொல்லப் பள்ளி சீனிவாச அசோக் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.