என்ஜினீயர் முருகன் சூடானில் இருந்து புதுவை திரும்ப ஏற்பாடு செய்த முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
null
சூடானில் மீட்கப்பட்ட புதுவை என்ஜினீயர் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் சந்திப்பு
- பேரிடர் மேலாண்மைத்துறை மாவட்ட துணை கலெக்டர் சவுந்தரி ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்நாட்டு போரில் சிக்கியிருந்த என்னை இந்திய அரசு மீட்டது.
புதுச்சேரி:
சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரினால் அங்கு சிக்கி தவித்து வரும் இந்திய மக்களை பத்திரமாக மீட்டுவர மத்திய அரசு ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தை செயல்ப டுத்தியது.
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, சூடானில் சிக்கி தவித்து வரும் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்களையும் பத்திரமாக மீட்டு அனுப்பி வைக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனடிப்படையில் புதுவை வில்லியனூர் தில்லை நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் முருகன்(38) சூடானில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.
புதுவைக்கு பத்திரமாக திரும்பிய முருகன் இன்று புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அவர் காலில் விழுந்து வணங்கி, தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இந்த சந்திப்பின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், பேரிடர் மேலாண்மைத்துறை மாவட்ட துணை கலெக்டர் சவுந்தரி ஆகியோர் உடனிருந்தனர்.
மீட்கப்பட்டது குறித்து முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: -நான் 10 ஆண்டுக்கு மேலாக சூடானில் பணியாற்றி வருகிறேன். குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தேன். குழந்தைகளின் படிப்புக்காக நாடு திரும்பினேன்.
8 மாதம் முன்பு நான் மட்டும் சூடான் சென்றேன். அங்கு ரபக் என்ற நகரில் சர்க்கரை ஆலையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தேன்.
உள்நாட்டு போரில் சிக்கியிருந்த என்னை இந்திய அரசு மீட்டது. எனக்கு முன்பாக புதுவை ஏம்பலத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மீட்கப்பட்டுள்ளார். அவர் கொச்சின் வழியாக வந்தார். நான் டெல்லி வழியாக புதுவைக்கு வந்து சேர்ந்தேன் என்றார்.