புதுச்சேரி

10-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த மாணவி சத்தியாஸ்ரீயை அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தர்.

10-ம் வகுப்பு தேர்வில் புதுவை மாநில அளவில் சாதனை

Published On 2023-05-20 11:07 IST   |   Update On 2023-05-20 11:07:00 IST
  • கலெக்டராவதே லட்சியம் மாணவி சத்தியா ஸ்ரீ பேட்டி
  • பொதுத்தேர்வில் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளதை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

புதுச்சேரி:

திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மகள் மாணவி சத்தியாஸ்ரீ 10 வகுப்பு பொதுத் தேர்வில், 500-க்கு 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார். திருவாண்டார்கோவில் ஸ்ரீ நவதுர்கா மேல்நிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் படித்து வரும் இந்த மாணவி தற்போது புதுவை மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மாணவிக்கு கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் நன்றாக படித்து மேற்கல்வி தொடர வேண்டுமென அமைச்சர் நமச்சிவாயம் மாணவியை கேட்டுக்கொண்டார். இந்த வெற்றி குறித்து மாணவி சத்தியஸ்ரீ கூறியதாவது:-

நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து படிப்பின் மீது அதிக நாட்டம் கொண்டு படித்து வருகிறேன். எனது அப்பா குமார், அம்மா லட்சுமிதேவி ஆகியோர் கூலி வேலை செய்து என்னை படிக்க வைத்து வருகிறார்கள். எனது அக்கா காவியா புதுச்சேரி மதர் தெரேசா கல்லூரியில் பி.எஸ்.சி எம்.எல்.டி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். எனது தம்பி நிரஞ்சன் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் என எனது பெற்றோர்கள் கேட்டுக் கொண்டனர். அதனால் இரவு பகல் பாராமல் ஆசிரியர்களுடைய வழிகாட்டுதல்படி நன்கு படித்து இந்த பொது தேர்வினை எழுதினேன். மாநில அளவில் எஸ் எஸ் எல் சி பொதுத்தேர்வில் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளதை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் இந்த மதிப்பெண்கள் பெற பள்ளியின் துணை முதல்வர் விவேக் நடராஜன் மற்றும் பள்ளிக்கல்வி குழுவின் தலைவர் சத்யா நடராஜன் மற்றும் ஆசிரியர்கள் எனக்கு கொடுத்த ஊக்குவிப்புதான் காரணம். கலெக்டர் ஆவதே எனது லட்சியமாகக் கொண்டுள்ளேன். எனது குடும்பத்தாரையும், என்னை சார்ந்தவர்களையும் வறுமையில் இருந்து மீட்டெடுத்து அவர்களை மேம்படுத்த நான் தொடர்ந்து படிப்பேன். கிராமப்புறங்களில் என்னை போன்ற ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் நான் செயல்படுவேன் என்றார்.

Tags:    

Similar News