புதுச்சேரி

தமிழ்தாய் வாழ்த்தை வைத்தும் அரசியல் நடக்கிறது- கவர்னர் தமிழிசை ஆதங்கம்

Published On 2023-04-30 04:53 GMT   |   Update On 2023-04-30 04:54 GMT
  • எந்த அரசியலும் இல்லாமல் இங்கு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை உணர்வுபூர்வமாக பாடுகிறோம்.
  • 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கலைமாமணி விருது வழங்கும் விழாவை அரசு நடத்துகிறது.

புதுச்சேரி:

புதுவை அரசு - கலை, பண்பாட்டுத்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 133-வது பிறந்த நாள் விழா மற்றும் புதுவை கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை பாவேந்தர் பாரதிதாசன் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கலைமாமணி விருது வழங்கும் விழாவை அரசு நடத்துகிறது. தமிழ் உணர்வு தான் பாரதிதாசனின் உயிராக இருந்துள்ளது. அதனால்தான் பாரதியின் நண்பனாக அவர் இருந்தார்.

தமிழகத்தின் தெருக்களில் தமிழ் தான் இல்லை என பல ஆண்டுகளுக்கு முன்பே பாரதிதாசன் பாடியுள்ளார்.

புதுவையில் கூட தமிழை நாம் இன்னும் விளையாட வைக்க வேண்டும். பலகைகள் எல்லாம் தமிழில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வியாபாரிகளிடமும் அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும். பாரதிதாசனின் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலிப்பது புதுவையில் மட்டும்தான்.

இன்று தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடக்கிறது. ஆனால் எந்த அரசியலும் இல்லாமல் இங்கு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை உணர்வுபூர்வமாக பாடுகிறோம். பாரதிதாசனுக்கு புதுவை பெருமை சேர்க்கிறது.

இவ்வாறு தமிழிசை பேசினார்.

Tags:    

Similar News