புதுச்சேரி

லேகா - மோகனா

புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்: கடலில் குளித்த அக்காள், தங்கை உள்பட 4 பேர் மாயம்

Published On 2024-01-01 03:14 GMT   |   Update On 2024-01-01 03:14 GMT
  • புத்தாண்டு கொண்டாட மகள்களை அழைத்துக்கொண்டு நேற்று பகல் 12 மணியளவில் மீனாட்சி கடற்கரைக்கு வந்தார்.
  • கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி மோகனா, லேகா, நவீன், கிஷோர் ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மீனாட்சி. இந்த தம்பதியின் மகள்கள் மோகனா (வயது 17), லேகா (15). புதுவையில் உள்ள அரசு பள்ளியில் இவர்கள் 12 மற்றும் 10-ம் வகுப்பு படித்தனர்.

புத்தாண்டு கொண்டாட மகள்களை அழைத்துக்கொண்டு நேற்று பகல் 12 மணியளவில் மீனாட்சி கடற்கரைக்கு வந்தார். ஏற்கனவே அங்கு மோகனா, லேகா ஆகியோரது நண்பர்களான கதிர்காமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் நவீன் (16), நடேசன் நகரை சேர்ந்த கேட்டரிங் மாணவர் கிஷோர் (17) ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் 4 பேரும் டூப்ளக்ஸ் சிலை அருகே கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர்.

அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி மோகனா, லேகா, நவீன், கிஷோர் ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப்பார்த்ததும் கரையில் இருந்து மீனாட்சி அதிர்ச்சியடைந்து 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என கூக்குரலிட்டு கதறினார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மீனவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து கடலில் இறங்கி அக்காள், தங்கை உள்பட 4 பேரையும் தேடினார்கள். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், கடலோர காவல்படை, தீயணைப்புத்துறையினர் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீனவர்களுடன் படகில் கடலுக்குள் சென்று மாயமான 4 பேரையும் தேடினர். மேலும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான படகில் சென்று கடலோர காவல்படை போலீசாரும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் தற்காலிகமாக தேடும் பணி கைவிடப்பட்டது.

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட அக்காள்-தங்கை உள்பட 4 பேரின் கதி என்ன? என்பது தெரியாதநிலையில் இதுபற்றிய தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு பதறிப்போன அவர்கள் கடற்கரைக்கு வந்து அழுது புரண்டனர். இந்த காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

Tags:    

Similar News