காரைக்காலில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி சஸ்பெண்டு
- மகேஷ்குமார் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் பாலியல் ரீதியான தொந்தரவுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
- புகாரின் மீது புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவன திட்ட அதிகாரி ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்து மகேஷ்குமாரை சஸ்பெண்டு செய்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திட்ட இணைப்பு ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்து வருபவர் மகேஷ்குமார்.
இவர் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் பாலியல் ரீதியான தொந்தரவுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மகேஷ்குமாரின் தொல்லையால் பெண் ஊழியர் ஒருவர் மயக்கமடைந்து காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இது தொடர்பாக அலுவலகத்தில் பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் குலோத்துங்களை சந்தித்து மகேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர்.
இந்த புகாரின் மீது புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவன திட்ட அதிகாரி ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்து மகேஷ்குமாரை சஸ்பெண்டு செய்துள்ளார். காரைக்கால் வட்டார வளர்ச்சி அதிகாரி வழங்கிய உண்மை அறிக்கையின் அடிப்படையில் திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக உத்தரவில் கூறியுள்ளார்.