புதுச்சேரி

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கைகள் கட்டப்பட்டுள்ளது- எம்.எல்.ஏ.வின் ஆதங்க பேச்சால் பரபரப்பு

Published On 2024-01-14 06:02 GMT   |   Update On 2024-01-14 06:02 GMT
  • நாட்டை பா.ஜனதா ஆட்சி செய்வதுபோல புதுவையிலும் பா.ஜனதா ஆட்சியை உருவாக்க வேண்டும்.
  • 50 ஆண்டாக காங்கிரஸ், தி.மு.க. ஆட்சிதான் புதுவையில் நடந்து வந்தது.

புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதா தலைவராக செல்வகணபதி எம்.பி. சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து மாநில அளவில் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். புதிய பா.ஜனதா மகளிரணி நிர்வாகிகள் பதவியேற்பு விழா கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில தலைவர் செல்வ கணபதி எம்.பி. தலைமை வகித்தார்.

விழாவில் காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசியதாவது:-

2026-ல் புதுவை மாநிலத்தில் தனித்து பா.ஜனதா ஆட்சி அமையும். தற்போது கூட்டணி ஆட்சி நடத்துகிறோம். என்ஆர்.காங்கிரசில் 10 எம்.எல்.ஏ. 6 பா.ஜனதா எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டோம்.

முக்கிய துறைகள் எதுவும் பா.ஜனதா வசம் இல்லை. மக்களுக்கு பணியாற்றும் சுகாதாரம், சமூகநலத்துறை, உள்ளாட்சி, பொதுப்பணி போன்ற துறைகள் பா.ஜனதாவிடம் இல்லை. நாம் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கும், தொகுதிக்கும் தேவையான உதவிகளை செய்ய முடியவில்லை. எங்கள் கைகள் கட்டப் பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் முதலமைச்சரோடு சண்டை போடுகிறோம். நாம் மாற்றத்தை கொண்டு வர கடுமையாக உழைக்க வேண்டும். நாம் நிரந்தரமான ஆட்சியை உருவாக்க வேண்டும்.

நாட்டை பா.ஜனதா ஆட்சி செய்வதுபோல புதுவையிலும் பா.ஜனதா ஆட்சியை உருவாக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் பா.ஜனதா தனித்து ஆட்சிக்கு வர வேண்டும். இதைப்பற்றி அமைச்சர்கள் பேச முடியாது, ஆனால் எம்.எல்.ஏ.க்களாகிய நாங்கள் பேசுவோம். பல ஆண்டாக புதுவை காங்கிரஸ் கோட்டையாக இருந்தது.

50 ஆண்டாக காங்கிரஸ், தி.மு.க. ஆட்சிதான் புதுவையில் நடந்து வந்தது. அதன்பின் என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை நாங்கள் உருவாக்கினோம். அந்த கட்சியிலிருந்து நாங்கள் பிரிந்து நாட்டை ஆளும் சக்தி பா.ஜனதா வுக்குத்தான் உள்ளது என தெரிந்து அதில் சேர்ந்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News