புதுச்சேரி

கோப்பு படம்.

சிறையில் அடைக்கப்பட்ட வாலிபரிடம் செல்போன் பறிமுதல்

Published On 2023-05-10 13:47 IST   |   Update On 2023-05-10 13:47:00 IST
  • காலாப்பட்டு சிறையில் பரபரப்பு
  • காவலர்கள் சோதனை நடத்தியதில் ரிப்பட் காமில் தங்கியிருந்த அறையின் கழிவறையில் செல்போன் இருந்ததை கண்டுபிடித்தனர்.

புதுச்சேரி:

காரைக்காலை சேர்ந்த ஹாஜா நிஜாமுதீன் மகன் ரிப்பட்காமில், இவர் காரைக்காலில் உள்ள வங்கிகள் மற்றும் அடமானக் கடைகளில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடமானம் வைத்தது தொடர்பாக இவர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

காரைக்கால் மட்டுமல்லாது நாகை, கும்பகோணம் பகுதிகளிலும் இதுபோன்று போலி நகைகளை அடமானம் வைத்து மோசடிகள் ஈடுபட்டது தெரிய வந்தது. காரைக்காலில் நடந்த மோசடி தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இன்ஸ்பெக்டர் மீதும் ஒரு பெண் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ரிப்பட் காமில் மற்றும் சம்பந்தப்பட்ட பெண்ணை சி.பி.சி.ஐ.டி போலீசார் இருவரையும் கைது செய்து காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஜாமீனில் வெளியே சென்றார். இந்த நகை மோசடி வழக்கில் ரிப்பட் காமில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை.

அவர் காலப்பட்டு மத்திய சிறைச்சாலை விசாரணை கைதிகள் அறையில் உள்ளார்.

இந்நிலையில் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தால் கைது செய்யப்பட்டு ஆயுத வழக்கில் காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட குட்டி சிவா என்ற சிவா மூலம் ரிப்பட் காமில் சிறையின் அறையில் செல்போன் பயன்படுத்தி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் சிறைத்துறை சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் சிறை காவலர்கள் சோதனை நடத்தியதில் ரிப்பட் காமில் தங்கியிருந்த அறையின் கழிவறையில் செல்போன் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து சிறைத்துறை சூப்பிரண்டு பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் ரிப்பட் காமில், குட்டி சிவா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News