புதுச்சேரி

புதுவை கடற்கரை சாலையில் தெருவிளக்கு வெளிச்சத்தில் படிக்கும் சிறுவன்

Published On 2023-08-03 08:57 GMT   |   Update On 2023-08-03 08:57 GMT
  • தனது தாயார் பொம்மைகள் விற்று குடும்பம் நடத்தி வருகிறார். எங்களுக்கு என்று வீடு இல்லை.
  • நான் அரசு பள்ளியில் படிக்கிறேன். பள்ளி நேரம் போக எனது தாயாருக்கு உதவியாக இருக்கிறேன்.

புதுச்சேரி:

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் குறித்து பலரும் அறிவார்கள். அவர் தனது 4 வயது முதல் குடும்ப சூழ்நிலை காரணமாக பல கஷ்டங்களை அனுபவித்து முன்னுக்கு வந்தவர்.

அவர் தனது படிக்கும் காலத்தில் தெரு விளக்கு வெளிச்சத்தில் தனது பள்ளி பாடத்தை கற்றார். முயற்சி திருவினையாக்கும் என்பது போல பல கஷ்டங்களை அனுபவித்த அவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களில் தலைசிறந்த அதிபர் என புகழப்பட்டார்.

அதேபோலவே நமது இந்தியாவிலும் சட்டமேதை என்று அழைக்கப்படும் அம்பேத்கர் மின்சாரம் இல்லாத காலத்தில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தனது பள்ளி மற்றும் கல்லூரி பாடங்களை படித்தார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்கு சென்ற முதல் இந்தியர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றி அமைக்கக்கூடிய அளவிற்கு மிகவும் வல்லமை வாய்ந்த தலைவராக திகழ்ந்தார்.

இதே போல நமது புதுவையிலும் தற்போது ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. புதுவை கடற்கரை சாலையில் குடும்ப கஷ்டம் காரணமாக இருப்பதற்கு வீடு கூட இல்லாமல் தெருவில் உள்ள மின்விளக்கின் வெளிச்சத்தில் சிறுவன் தனது பள்ளி பாடத்தை படித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுக்கு உறுதுணையாக அவனது தாயும் அருகிலேயே படுத்துக் கொண்டிருக்கிறார். இதனை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்து வியந்து செல்கிறார்கள். இதுகுறித்து அந்த சிறுவனிடம் கேட்டபோது, தனது தாயார் பொம்மைகள் விற்று குடும்பம் நடத்தி வருகிறார். எங்களுக்கு என்று வீடு இல்லை. தெரு ஓரத்தில் தங்கியிருக்கிறோம். நான் அரசு பள்ளியில் படிக்கிறேன். பள்ளி நேரம் போக எனது தாயாருக்கு உதவியாக இருக்கிறேன்.

அதே வேளையில் படிப்பிலும் எனக்கு அதிகம் விருப்பம் உண்டு. மாலை வேளையில் தெரு விளக்கு வெளிச்சத்திலேயே பள்ளி பாடத்தை படித்து வருகிறேன்.

ஆனால் இதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. இதற்காக நான் யாரிடமும் உதவியும் கேட்கவில்லை.

Tags:    

Similar News