செய்திகள்
யுவராஜ் சிங் ரிஷப் பந்த்

ரிஷப் பந்த் அவுட்டான முறை குறித்து பீட்டர்சன் விமர்சனம்: யுவராஜ் பதில்

Published On 2019-07-11 12:35 GMT   |   Update On 2019-07-11 12:35 GMT
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தேவையில்லாமல் ஷாட் ஆடி ஆட்டமிழந்த ரிஷப் பந்தை பீட்டர்சன் விமர்சித்திருந்தார். அதற்கு யுவராஜ் பதில் அளித்துள்ளார்.
அரையிறுதிப் போட்டியில் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 5 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

விராட் கோலி ஆட்டமிழந்ததும் 4-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் பொறுமையாக விளையாடினார். 56 பந்தில் 32 ரன்கள் சேர்த்த ரிஷப் பந்த் தேவையில்லாமல் சான்ட்னெர் பந்தை டீப் மிட்வெக்கெட் திசையில் அடித்து ஆட்டமிழந்தார்.

ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் கோபம் அடைந்தனர். கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ரிஷப் பந்த் இப்படி அவுட்டாவதை நான் எத்தனை முறை பார்த்திக்கிறோம்?. முக்கியமான விஷயம் என்னவெனில், தொடக்கத்தில் இருந்தே அதற்கு தயாராகவில்லை. பரிதாபத்திற்குரியது’’ என பதிவிட்டிருந்தார்.



அதற்கு பதில் அளித்த யுவராஜ் சிங் ‘‘ரிஷப் பந்த் 8 ஒருநாள் போட்டிகளில்தான் விளையாடியுள்ளார். இது அவரது தவறு அல்ல. அவர் பாடம் கற்றுக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை பெறுவார். இதுவொன்றும் பரிதாபத்திற்கு உரியதல்ல. எனினும் நாம் எல்லோருக்கும் கருத்துக்களை பரிமாற உரிமை உள்ளது’’ என்று டுவீட் செய்துள்ளார்.
Tags:    

Similar News