செய்திகள்
விக்கெட் வீழ்த்திய மாரிசை பாராட்டும் சக வீரர்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட் - இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா வெற்றி

Published On 2019-06-28 22:20 IST   |   Update On 2019-06-28 22:20:00 IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் டு பிளசிஸ், ஆம்லாவின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.
செஸ்டர் லி ஸ்ட்ரீட்:

இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 35-வது லீக் ஆட்டம் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட் ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ்  பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே, குசால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் பந்திலேயே கருணாரத்னே ஆட்டமிழந்தார். அடுத்து குசால் பெரேரா உடன் அவிஷ்கா பெர்னாண்டோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பெர்னாண்டோ 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குசால் மெண்டிஸ் 23 ரன்களும், மேத்யூஸ் 11 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 24 ரன்களும், ஜீவன் மெண்டிஸ் 18 ரன்களும், திசாரா பேரேரா 21 ரன்களும் அடிக்க இலங்கை 49.3 ஓவரில் 203 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் கிறிஸ் மோரிஸ், பிரிட்டோரியஸ் தலா 3 விக்கெட்டுக்களும், ரபாடா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. 

தொடக்க வீரர்கள் அம்லா மற்றும் குயின்டான் டி காக் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். குயின்டான் டி காக் 15 ரன்களில் மலிங்கா பந்து வீச்சில் அவுட் ஆனார்.



அவரை தொடர்ந்து அம்லாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் அதிரடி ரன் வேட்டையில் ஈடுபட்டார். இதனால் அணியின் ரன் மளமளவென உயர்ந்தது. இரு வீரர்களும் சிறப்பாக ஆடி அரைசதம் அடிந்தனர். 

இறுதி வரை ஆட்டம் இழக்காமல் கேப்டன்  பாப் டு பிளிஸ்சிஸ் 96  ரன்களுடனும் அம்லா 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி 37.2 ஒவர்களில் 204 ரன்கள் என்ற இலக்கை அடைந்து வென்றது. இதன்மூலம் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

தென்ஆப்பிரிக்கா அணி உடனான தோல்வியால், உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் இலங்கை அணியின் கனவு தகர்ந்தது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு இது இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.  

Similar News