செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் - வெஸ்ட் இண்டீசை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

Published On 2019-06-27 22:17 IST   |   Update On 2019-06-27 22:17:00 IST
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ரோகித் சர்மா 18 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 48 ரன்னிலும், விஜய் சங்கர் (14), கேதர் ஜாதவ் (7) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அரைசதம் அடித்த விராட் கோலி 82 பந்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் எம்.எஸ்.டோனி நிதானமாக விளையாடினாலும், மறுமுனையில் ஹர்திக் பாண்டியா 38 பந்தில் 46 ரன்கள் சேர்க்க இந்தியா 250 ரன்னைத் தாண்டியது.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் சேர்த்துள்ளது. டோனி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமர் ரோச் 3 விக்கெட்டும், காட்ரெல் மற்றும் ஹோல்டர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.



இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. முதலில் இருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினர்.

அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் அம்ப்ரிஸ் 31 ரன்னும், நிகோலஸ் பூரன் 28 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், பும்ரா, சஹல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Similar News